இளமதி அதிர்ச்சி அடைந்தாள்.
நகர சூழல் பெண்களை முன்னேற்றியிருக்கும் என எண்ணியிருந்தவளுக்கு அது ஏமாற்றமாக இருந்தது.
புதிய பணிக்காக தன் சொந்த ஊரை விட்டு நகரத்திற்கு வந்தவள் இளமதி . அது அவளுக்கு வருத்தமாகத் தான் இருந்தது. இருப்பினும் தான் சிக்குண்டிருந்த சிற்றூர் சமூகச் சூழலிருந்து விடுதலை கிடைக்கப்போகும் எண்ணம் அவளுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது.
அவள் வளர்ந்தது ஒரு நல்ல சூழலை போல் பிறருக்கு தோன்றினாலும் இளமதிக்கு அது உண்மை இல்லையென்று தெரியும்.
பெண்ணாக பிறந்ததினால் அவளுக்கு என்னென்ன மறுக்கப்பட்டது என்பதன் பட்டியலை அவளின் மனதறியும்.
விளையாட செல்வதிலிருந்து மிதிவண்டி, நீச்சல் என ஒவ்வொன்றும் அவளுக்கு மறுக்கப்பட்டது. பார்ப்பதற்கு சிறியதாக தேன்றினாலும் அதன் இடையே மறைந்திருக்கும் அரசியல் ஆழமானது. இதைப்பற்றி இளமதி தனது தந்தையுடனோ தாயுடனோ பேச முற்பட்டால்,
‘‘எங்கயாவது விழுந்து கை கால் ஒடஞ்சு மூஞ்சியில் கோரை(காயம்) பட்டுச்சுனா என்ன பண்ணுறது..சொன்னாப் புரிஞ்சுக்கோ” என்று அவள் வாயை அடைத்துவிடுவார்கள். நம் நலனிற்காகத்தானே கூறுகிறார்கள் எனப் பிறர் நினைக்கக் கூடும். அதுவும் உண்மை தான்.. கோரைப் பட்டால் யார் இவளை திருமணம் செய்து கொள்வார்கள்…என்பார்கள்.
இதைக் கேட்டாலே இளமதிக்கு கோபம் உச்சிக்கு செல்லும்.
“ஆமா இவங்கள மாதிரி கல்யாணம் பண்ணிட்டு யார் எதச் செஞ்சாலும் பதில் பேசாம, அடிச்ச அடியை வாங்கிக்கிட்டு உதச்ச உதையைப் பட்டுக்கிட்டு இருக்கனும்னு நினைக்குறாங்க போல” என முணுமுணுத்துக்கொண்டே செல்வாள். அவ்வப்போது தனது தாய்க்கு கேட்கும்படியும் சொல்வாள். ஆனால் தந்தையிடமிருந்து சிறிது விலகியே நிற்பாள்.
அதற்கு அவர்மேல் இளமதி வைத்திருந்த பயம் தான் காரணம். எங்கே குடித்துவிட்டு தனது தாயை அடிப்பதுபோல் தன்னையும் அடித்துவிட்டால் என்ன செய்வது என்பதே அவள் பயம்.
நடப்பவையாவும் அவளுக்கு தெரியாததைப் போல் வெளியில் காட்டிக்கொண்டாலும் தனது தாயைப் பார்க்கும் போதெல்லாம் இளமதிக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். தன்னால் தன் தந்தையைத் தட்டிக்கேட்க முடியாததை எண்ணி அவளுக்கே அவள்மேல் கோபம் ஏற்படும்.
அவள் வாழ்ந்த பகுதியில் இவ்வாறு நடப்பது இயல்புதான். இருப்பினும் அவள் மனம் அதை ஒரு நாளும் ஏற்றுக்கொண்டதே இல்லை. தனது வாழ்க்கையும் இவ்வாறே இருந்து விட்டால் என்ன செய்வது என்னும் பயம் கலந்த உணர்வு இளமதிக்கு அதிகரிக்க தொடங்கியதோடு கோபமும் மேலோங்கியது.
வெறும் கோபத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று எண்ணிய இளமதி நங்கு படித்து நகரத்தில் ஒரு நல்ல வேலையையும் வாங்கிவிட்டாள்.
ஒருவழியாக விடாப்பிடியாக நின்று தன் எண்ணம்போல் வாழ்வினை வாழவும் தொடங்கிவிட்டாள்.
நகரங்களில் மக்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதில் வேகமாக செயல்படுவார்கள் என்பதால் பிற்போக்கு கருத்துக்கள் குறைவாக இருக்கும்; எனவே தன்னைப் போன்று தன்னிச்சையாக தனக்கே உரிய முற்போக்கான கருத்துக்களுடன் வாழ விரும்பும் பெண்களுக்கு நகரங்கள் தகுந்தவையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த இளமதிக்கு அன்று நடந்தது அதிர்ச்சியை கொடுத்தது.
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த இளமதி வேலைக்கு செல்லும் போது அங்கே நடந்த ஒரு நிகழ்வு அவளைச் சிந்திக்கவைத்தது.
முதல் மாடியில் ஒரு கணவன், மனைவி, கல்லூரி படிக்கும் மகனுடன் வசித்து வந்தனர். உடல் பருமனினால் பாதிக்கப்பட்டதால் நடப்பதற்கே கடினமான நிலையில் அந்த மனைவி தினமும் படியில் சிரமப்பட்டு இறங்கி அலுவலக வாகனத்தில் பணிக்கு செல்வதும் பின் வருவதும் பார்க்கும் யாவருக்கும் பாவமாகத்தான் இருக்கும். சிலவேளை அவரது கணவரின் உதவியுடன் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவார்; மற்ற நேரங்களில் அவர் கணவர் குடித்துவிட்டு ஆங்காங்கே விழுந்து கிடப்பார். அப்போதெல்லாம் கைத்தடியே அவருக்கு உதவி.
அன்றும் அப்படித்தான்.. அந்தப் பெண்ணின் கணவர் குடித்துவிட்டு போதையில் மாடிப்படி அருகில் விழுந்துகிடந்தார். அதைப் பார்த்துவிட்டு பார்க்காததைப்போல் இளமதியால் நகர்ந்து செல்ல முடியவில்லை. இளமதிக்கு அதைப் பார்த்ததும் அவளின் ஊர் நினைவு வந்துவிட்டது.
தன் ஊர் நினைவுகளை ஒதுக்கிவைத்தாள். அந்த பெண்மணியை அழைத்துவர முடிவெடுத்தாள்.
அந்தப் பெண்மணி ஒரு நல்ல நிறுவனத்தில் உயர் பதவியில் பணிபுரிவதாக குடியிருப்பில் இருக்கும் பிறர் கூறி இளமதி கேட்டிருக்கிறாள்.
அதுமட்டுமின்றி 15 வீடுகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பு வளாகத்தின் தலைமைப் பொறுப்பிலும் இருப்பதனாலோ என்னவோ கண்டிப்புடனே இருப்பாராம். சரியான அனுமதியின்றி குடியிருப்புக்குள் வருபவர்கள் இவரிடம் சிக்கிவிடால் அவ்வளவுதானாம்..ஒரு கை பார்த்துவிடுவாராம்.
இளமதி அந்தப் பெண்மணியின் குடிகார கணவனின் முகத்தை ஒருமுறை பார்த்தாள். கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் இவரைப் போன்றவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைத்தால் தான் திருந்துவார்கள் என்று அவளுக்கு தோன்றியது.
அதுமட்டுமின்றி இது நகரம். சமூகத்தில் முன்னோக்கி, அதுவும் அந்தப் பெண்மணி போல் கடின காலத்திலும் தன் சொந்தக் காலில் நிற்கும் பெண்கள் இந்தச் சூழலை எவ்வாறு கையாள்கிறார்கள் என தெரிந்துக்கொள்ள இளமதியின் இதயம் துடித்தது.
தயக்கத்தோடு அந்த பெண்மணியின் வீட்டின் கதவுகளைத் தட்டினாள். பொறுமையாக வந்து கதவுகளை திறந்த அந்த பெண்மணியிடம் அவரது கணவர் குடித்துவிட்டு கீழே விழுந்துக்கிடப்பதை கூறினாள் இளமதி.
“இந்த மனுசனால் இன்னும் என்னென்னவெல்லாம் நான் படப்போகிறேனோ தெரியவில்லையே” எனக் கடுகடுத்தக் குரலுடன் தன் தலையில் அடித்துக்கொண்டாள் அந்தப் பெண்மணி.
மெதுவாக மாடிப்படி இறங்கி தன் கைத்தடியால் கணவனை தட்டி எழுப்ப முயற்சித்தாள்.
இன்று அந்தக் கணவனுக்கு நாங்கு அடி, இரண்டு உதை விழுவது உறுதி என நினைத்துக்கொண்டிருந்த இளமதிக்கு “என்னங்க! எழுந்து உள்ள போய் படுங்க என்று கெஞ்சும் தொனியில் அந்தப் பெண்மணி கணவனை எழுப்ப முற்பட்டது இளமதிக்கு பேர் அதிர்ச்சி.
கணவனை துவைத்து தொங்கவிடப்போவது போல் வந்த அந்தப் பெண்மணி திடீரென தழுதழுத்த குரலில் கெஞ்சியதை இளமதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்த நொடி இளமதிக்கு நகரத்து பெண்களின் மீதிருந்த நம்பிக்கையை வேரோடு சரித்தது. தன் கிராமத்து பெண்களைவிட நகரத்து பெண்களின் வாழ்க்கை தெளிவானது என நினைத்துக்கொண்டிருந்த இளமதிக்கு நடைமுறை விளங்கியது.
அந்தப் பெண்மணியின் கணவன் தடுமாறி எழுந்து “அடச் சீ..வழிய மறிக்காம தள்ளிப்போ” என ஆதிக்கக் குரலில் கட்டளையிட்டார். அந்தப் பெண்மணியும் அடங்கி ஒடுங்கி அமைதியாக வழிவிட்டார்.
ஏமாற்றத்தையும் மீறி இளமதி அந்தப் பெண்மணியிடம் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா? எனக் கேட்டாள்.
அதற்கு “25 வருடமா என் வாழ்க்கை இப்படித்தானம்மா இருக்கு..எனக்கு பழகிடுச்சு…அப்பப்போ சண்டை போடுவேன்..அதுவும் இப்ப சலிச்சுப்போச்சு..” என அந்தப் பெண்மணி கூறியதைக் கேட்ட இளமதிக்கு உள்ளம் பிசைந்தது . ஒரு விதமான சோகம் அவளை ஆட்கொண்டது.
கல்வி கற்றாலும் சரி வேலைக்கு சென்றாலும் சரி கிராமமானலும் சரி நகரமானலும் சரி பெண்கள் படும் துன்பங்கள் ஏறத்தாழ ஒன்றாக இருப்பதை இளமதி உணர்ந்தாள்.
நகரத்துப் பெண்கள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில் வேறுபாடுகளும் முன்னேற்றங்களும் இருந்தாலும் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு வெகுதூரம் இருக்கின்றது என்பது அவளுக்கு புரிந்தது.
நகரம், கிராமம், ஆண், பெண் என்ற பாகுபாடுகளைத் தாண்டி, அனைவரும் எப்பொழுது மனிதர்களாக மாற்றத்தை தேடிச் செல்கிறார்களோ அன்று தான் அந்த சமூகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அந்த மாற்றத்திற்கான விதையாய் இளமதி தன் கைகளிலுள்ள பெரியார், அம்பேத்கர் புத்தகங்களை இறுகப்பற்றிக்கொண்டு புதிய நம்பிக்கையுடன் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினாள்.