செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருது

சென்னை, டிச. 4–

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருதுகளை அமைச்சர் சரோஜா வழங்கினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை பின்பற்றி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினமாக” தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா “அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தை” முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரின் விளையாட்டுப் போட்டிகளை, அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விளையாட்டரங்கத்தில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் வி. சரோஜா மைதானத்திற்கு சென்று கொடியேற்றி, பலூன்கள் மற்றும் புறாக்கள் ஆகியவற்றை பறக்க விட்டு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். மைதானத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களை பாராட்டியும் பின்பு அவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கினார்.

ரூ.50 ஆயிரம் நன்கொடை

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடைய உணவு செலவிற்கு தன்னுடைய சொந்த பணத்திலிருந்து நன்கொடையாக ரூ. 50 ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தது மட்டுமல்லாமல் அந்த பணத்தை உடனே மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடம் வழங்கினார். கருணை உள்ளத்துடன் அமைச்சர் சரோஜா வழங்கிய நன்கொடை தொகைக்காக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலாளர் விஜயராஜ்குமார் விழாவிற்கு தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ப. மகேஸ்வரி வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சிம்ம சந்திரன், மற்றும் அமர் சேவா சங்கம் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு அன்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சரோஜா பரிசுகளை வழங்கி பேசினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலாளர் விஜயராஜ்குமார் விழாவிற்கு தலைமை தாங்கினார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ப. மகேஸ்வரி வரவேற்று பேசினார். இணை இயக்குநர் ராஜையா நன்றி கூறினார்.

அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கத்தில், நடைபெற்ற விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருதுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சரோஜா வழங்கினார். ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *