இலங்கை அதிபர் அநுர அரசு அறிவிப்பு
கொழும்பு, நவ. 26–
விடுதலைப் புலிகள் அமைப்பினர், ஆண்டுதோறும் ஈழ விடுதலைக்கு பாடுபட்டு உயிர் நீத்தவர்களின் நினைவாக, மாவீரர்கள் நாள் கடைபிடித்து வருவதை, இலங்கை அரசு இதுவரை தடுத்து வந்த நிலையில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அநுர திசநாயக்க அரசு, மாவீரர்கள் நாள் கடைபிடிக்க தடை இல்லை என்று அறிவித்துள்ளார்.
“தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை கடைபிடிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும். நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.”- இவ்வாறு, இலங்கை புதிய அதிபர் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான புதிய அரசு தெரிவித்துள்ளது.
மாவீரர்கள் நாளுக்கு தடையில்லை
இந்தப் புதிய அரசின் கடல் தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது,
“மாவீரர் தினத்தை தமிழ் மக்கள் இம்முறை எந்தவிதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் கடைபிடிக்க முடியும். அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்கும் மக்களை ஒளிப்படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை கடைபிடிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு இலங்கை அரசு தடை எதுவும் போடாது என்று கூறியுள்ளார்.