செய்திகள்

மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வழங்கிய ஒரே அரசு அம்மாவின் அரசு

நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு கூட்டம்

மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வழங்கிய ஒரே அரசு அம்மாவின் அரசு

கொரோனா நோய் தடுப்பில் நாமக்கல் முதன்மை மாவட்டம்

நாமக்கல், ஆக.22–

மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வழங்கிய ஒரே அரசு அம்மாவின் அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பேசியதாவது:–

நாமக்கல் மாவட்டம் லாரி தொழிலுக்குப் பெயர் பெற்ற மாவட்டம். அதோடு ரிக் போர்வெல் தொழிலில் அதிகமாக ஈடுபடுகிற மாவட்டம். தமிழகத்தில் முட்டை உற்பத்தியில் முன்னோடியாக விளங்குகின்ற மாவட்டம். ஜவ்வரிசி உற்பத்தி செய்கின்ற நிறுவனங்கள் அதிகமாக உள்ள மாவட்டம். வேளாண் பெருமக்கள் நிறைந்த பகுதியாகவும் நாமக்கல் மாவட்டம் உள்ளது. இவ்வாறு, நாமக்கல் மாவட்டம் அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்கக்கூடிய, வளர்ந்த மாவட்டமாக இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

இவை அனைத்தையும்விட கல்வியிலும் முதன்மையான மாவட்டமாக அதிக அளவில் பள்ளிகளையும், கல்லூரிகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் தொழிற்கல்வியில் சேரக்கூடிய மாணவர்களை உருவாக்குகின்ற மாவட்டமாக விளங்குகிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாமக்கல் மாவட்டத்தில்தான் இன்றையதினம் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகின்றது.

நோய் தடுப்பில் முதன்மை மாவட்டம்

கொரோனா வைரஸ் தொற்று நோய், உலகளவில் மக்களை அச்சுறுத்தி, இந்தியாவிலும் தமிழகத்திலும் பரவி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. அதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அம்மாவின் அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. லாரி மற்றும் ரிக் தொழில் மேற்கொள்பவர்கள், நாமக்கல் மாவட்டத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்தாலும்கூட, மாவட்ட நிர்வாகமும், மருத்துவத் துறையும், உள்ளாட்சித் துறையும், வருவாய்த் துறையும், தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு, நோய் அறிகுறி தென்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தி, சரியான முறையில் நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக இந்த மாவட்டம் நோய்த்தொற்று தடுப்பில் முதன்மை மாவட்டமாக விளங்குவது பெருமைக்கு உரியதாகும்.

இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு அம்மாவின் அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்நோய் தொற்றுப் பரவல் ஆரம்பத்தில் சற்று அதிகமாக இருந்தாலும், தற்போது மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் இம்மாவட்டத்தில் படிப்படியாகக் குறைய தொடங்கியுள்ளது.

வீடுதோறும் பரிசோதனை

மாவட்ட நிர்வாகம் அதிகளவில் காய்ச்சல் முகாம்களை நடத்தியும், தொற்றால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவமனை மூலம் பரிசோதனைகள் செய்தும், நோய் தொற்று அறிகுறி தென்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளித்தும் குணமடையச் செய்துள்ளார்கள். இவ்வாறு வீடுகள்தோறும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும்போது, நோய்ப் பரவல் தடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த நோய்த் தடுப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அம்மாவின் அரசு செய்து கொடுத்துள்ளது. தேவையான அளவு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும், நம்முடைய மருத்துவர்கள் கபசுரக்குடிநீர், ஜிங்க், விட்டமின் மாத்திரைகள் போன்றவற்றை நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி குணமடைய செய்யும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள்.

தினசரி 68 ஆயிரம் பரிசோதனை

அரசைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்கள் மன நிறைவு பெறுகின்ற வகையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், பரிசோதனை நிலையங்களும் அதிகமாக உள்ளன. தமிழ்நாடு முழுவதும், நாள் ஒன்றுக்கு சுமார் 68 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், இந்நோய் பரவல் தமிழகத்தில் பெருமளவில் தடுக்கப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, நாள் ஒன்றுக்கு சுமார் 68 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் சுமார் 6 ஆயிரம் நபர்களுக்கு கீழ்தான் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

இவ்வாறு இந்நோய்ப் பரவல் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு அரசு எடுக்கும் கடும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் ஒத்துழைப்பு தேவை

பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான், இந்நோய்ப் பரவலைத் தடுக்கமுடியும். ஏற்கனவே ஊடகம் மற்றும் பத்திரிகைகள் வாயிலாகவும், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, உள்ளாட்சித் துறை ஆகியோர் ஒலிபெருக்கி மூலமாக வீதிவீதியாக அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று ஏற்படுத்திய விழிப்புணர்வை பொதுமக்கள் கடைபிடித்தால்தான், இந்நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.

பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும், வெளியில் சென்று வீடு திரும்பும்பொழுது கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். வீட்டிலுள்ள கழிப்பறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வீதிகளில் இருக்கும் பொதுக்கழிப்பறைகள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். இதுவரை இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காத சூழ்நிலையில், இப்படி அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றினால்தான் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்பதை மக்கள் உணரவேண்டும்.

தமிழக அரசு நாமக்கல் மாவட்டத்திற்கு அதிகத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதில், சில திட்டப்பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன. சில பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாவட்டத்தில் பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் குடிநீர் வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில், நாமக்கல் நகரத்திற்கான குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில மாதங்களில் அப்பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். காவேரியிலிருந்து பாதுகாக்கப்பட்ட தண்ணீர் திருச்செங்கோட்டிற்கும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கொண்டு வருவதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பள்ளிப்பாளையத்திலும் குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ராசிபுரம் பகுதியில் இருக்கும் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது.

சாலை விரிவாக்கம்

காவேரி ஆற்றின் குறுக்கே ஈரோட்டையும், பள்ளிப்பாளையத்தையும் இணைக்கும் வகையில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தினை நானே நேரடியாக வந்து திறந்து வைத்தேன். எஸ்.பி.பி. காலனி ரெயில்வே கீழ்ப்பாலம், ரெயில்வே உயர்மட்டப் பாலமாக கட்டப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திற்கு அதிகமான சாலை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில், பரமத்திவேலூரிலிருந்து திருச்செங்கோடு வரை பிரம்மாண்டமான வகையில் சாலை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். அதேபோல, திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக உருவாக்கித் தந்திருக்கிறோம். திருச்செங்கோட்டிலிருந்து ராசிபுரம் வரையிலும், அங்கிருந்து மல்லிக்கரை வரையுள்ள சாலையையும், நாமக்கல்லிலிருந்து மோகனூர் வரையுள்ள சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளன. திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரி வழியாக ஓமலூர் வரையுள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருச்செங்கோட்டிலிருந்து பள்ளிப்பாளையம் வழியாக ஈரோடு செல்கின்ற சாலையையும் புதிதாக அமைக்க இருக்கின்றோம். அங்கு கூட குறுகலாக இருக்கும் இடங்களில் உயர்மட்டப்பாலம் வேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், சுமார் 3.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்மட்டப் பாலமும் அந்த சாலையில் அமைக்கப்படுகிறது.

புறவழி சாலை

அதேபோல, பேப்பர் மில்லுக்கு செல்கின்ற ரெயில்வே கடவின் குறுக்கே ஒரு கீழ்ப்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாமக்கல்லிலிருந்து முசிறி வரையுள்ள சாலையையும், நாமக்கல்லிலிருந்து சேந்தமங்கலம் வரை சாலையையும் விரிவாக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், நகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாமக்கல்லில் புறவழிச் சாலை அமைக்கின்ற பணியும் தொடங்க இருக்கின்றது.

திருச்செங்கோடு நகரத்தில் புறவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் எடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராசிபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க ஏற்கனவே ஒரு பகுதியில் நிலம் எடுக்கப் பட்டிருக்கிறது. மீண்டும் கூடுதலாக புறவழிச் சாலை அமைக்க நிலம் எடுக்கின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு சட்டக் கல்லூரியை உருவாக்கித் தந்ததும் அம்மாவின் அரசு தான். மலைவாழ் மக்கள் நிறைந்த சேந்தமங்கலம் பகுதியில் அங்குள்ள மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டு, அதற்கான கட்டடங்களையும் நானே திறந்து வைத்தேன். இவ்வளவு பணிகள் இந்த மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ரூ.250 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்

மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் மற்றும் பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 724 குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020–-2021–ம் ஆண்டில் 46 ஊராட்சிகளில் 146 குக்கிராமங்களுக்கு ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குத் தேவையான கடனுதவிகள் லழங்கப்பட்டிருக்கின்றன. வேளாண்மைத் திட்டத்தைப் பொறுத்தவரை, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூபாய் 141 கோடி இழப்பீடாகவும், நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகளில் ரூபாய் 107 கோடி மானியமாகவும் இந்த மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2020–-21ஆம் ஆண்டிற்கு சுமார் ரூபாய் 78 கோடி நுண்ணீர் பாசன திட்டப் பணிகளுக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

1648 குடிசை மாற்று வாரிய வீடுகள்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,648 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூ.133.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் நகராட்சிகளில் 1,052 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூபாய் 92.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி கற்பதற்கு ஏதுவாக பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மூன்றாண்டுகளில் மட்டும் 8 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 2 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் இந்த மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கியமாக, நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை அறிவித்த அம்மாவின் அரசு, அதற்கான கட்டடங்கள் கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்திற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் வழங்கிய ஒரே அரசு அம்மாவின் அரசுதான் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *