சிறுகதை

மாலாவின் கேள்வி – தருமபுரி சி.சுரேஷ்

மாலா ஒரு சமூக நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தவள்.

சிறுவயது முதல் கொண்டு அவளுக்கு சமூகப்பணி ஆற்ற வேண்டும் என்கிற ஒரு வாஞ்சை இருந்தது.

பலமுறை அன்னை தெரசாவின் புத்தகங்களை புரட்டி படித்ததின் விளைவு என்று கூட சொல்லலாம்.

ஒரு வெளிநாட்டு அம்மா இந்நாட்டு மக்கள் மீது கரிசனையும் அன்பும் கொண்டு தான் வாழ்ந்த இடத்தை விட்டு தன்னுடன் இருந்த மனிதர்களை விட்டு தன்னுடைய பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், உணவு முறைகள் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்க்கையை இந்திய மக்களுக்கு அர்ப்பணித்த அன்னை தெரசாவின் வாழ்வு அவளை நெகிழச் செய்தது.

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது. மற்றவர்களுடைய துன்பங்களில் துயரங்களிலே பங்கு கொண்டு அதை நீக்க முயற்சிப்பதுமே மன மகிழ்ச்சி ஆகும் என்பதை ஆணித்தரமாக தன் மனதில் கொண்டிருந்தாள்.

சிறுவயதிலே பள்ளிப் பருவத்திலே தன்னுடன் படிக்கும் பிள்ளைகளுக்கு தன்னிடம் இருக்கும் உணவைப் பகிர்ந்து தருவாள்

பேனா, பென்சில், நோட்டு என எல்லாவற்றிலுமே இல்லாத பிள்ளைகளுக்கு கொடுத்து உதவுவாள்.

தனக்கு மிஞ்சியது தான் தான தர்மம் என அம்மா எத்தனை தடவை சொன்னாலும் அவள் காதில் போட்டுக் கொள்வதில்லை.

மரம், செடி, கொடி எல்லாம் மக்களை மகிழ்விக்க, மக்கள் உயிரோடு காக்க காற்றைத் தருகிறது, மலரை தருகிறது, கனியைத் தருகிறது, காயைத் தருகிறது தன் வாழ்க்கையைப் பயனுள்ளதாய் கொள்கிறது

அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து தன் சந்ததிகளையும் மனிதர்களுக்கு ஆதரவாய் பாதுகாப்பாய் இருக்க வைத்து விட்டு மரிக்கிறது

அப்படி இருக்க இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட நான் இந்த மக்களுக்கு நன்மை செய்கிறவளாக எங்கும் சுற்றித் திரிய வேண்டும்

என் காலடி எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் சமாதானம் பிறக்க வேண்டும், துக்கம் நீக்கப்பட வேண்டும், துயரம் இல்லாமல் போக வேண்டும்.

எனக்குள் இருந்து கடவுளின் ஆசீர்வாதம் யாவருக்குள்ளும் கடந்து செல்ல வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என அடிக்கடி அவள் தன் நண்பர்களிடம் சொல்வதுண்டு.

தனக்காய் சுயநலமாய் இந்த பூமியில் வாழ்கிறவர்களை சரித்திரம் மறந்து விடுகிறது.

பிறருக்காய் வாழ்பவர்களை சரித்திரம் தன் ஞாபகப் பதிவேட்டில் பதித்துக் கொள்கிறது.

அது பின்வரும் சந்ததிகளுக்கு ஞாபகம் மூட்டுகிறது.

பேரும் புகழுக்காக நல்லது செய்ய வேண்டும் என்பது அவள் லட்சியம் அல்ல நன்மை செய்வதினால் அவள் மனதுக்குள் சொல்ல முடியாத ஒர் ஆத்ம திருப்தியை உணர்வதாலேயே அவள் செய்ய வேண்டும் என விரும்புகிறாள்.

ஒருவரின் வாழ்வு இன்னொருவரின் வாழ்வை உயர்த்த வேண்டும் ; அது நல்ல பாதிப்பாக இருக்க வேண்டும்.

அன்னை தெரசாவின் வாழ்வு அவளுக்கு நல்ல ஒரு பாதிப்பை உண்டாக்கியது.

இன்று அவள் பணி செய்யும் அந்த சமூக நிறுவனத்தின் மூலம் எத்தனையோ குடும்பங்கள் இருள் வாழ்க்கையில் இருந்து பிரகாசமுள்ள வாழ்க்கைக்கு வந்திருக்கிறது .

அனேக பிள்ளைகளுக்கு படிப்பு மற்ற எல்லா வசதிகளும் அந்த நிறுவனத்தின் மூலம் செய்து கொடுத்ததில் இன்று உயர்ந்த ஸ்தானத்தில் அப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அனேகர் மருத்துவராக வக்கீலாக ஆசிரியராக பல இடங்களில் பணியாற்றி வருகிறார்கள் .

நாடு நலம் பெற வேண்டுமென்றால் சமூகப் பணி அவசியமானது. இன்றோ அப்பணி வேறொரு சமூகத்தால் முடக்கப்பட்டிருக்கிறது .

சமயத்தின் பேரில் இந்த சமூகப் பணிகள் நடக்கிறது என பிள்ளைகளுக்கு வரும் நன்மைகளை தடை செய்து நிறுவனங்களுக்கு சீல் வைத்துவிட்டது .

சரி நிறுவனங்களுக்கு சீல் வைத்தால் பரவாயில்லை. தொடர்ந்து அப்பணியை ஏன் நாடு எடுத்துச் செய்யக்கூடாது ? அதுவும் செய்வதில்லை; செய்பவர்களையும் செய்ய விடுவதில்லை.

ஒரு சமயத்தை சார்ந்தவர்கள் செய்ய நாட்டுமக்கள் தடை விதித்தால் இன்னொரு சமயத்தினர் ஏன் எடுத்து செய்யக்கூடாது?

ஆக நாட்டுமக்களின் நோக்கம் தான் என்ன எனப் புரியாத புதிராய் மூடப்பட்ட நிலையில் பல சமூக நிறுவனங்கள் காணப்படுகிறது.

மாலா நொந்துப்போன மன நிலையில் நன்மை செய்யக் கூடவா இந்த நாட்டில் தடை

சமயம் பேரில் தேவையுள்ளவர்களின் தேவைகள் சந்திக்கப்படாமல் போவது எந்த விதத்தில் நியாயம் ?

யார் இதைக் கேட்பது இதற்கு எங்கே பதில் கிடைக்கப் போகிறது கண்கலங்கினாள்.

தனக்குள்ளாய் பேசிக்கொண்டாள் அன்னை தெரசாக்கள் இந்த நாட்டில் இனி எழும்ப நாட்டுமக்கள் ஒத்துழைப்பார்களா?

கேள்விக்குறியோடு தன் படுக்கைக்கு சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published.