சிறுகதை

மாற்றம் யாரால்? – மு.வெ.சம்பத்

கதிரவன் அரசு அலுவலகத்தில் பெரிய அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார். அடிக்கடி தான் வாழ்ந்த கிராமம், தனது அக்கா, வாழ்ந்த வீடு, நிலம் இவற்றைப் பற்றியே பேசுவது தான் இவரது வாடிக்கை. இந்தப் பேச்சு நாளடைவில் அவர் மனைவி கவிதாவுக்கு எரிச்சலூட்டியதாக அமைந்தது.

தனது அக்காவிற்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படுவது கண்டு கதிரவன் மிகவும் வேதனையடைந்தார். அக்காவின் ஒரே பையன் நந்தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு விவசாயத்தைக் கவனித்து வருகிறான். சிறிய வயதில் குடும்பப் பொறுப்பை ஏற்ற நந்தனை நினைத்தால் கதிரவன் அவனைப் பற்றி பெருமையாகவே மனதில் நினைப்பார். உள்ளேயிருந்து என்னங்க என்ற குரல் வர, கதிரவன் சுய நினைவுக்கு வந்தார். தனது மனைவி நல்ல படிப்பு படித்தவள் புத்திசாலி என்றாலும் பணம், நகை, புடவை மற்றும் புகழ் பேய் அவளை சூழ்ந்திருப்பதை நினைத்து கதிரவன் வருந்துவார். தனது கிராமத்தை அவள் அடியோடு வெறுப்பது ஏன் என்று தெரியாமல் அடிக்கடி யோசனையில் ஆழ்ந்து விடுவார் கதிரவன். அவளது ஊர் கூட தனது கிராமத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம் தான்.

இதற்கிடையில் நந்தனுக்கு கவிதா அப்பா மூலம் திருமணம் ஏற்பாடாகி செவ்வனே நடந்தது. அந்த திருமண விழாவில் கவிதா தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு நகைகள் நிறைய அணிந்து கொண்டு தன்னை ஒரு பணக்காரியாக எல்லோரும் நினைக்க வேண்டுமென எண்ணம் கொண்டு வலம் வந்தாள்.

கவிதாவுக்கு திருமணத்தில் நல்ல மரியாதை கிடைத்ததால் எதுவும் கதிரவனிடம் சொல்லவில்லை என்றாலும் இவளது போக்கு கதிரவன் மனதில் ஒரு சஞ்சலைத்தையே ஏற்படுத்தியது. நந்தன் பையன் பெயர் சூட்டு விழாவிற்கு வந்த கவிதா சாதாரணமாகவே இருந்தது கண்டு கதிரவன் பெண்கள் மனதை புரிந்து கொள்வது கடினம் தான் என்று மனதிற்குள் நினைத்தார்.

பிறந்த வீட்டிற்கு இரண்டு நாள் சென்று வருகிறேன் என்று கூறிய கவிதாவை கதிரவன் அனுமதித்ததோடு மட்டுமல்லாமல் தானே அவளை கொண்டு போய் அவள் வீட்டில் விட்டு விட்டு வந்தார்.

நந்தன் பையனுக்கு நரேஷ் என்று பெயர் வையுங்கள் என்று கவிதா கூறியதும் அதை ஏக மனதாக ஏற்றுக் கொண்டு நந்தன் பையனுக்கு அந்தப் பெயரே சூட்டினார்கள்.

அன்று அலுவலகத்திற்கு கவிதாவின் அப்பா போன் செய்து கதிரவனிடம் ஒரு நல்ல செய்தி மிகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் மனைவி கருவுற்று இருக்கிறாள் என்றும் உங்களது அக்காவிற்கு விஷயம் கூறி விட்டேன் என்றும் கூறி விட்டு, உங்கள் அக்கா தற்போது தான் எங்கள் வீட்டில் நுழைகிறார்கள் என்றார்.

கதிரவன் அலுவலகத்திலிருந்து காரில் நேராகவே கவிதா வீட்டிற்கு வந்து கவிதாவிற்கு நன்றி செலுத்தினார்.

பிறந்த பெண்ணுக்கு நந்திதா என்று பெயர் சூட்டினார்கள். நந்திதா பள்ளி சென்று வர ஒரு கார் வேண்டுமென அடம் பிடித்து வாங்கினாள். என்னங்க, இன்று எனது அப்பா வருகிறார். சீக்கிரம் ஆபிஸிலிருந்து வந்து விடுங்கள். நகைக் கடைக்கு நகை வாங்கப் போகணும் என்று கூற, நகையா என்று ஆரம்பித்தவன் ஒன்றும் சொல்லாமல் மனதிற்குள் மாமனார் பாவம் என்றார்.

ஆனால் கதிரவனுக்கு தன் பணம் தான் போகப் போகிறது என்று பின்னால் தான் அறியப் போகிறார். பாவம் யாரோ. இரவு பத்து மணிக்கு வீடு திரும்பியதும் தனது மாமனாருடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர் உங்கள் அக்கா எப்படியிருக்காங்க என்று கேட்க, அவர்களுக்கு மிகவும் முடியவில்லையாம். நந்தன் கூட நேற்று தொலைபேசியில் கூறினான் என்றவுடன் மாப்பிள்ளை நான் சென்று பார்த்து விட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன் என்றதும் கவிதா உடனே எல்லோரும் சனிக்கிழமை சென்று அக்காவைப் பார்த்து விட்டு, பிறகு உங்களை ஊரில் இறக்கி விட்டு வருகிறோம் என்றதும் கதிரவன் கருமேகக் கூட்டங்கள் விலகி சூரியன் பளிச்சென்று வருவது போல் அவர் முகம் பிரகாசமானது.

சனிக்கிழமை காலை 10 மணிக்கு வாகனம் கிராமத்தில் நுழைய, கதிரவன் மனதில் பழைய நினைவுகள் படமெடுத்து ஆடியது. அக்காவுடன் கழித்த நாட்கள், பள்ளிப் பிராய சம்பவங்கள் அவரை சிறு பிராயத்திற்கே கொண்டு சென்றது. வாகனம் வீட்டை அடைந்ததும் கதிரவன் தன்னை சுதாரித்துக் கொண்டு வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு தெம்புடன் மண் வாசனையை நுகர்ந்து கொண்டு உள்ளே நுழைந்தார். நந்தன், அவன் மனைவி மற்றும் அவன் பையன் நரேஷ் வாசலில் வந்து எல்லோரையும் முக மலர்ச்சியுடன் வரவேற்றனர்.

அறையில் படுத்திருந்த அக்காவைக் கண்டதும் கதிரவன் மனம் சங்கடப்பட்டது.

அக்கா ஒருவாறாக படுக்கையிலிருந்து எழுந்திருந்து வாங்க சம்பந்தி, தம்பி வா, கவிதா வா, நந்திதா என்னருகில் வாவெனக் கூறினாள்.

கதிரவன் உடம்பு தற்போது எப்படியுள்ளது , டாக்டர் என்ன சொன்னார் என்றதும் ஒன்றுமில்லை வயதாகி விட்டது தான் என்று வியாதியின் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் கதிரவனின் அக்கா.

கதிரவன் அக்கா, கவிதாவின் அப்பாவிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கவிதா, கதிரவனை அழைத்து பணம் எதுவும் தருகிறேன் என்று கூறி விடாதீர்கள் என்றதும் பதிலேதும் கூறாமல் மனதிற்குள் புழங்கினார் கதிரவன்.

நரேஷ் தற்போது இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கின்றான். நரேஷும் நந்திதாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட கதிரவன் அக்கா மிகவும் பூரித்துப் போனாள்.

கதிரவன் மாமனார் நந்தனைக் கூப்பிட்டு நந்தா, தோட்டத்திலிருந்து கீரை காய்கறிகள் கொண்டு வா, நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்கிறேன் என்று கூறியதும் நந்தன் அதற்குண்டான வேலையில் இறங்கினான். சாப்பாடு முடிந்ததும் நந்தன் தோட்டத்தில் விளைந்த இளம் கொழுந்து வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சகிதம் கொணர்ந்து வைத்தான். கவிதா அப்பா நன்றாக ரசித்து தாம்பூலம் தரித்தார்.

மதியம் மூன்று மணியளவில் கிளம்ப தயாரான கதிரவன் அக்காவிடம் புறப்படுகிறோம் என்றதும் அக்கா தனது கையில் உள்ள வளையல்களை கழற்றி நந்திதா கைகளில் போட்டு விட்டு, நீ அத்தை வீட்டிற்கு வந்ததற்கு அத்தையின் சீதனம் என்று தம்பி வைத்திய செலவுக்கு பணம் உள்ளது என்றதும் கவிதாவிற்கு தன்னை யாரோ சாட்டையால் அடித்தது போன்று உணர்ந்தாள்.

வாகனம் புறப்பட்டதும் கவிதா பேசாமல் வந்தாள். அவள் அப்பா வீட்டிலும் மிகவும் சாதாரணமாகவே நடந்து கொண்டாள். வீட்டிற்கு வந்ததும் எனக்கு அசதியாக உள்ளது என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி விட்டு தூங்கச் சென்றாள்.

இவளின் இந்த மாற்றத்திற்கு யார் காரணம் என கதிரவன் தனது பெண்ணைப் பார்த்துக் கேட்க, அவள் தெரியாதென சைகையில் கூறினாள்.

மறு நாள் அலுவலகத்தில் கதிரவனுக்கு ஒரு ஆர்டர் வந்தது. அதில் கதிரவன் ஆறு மாத காலம் வெளி நாட்டில் அரசு சார்பில் ஒரு பயிற்சிக்காக தேர்வாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வீட்டிற்கு வந்து கவிதாவுடன் சொன்னவுடன் அவள் மிகவும் மகிழ்வாள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவள் நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறி உள்ளே சென்றாள். கதிரவன் ஏதும் சொல்ல வார்த்தையின்றி வெளிநாடு செல்லும் காரியத்தில் இறங்கினார்.

பயிற்சி முடித்து திரும்பிய கதிரவனை வரவேற்க கவிதா, நந்திதா, கவிதாவின் அப்பா அம்மா, நந்தன் மற்றும் நரேஷ் வந்தது கண்டு கதிரவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். கதிரவனிடம், கவிதா அக்கா தற்போது நலமாக உள்ளார்கள் என்று நந்தன் கூறுவதற்கு முன் கூறியது கண்டு இந்த மாற்றம் எதனால் என்று எண்ணினார்.

மறு நாள் காலை சிற்றுண்டி முடிந்ததும் கவிதா மற்றும் எல்லோரும் கிராமம் நோக்கி புறப்பட வாகனம் வந்தது. கதிரவன் கிராமத்தில் வீட்டின் வாசலில் கார் நின்றதும் வீடு புதுப்பிக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஒரு நிமிடம் நிற்க அப்போது ஆரத்தி எடுத்துக் கொண்டு வந்த அக்கா புன்சிரிப்பை உதிர்த்து எல்லோரையும் வரவேற்றாள். வீட்டின் உள் பக்கங்களில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு வியந்தார் கதிரவன். அப்போது அங்கு வந்த நந்தன் மாமா இந்த மாற்றம் எல்லாம் என்று ஆரம்பிக்கும் போது கவிதாவின் அப்பா நந்தன் என்று அழைக்க, இதோ வருகிறேன் என்று கூறி நகர்ந்தான்.

அப்போது அக்கா அங்கு வர, கதிரவன் அக்கா என்ன இந்த மாற்றம் என்று கேட்க, அப்போது கவிதா, நந்தன், நரேஷ், நந்திதா, கவிதா அப்பா பேசிக் கொண்டிருப்பது கேட்டது. கவிதா அப்பா, நந்தனிடம் எல்லா விஷயமும் கதிரவனிடம் நானே கூறுகிறேன் என்றார். அதாவது கவிதா எடுத்த நடவடிக்கையான, தனது தோழியான டாக்டர் சவிதாவை அக்காவிற்கு வைத்தியம் பார்க்கச் சொன்னது,

நந்திதா மற்றும் நரேஷின் திட்டங்களால் வீடு புதுப்பிக்கப்பட்டது, நந்தன் முயற்சியால் நானும் எனது மனைவியும் தனியாக இருக்க வேண்டாமென என்னைக் கட்டாயப்படுத்தி இங்கு தங்க அறைகள் கட்டி ஏற்பாடு செய்தது, நந்தன் மனைவி ஒரு அங்காடி ஏற்படுத்தி தோட்டத்து விளைச்சலை விற்க ஏற்பாடு செய்தது,

நரேஷ் விருது விழாவிற்கு கவிதா செய்த ஏற்பாடுகள் என்று கூறி முடிக்கும் போது கதிரவன் அங்கு வர, மாற்றம் யாரால் என்று அறியாமல் தவித்தேன். இப்போது தெரிந்து கொண்டேன் என்று கூற, அக்கா கவிதா தன்னிடம் கூறியதைச் சொன்னாள்.

பணம், நகை, உயர்ந்த வாழ்க்கை தான் என்றிருந்தேன். ஆனால் இதெல்லாம் நிரந்தரமில்லை என்று உணர்ந்தேன். நாம் சம்பாதிப்பது தங்குவதில்லை. நாம் கட்டியது நிற்பதில்லை. ஆசை ஆனந்தம் தருகின்ற மாதிரி ஒரு மாயையைத் தான் ஏற்படுத்தும். துன்பம் மட்டுமே இறுதியில் மிஞ்சும். செய்யும் நல்ல காரியம், செலுத்தும் அன்பு, காட்டும் மனித நேயம், தேவைப்படும் நேரத்தில் உதவும் உதவி, சந்ததியினருக்கு நாம் கற்றுக் கொடுக்கும் உறவுப் பாடம், குடும்ப ஒற்றுமை இவைகள் தான் நமது பெயரை நிலைநிறுத்தும் என்று கவிதா கூறியதைக் கூறினாள். இப்போது மாற்றம் யாரால் என்று உணர்ந்திருப்பாய் என்று கூறினாள் அக்கா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *