சிறுகதை

மாற்றம் | ராஜா செல்லமுத்து

எதிர்மறை எண்ணங்கள் சிவாவுக்கு எப்போதும் நிறைந்தே இருக்கும்.

அவன் பேசும் பேச்சுக்கள் எதிர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொண்டே போகும். அவன் மட்டுமல்லாது அவனுடன் சேருபவர்களையும் எதிர்மறை எண்ணங்களுக்குக் கொண்டு போய்விடுவான்.

‘‘சிவா.. அது கண்டிப்பா.. நடக்காதா..?’’ என்று நண்பர்கள் கேட்டால்

‘‘ஆமா.. அது நிச்சயம் நடக்காது..’’ என்றே அடித்துச் சொல்வான்.

‘‘அப்ப.. அது பத்தி முயற்சி செய்ய வேண்டாம்.. அப்பிடித்தானே..’’ என்று கேட்டால்

‘‘அது உனக்கு ஒத்துவராது.. விட்டுரு வேண்டாம்..’’ என்று ஆணித்தரமாகவே சொல்வான்.

முடியும் என்ற விசயத்தைக் கூட சிவா முடக்கியே போட்டு விடுவான்.

அப்படி எதிர்மறை எண்ணங்களின் ஏணியாகவே இருந்தான் சிவா. சுலபமாக முடியும் வேலைகளைக் கூட அவனின் இயலாமைப் பேச்சு பெரிதாக்கிவிடும். இதனால் அவனுடன் பழகும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இல்லை. அவன் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்போரை மட்டுமே சேர்த்துக் கொண்டான். அவர்களுக்கும் சிவாவின் இயலாமைக் குணம் அப்படியே ஒட்டிக் கொண்டது. ஏதோ சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் சிவாவின் வாழ்க்கை ஏனோ கடைமையே என்று இருந்தது.

ஒரு நாள்…

அவனுக்குத் தெரிந்த ஒரு நபர் அவனை வீட்டுக்கு வரச் சொல்லியருந்தார். அவர் எப்பவும் வீட்டிற்குக் கூப்பிட்டதில்லை. ‘எதற்கு நம்மை வீட்டிற்குக் கூப்பிடுகிறார்..’ என்ற எண்ணம் சிவாவுக்குத் தலை தூக்கி நின்றது.

அந்தப் பெரியவரின் வீட்டிற்குப் போனான் சிவா..

‘‘ஐயா.. நான் சிவா வந்திருக்கேன்..’’ என்று வாசலில் நின்றவாறே கூப்பிட்டான்.

‘‘சிவாவா.. வா..வா.. வீட்டுக்குள்ள வா..’’ என்று வரவேற்றார் அந்தப் பெரியவர்.

‘‘ஒக்காரு சிவா..’’ என்று சோபாவைக் காட்டினார் அந்தப் பெரியவர். பஞ்சு போன்ற அந்த சோபாவில்‘‘பொதக்’’ என உட்கார்ந்தான் சிவா. அதில் உட்காருவது அவனுக்கு ரொம்பவே சுகமாக இருந்தது. இரண்டு பக்கமும் உள்ள கைப்பிடிகளைத் தொட்டுப் பார்த்தான் அதுவும் ரொம்பவே மிருதுவாக இருந்தது.

‘‘என்ன சிவா.. எப்பிடி இருக்க..?’’

‘‘இருக்கேன் சார்..’’ அவன் சொல்லும் போதே வார்த்தைகள் உள்ளே போய் வெளியே வந்தன

‘‘என்ன சிவா.. இந்த வயசில ரொம்பவே சோர்வா இருக்க..? நல்ல தெம்பா.. பதில் சொல்லணும். ரொம்பவே உற்சாகமா இருக்கணும்.. அதவிட்டுட்டு எப்பவும் ஒரு மாதிரி பேசிட்டு இருக்கக்கூடாது. சரியா..?’’ என்று அந்தப் பெரியவர் சொல்லத் தலையாட்டினான் சிவா. அதற்குள் பெரியவரின் மருமகள் சிவாவுக்குக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

‘‘சாப்பிடுங்க..’’ என்ற பெரியவர்

‘‘சிவா.. என் பையனுக்கு வெளியூர்ல டிரான்ஸ்பர் போட்டுருக்காங்க.. அதனால இந்த ஊரவிட்டு அடுத்த வாரம் நாங்க கிளம்புறோம்.. அதனால இங்க இருக்குற பொருள்களையெல்லாம் எடுத்திட்டு போக முடியாது.. எடுக்க வேண்டியதை எடுத்தி்ட்டு கொடுக்க வேண்டியதக் கொடுத்திட்டுப் போகப்போறோம்..’’ என்ற அநதப் பெரியவரை பார்த்தான் சிவா.

‘‘சிவா..’’

‘‘ஐயா.. சொல்லுங்க..’’ என்று ரொம்பவே பவ்யமாகப் பேசினான் சிவா

‘‘இப்ப நீங்க.. ஒக்காந்திருக்கீங்களே..! இந்த சோபா ரெண்டையும் வீட்டுக்கு எடுத்திட்டு போங்க.. ரொம்ப பெருசா இருக்கிறதால இதையெல்லாம் எடுத்திட்டு போக முடியாது.. சோபா ரெண்டையும் ஒங்க வீட்டுக்கு எடுத்திட்டு போங்க..’’ என்று பெரியவர் சொன்னதும் கொஞ்சம் தயங்கியவன்

‘‘சரி ஐயா..’’ என்றான்

பெரியவர் சொன்னவாறே அந்த வாரம் வீட்டிலிருந்த பொருள்களை எல்லாம் லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். இரண்டு சோபாக்களை தன் வீட்டிற்குத் தூக்கிவந்தான் சிவா. தன் வீட்டின் வரவேற்பறையில் இரண்டு சோபாக்களையும் போட்டான்

‘‘டேய் சிவா.. சோபா.. ரொம்ப அழகா.. இருக்கு ஆனா.. நம்ம வீட்டு சுவர் சரியில்லையே..’’ என்றாள் அம்மா

‘‘ஏன்மா.. என்னாச்சு..?’’

‘‘சோபா கலருக்கும்.. சுவத்து கலருக்கும்.. காம்பினேசன் சரியில்லடா..’’ என்றாள்

‘‘அதுக்கென்னம்மா.. பெயிண்ட மாத்தியடிச்சிருவோம்..’’ என்றான் சிவா

இரண்டொரு நாளில் வீட்டின் பெயிண்டை மாற்றியடித்தான்

‘‘சிவா..’’

‘‘என்னம்மா..’’

‘‘சோபா நல்லாயிருக்கு ஆனா.. ப்ளோர் அதான் தரையோட கா்பினேசன் சரியில்லையே..’’ என்றாள் அம்மா

‘‘என்னம்மா.. அப்பிடி சொல்ற..?’’

‘‘ஆமாடா.. நீயே பாரு.. சோபா ஒரு கலர்ல இருக்கு. தரை வேற ஒரு கலர்ல இருக்கு.. அதுனால தரைய மாத்துடா சிவா..’’உடனே தரையை மாற்றினான் சிவா

சில நாட்களுக்கு பிறகு…

‘‘சிவா..’’

‘‘என்னம்மா..’’

‘‘சுவர் தரை ரெண்டுமே நல்ல இருக்கு ஆனா.. இந்த சோபா இருக்கிற அழகுக்கு நம்ம வீடு ரொம்ப சின்னதுடா.. அதனால கொஞ்சம் பெரிய வீடா.. இருந்தா.. சோபாவ போட வசதியா இருக்கும்.. இத நான் சொல்லல.. நம்ம சொந்தக்காரங்க தான் சொன்னாங்க..’’ என்று சொன்னாள்.

பெரிய வீடு வாங்க யோசித்தான் சிவா. அவனின் எண்ணங்கள் இப்போது எதிர்மறைச் சிந்தனைகளைத் தூக்கி எறிந்தன. எதையும் நம்மால் செய்ய முடியும் என்ற எண்ணமே அவனுள் இப்போது தலைதூக்கி நின்றது. ஒன்று நம்மிடம் புதிதாக வரும் போது தான் நம்மிடம் இருக்கும் எதிர்மறைச் சிந்தனைகள் உடைகின்றன. சிவா அவன் மட்டுமல்ல அவனைச் சுற்றியிருப்பவர்களையும் இப்போது நேர்மறைச் சிந்தனைகளுக்குக் கூட்டிச்சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *