மாஸ்கோ, ஜூலை 30–
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 522 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இன்று அதிகாலை 3 உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. எஞ்சிய 2 டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டன.
தடுக்கப்பட்ட டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது மோதின. இதில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையம் மூடப்பட்டது. உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்று கூறியுள்ளது.