சிறுகதை

மாற்றுவழியில் செல்க- ராஜா செல்லமுத்து

சென்னைக்குப் புதிதாக வந்த விமலன் வேலை கிடைக்காததால் இந்தச் சென்னை அவனுக்கு பிரமிப்பாக இருந்தது.

உயர்ந்த கட்டிடங்கள் வேக வேகமாகச் செல்லும் வாகனங்கள் அவனுக்கு எல்லாமே புதிதாக இருந்தன.

அவன் படித்த படிப்புக்குச் சரியாக வேலை கிடைக்கவில்லை. அதனால் கிடைத்த வேலையைச் செய்ய முற்பட்டான்.

அப்படியே அவனுக்குக் கிடைக்கும் வேலை – ஒரு தனியார் உணவு விடுதியில் உணவு சப்ளை செய்வது.

அவன் மிகுந்த ஆர்வமாகவும் சந்தோசத்துடன் மகிழ்ச்சியுடன் அதை செய்தான்.

அந்த உணவு கூடத்தில் இருந்து தினமும் ஒரு குடும்பத்திற்கு காலை மதியம் இரவு என்று மூன்று நேரமும் உணவு கொடுக்க வேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள். பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களால் வேலைக்காரர்களையும் வைத்துக் கொள்வதற்கு பயம்.

அதனால் தினமும் அந்த உணவு விடுதியில் இருந்து, காலை, மதியம் இரவு என்று உணவு போகும் தினமும் ஒரே சாலையில் பயணித்து அவர்கள் வீட்டை அடைந்து விமலன் வழக்கம் போல உணவு எடுத்துக்கொண்டு வந்தான்.

ஒரு நாள் வழக்கம் பாேல் வயதான தம்பதிகளுக்கு உணவு கொடுக்கப் போகும்போது அங்கே மெட்ரோ ரயில் வேலை நடந்து கொண்டு இருந்தது.

சரியான நேரத்திற்கு அவன் செல்ல முடியவில்லை .

இடையில் மழை வேறு. அங்கங்கு தண்ணீர், சகதி என்று இருந்தது.

அவனால் தினந்தோறும் செல்லும் வழியிலிருந்து மாற்று பாதையில் செல்ல முடியவில்லை .

அதுவும் குறுகலான பாதையில் எல்லா வாகனங்களும் செல்வதால் அவன் குறிப்பிட்ட நேரத்தில் அந்த வயதான தம்பதிகளுக்கு உணவைக் கொண்டு போய் கொடுக்க முடியவில்லை.

உடனே உணவு விடுதிக்கு போன் பண்ணினான்.

சார் என்னால அங்க அந்த வயதான தம்பதிகளுக்கு உணவு கொண்டு போக முடியல. எல்லாமே சகதியா இருக்கு .அதுவும் மழை நேரம் . என்னால போக முடியல சார் என்று சொல்ல

அந்த உணவு விடுதிக்காரர்

‘‘பெரியவங்க என்ன செய்வாங்க? ’’ என்று நினைத்தவர் இருமனதாக அவர்களுக்கு போன் செய்து

‘‘ஐயா இன்னைக்கு உங்களுக்கு உணவு கொடுக்க முடியாது. மெட்ராே பாதை போடுறதுனால பிரச்சனை ஏற்பட்டிருக்கு. அதனால நீங்க வேற ஏற்பாடு பண்ண முடியுமா?’’ என்று சொன்ன போது

சரிஇன்னைக்கு தோசை சாப்பிட்டுருக்கிறோம் என்றார் அந்த பெரியவர் .

மறுநாள் வழக்கம்போல் காலை உணவை கொடுக்க செல்லும்போது

அந்த பெரியவரே உணவு விடுதிக்கு போன் பண்ணி இருந்தார் .

இல்லங்க, இனிமேல் சாப்பாடு வேண்டாம். நாங்க சொல்லும்போது குடுத்தா போதும் என்ற அந்த பெரியவர் சொன்னார்.

எதற்கு வேண்டாம் என்று அந்த உணவு விடுதிக்காரர் கேட்க

இல்ல நாங்க சொல்றோம் என்றார் அந்த பெரியவர் .

ஏதோ நாம் தவறு செய்து விட்டோமோ? என்று நினைத்துக் கொண்டிருந்தார் அந்த உணவு விடுதிக்காரர்.

ஆனால் மறுநாள் காலை அந்த பெரியவர் இறந்து போயிருந்தார்.

தகவல் உணவு விடுதி காரருக்கும் விமலனுக்கும் எட்டி இருந்தது. வருத்தப்பட்டு கொண்டார்கள்.

ஒரு நாள் அந்த உணவை கொடுத்திருந்தால் அவர் சாப்பிட்டிருப்பாரோ? மறுநாள் உணவு வேண்டாம் என்று நம்மிடம் சொல்லி இருக்க மாட்டார்

என்ன நினைத்தாரோ தெரியவில்லை? அவர் சொன்னதற்கும் அவருடைய இறப்பிற்கும் சரியாக இருக்கிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.

கடைசியாக அவர் பேசிய வார்த்தை இனிமேல் உணவு வேண்டாம் என்பதுதான் என்று சொன்னார் அவரின் மனைவி.

ஒருவேளை விமலன் அந்த உணவை கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

விமலன் அந்த ஈரமான தண்ணீர் தேங்கிய இடத்தை கடந்து சிரமப்பட்டு ,அந்த இரவு உணவை கொண்டு போய் அந்த வயதான தம்பதி கொடுத்து விடுகிறான்.

தம்பி ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தீங்க ? சொல்லியிருந்தா நாங்களே இரவு உணவு தயாரித்திருப்போமே? என்றார் அந்த பெரியவர்.

நீ தினமும் சாப்பாடு கொண்டு வர்ர அர்ப்பணிப்பு எனக்கு பிடிச்சிருக்கு என்றார் அந்தப் பெரியவர் .

அந்த இரவு வேளையில் அவருக்கு சாப்பாட்டை கொடுத்துவிடு திரும்பும்போது அந்த பெரியவருக்கு லேசாக உடம்பு சரியில்லாமல் போனது .

உடனே விமலன் அந்தப் பெரியவரை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான்.

அங்கே அந்தப் பெரியோரை பரிசோதித்த டாக்டர்

நல்ல வேளை சீக்கிரமாக கொண்டு வந்தீங்க. இல்லன்னா இந்தப் பெரியவர் மரணித்திருக்க கூடும் என்று சொன்னபோது

அந்த பெரியவரும் அவரது மனைவியும் கையெடுத்து கும்பிட்டாார்கள்.

தம்பி, கடவுள் மாதிரி வந்து காப்பாத்திட்ட, இல்லன்னா பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று சொன்ன தம்பதிகளை கையெடுத்து கும்பிட்டான் விமலன்.

இப்போது இரண்டு விஷயங்களை தன் மனதில் ஓட்டிப் பார்த்த விமலன்

ஒருவேளை நாம் போய் இருந்தால் அந்த பெரியோரை காப்பாற்றி இருக்கலாம்?

போகாமல் விட்டதுதான் தவறாகிப் போய்விட்டது.அது நம் தப்பு என்று நினைத்தான்.

Leave a Reply

Your email address will not be published.