சிறுகதை

மாலை- ராஜா செல்லமுத்து

வேல்முருகன் தன் கழுத்தில் கிடந்த மாலையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தான்.

அழுக்கேறிய உடை, எண்ணெய் படியாத தலை,என்று அவனை பார்ப்வர்களுக்கு வியப்பாக இருந்தது.

நடைபாதையில் நடந்து காெண்டும், தன் கழுத்தில் கிடந்த ரோஜாப் பூ மாலையை தொட்டுப் பார்த்துக் கொண்டும் ஏக சந்தோசத்தில் இருந்தான் வேல்முருகன்.

என்ன சாப்பிடதற்கு ஏதாவது இருக்கா? என்று அங்கு இருந்த நடைபாதை வியாபாரியிடம் கேட்டான்.

அவன் நடவடிக்கையும் பேச்சையும் சற்றும் எதிர்பார்க்காத அந்த கடைக்காரர் மற்றும் அந்த நடைபாதை கடையைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களுக்கு ஒரு பக்கம் பயமாகவும் இன்னொரு பக்கம் வேடிக்கையாக இருந்தது .

ஏன் இந்த மனிதன் இப்படி கழுத்தில் மாலையை தொங்கவிட்டபடி அலைகிறான்? இவனுக்கு பைத்தியமா? இல்லை மனநிலை சரியில்லாதவனா ?இல்லை எதற்காக இந்த வேஷம்? என்று அவர்களுக்குள்ளாக பேசிக் கொண்டார்கள்.

அந்த ரோசாப்பூ மாலையை போட்டு கொண்டு சாப்பிட ஏதாவது கொடு என்று கேட்ட பாேது அந்தக் கடைக்காரன்,

வேல்முருகனை முறைத்தபடியே இப்ப போறயா அடி வாங்குறியா? என்று சொல்லவும் அப்போதுதான் மற்றவர்களுக்கு விளங்கியது வேல்முருகன் மனநிலை சரியில்லாதவன் என்று ,

சும்மா தேவையில்லாம வந்து பிரச்சனை கிளம்பிட்டு இருக்காத, வியாபார நேரத்துல அந்த பக்கம் போயா என்று வேல்முருகனைத் திட்டினான் கடைக்காரன்.

இந்த நேரத்திற்கு எல்லாம் கழுத்தில் கிடந்த மாலையை பத்து முறைக்கு மேலே சரி செய்து சரி செய்து கொண்டிருந்தான்.

அவனை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் .

எதுக்காக இவன் கழுத்தில் மாலையை போட்டு இருக்கிறான் ? இந்த மாலை எங்கிருந்து கிடைத்தது என்று அந்த வீதியில் வருபவர்கள் எல்லாம் அவனை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த மாலையை கழுத்தில் தொங்கு விட்டுக் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டு இருந்தான் வேல்முருகன்.

சிலர் சிரித்தார்கள். சிலர் வருத்தப்பட்டார்கள்

இந்த மாலை இவனக்கு எங்கிருந்து கிடைத்திருக்கும்? என்று ஒருவர் கேட்க,

இப்பதான் ஒரு பிண ஊர்வலம் போச்சு .அதுல தூக்கி எறிஞ்ச மால தான் இது. தூக்கி கழுத்துல போட்டுவிட்டு இப்படி அலைகிறான். பாவம் பைத்தியம் . அதனாலதான் அவனுக்கு இது என்னன்னு தெரியல என்று அந்த இடத்திலிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

அந்த வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தவர்களிடம் பேச முயன்றான்,அவர்கள் இவன் குளத்தை பார்த்து ஓடினார்கள்.

ஒரு முதியவரை வம்பிழுத்தான். அவர் அவனை திட்டியபடியே சென்றார்.

இவனுக்கு இதே வேலையா போச்சு. தெனமும் ஏதாவது வில்லங்கமான வேலை செஞ்சிட்டு இருக்கான். இவன எல்லாம் வெளியே நடமாட விட்டது தப்பு என்று அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

அந்த மாலையை கழுத்தில் போட்டவன் அந்தப் பகுதி முழுவதும் சுற்றிக்கொண்டே இருந்தான். ஓரிடத்தில் அமர்ந்தான் .

தன் பாக்கெட்டில் கைவிட்டு பீடி எடுத்து பற்றவைத்து அதை இழுக்க ஆரம்பித்தான்.

ஆன மட்டும் புகையை இழுத்து, அந்த புகையை வாயில் அடைத்துக் கொண்டு மெல்ல மெல்ல வெளியே விட்டான்.

ஆனால் கழுத்தில் இருந்த மாலையை மட்டும் அவன் தூக்கி எறியவில்லை.

அவனுக்கு அந்த மாலை போட்டு இருப்பது மிகவும் ஆனந்தமாக இருந்தது .

அங்கே கிடந்த சுவராேரம் சாத்தி வைக்கப்பட்ட கண்ணாடியில் அந்த மாலையோடு தன்னை பார்த்துக்கொண்டான். சிரித்துக் கொண்டான் .

அவனுக்கு ஏக சந்தோசம். அந்தர் தெரு வழியாகச் சென்று கொண்டு இருந்தவரிடம்

என்ன ஒரு போட்டோ எடுங்க ; என்னை ஒரு போட்டோ எடுங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.

ஆனாலும் அவர்கள் யாரும் அவனுடைய குரலுக்கு செவி சாய்க்கவில்லை.

லூசு பய என்று அவனைத் திட்டிக் கொண்டே அவனை கடந்து சென்றார்கள் .

இப்படியாக காலையிலிருந்து இரவு வரை அலைந்தவன், தான் எப்போது படுக்கும் அந்த வீதியின் ஓரத்தில் மாலையுடன் படுத்தான்.

மறுநாள் காலை அவன் எழுந்திருக்கவில்லை .

அந்த தெரு வழியாக போனவர்கள் இவன் படுத்திருப்பதை பார்த்து

என்ன இவன் இன்னும் எந்திரிக்கலையா ?என்று பேசிக்கொண்டு சென்றார்கள் .

ஆனால் அவன் எழுந்திருக்கவே இல்லை.

துப்புரவு பணியாளர் ஒருவர் அங்கே துப்புரவு செய்து கொண்டிருந்த போதும் அவன் எழுந்திருக்கவில்லை.

நகராட்சி ஆபீஸிலிருந்து ஆட்கள் வந்து அவனைத் தொட்டு பார்த்தார்கள் .அவன் கை காலெல்லாம் விறைத்துப் போய் இறந்து கிடந்தான் .

அவனை வண்டியில் ஏற்றினார்கள். அவன் கழுத்தில் கிடந்த மாலை மட்டும் அப்படியே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *