சிறுகதை

மாறும் நிகழ்வுகள் – மு.வெ.சம்பத்

சின்னசாமி அரசுப் பள்ளியில் படித்து விட்டு மேற்படிப்புக்கு பக்கத்தில் உள்ள டவுனில் முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட் படித்து விட்டு தான் படித்த அரசுப் பள்ளியிலேயே வேலை கிடைத்ததும் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லையெனக் கூறலாம். பத்தாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பிற்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை மேற்கொண்டார். இவர் வந்ததிலிருந்து இந்தப் பள்ளியில் கணக்கில் மாணவர்கள் நிறையவே மதிப்பெண்கள் பெற்றனர். நூற்றுக்கு நூறு வாங்குபவர்கள் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்தது கண்டு தலைமையாசிரியர் மிகவும் மகிழ்வடைந்தார்.

பள்ளியின் தேர்ச்சி விகிதம் கண்டு இப்பள்ளிக்கு கல்வித் துறையிலிருந்து விருதுகள் வந்தாலும் மாணவர் சேர்க்கையில் எதிர்பார்த்த அளவு ஏற்றம் வரவில்லை.

சின்னசாமி பள்ளிக்கு வந்ததிலிருந்து மிகவும் உற்சாகமாக இருப்பார். ஒரு மாணவரையும் மிகவும் கடினமான வார்த்தை உபயோகித்துக் கோபித்துக் கொள்ள மாட்டார். கணக்குப் புரியவில்லை என்றால் நிதானமாக எத்தனை தடவைக் கேட்டாலும் முகம் சுழிக்காமல் புரியும் வரை சொல்லிக் கொடுப்பார். மாணவர்கள் மத்தியில் இவருக்கு நல்ல மரியாதை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. எல்லா மாணவர்களும் கணக்குப் பாடத்தில் நல்ல புரிதலைப் பெற்றனர்.

பள்ளி நேரம் முடிந்ததும் சின்னசாமியின் முகம் வாடிய மலர்கள் போன்று வதங்கி விடும். ஏனெனில் வீட்டிற்குச் சென்றால் கலாவின் நச்சரிப்பைத் தாங்க முடியாதென்பதாலும் அவளின் தேவைக்கேற்ப தன்னால் பணம் தர முடியதாதலும் கொள்ளி மேல் எறும்பு போல் தவிப்பார். எவ்வளவோ அவளிடம் கெஞ்சியும் அவள் இரண்டு பிள்ளைகளையும் தனியார் பள்ளியில் தான் சேர்த்தாள். எதற்கெடுத்தாலும் பணம் பிடுங்கிய பள்ளியினால் சின்னசாமி எல்லா லோன்களையும் போட வேண்டியதாயிற்று. மேலும் கலாவின் ஆடம்பர வாழ்வு ஆசையால் இருவருக்கும் இடையே இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

எப்படியோ நாட்களைத் தள்ளிய சின்னசாமியிடம் தலைமையாசிரியர் ஒரு அறிக்கையைக் காண்பித்தார். அதைப் படித்தவுடன் சின்னசாமி கதிரவனைக் கண்டு பூ மலர்வதைப் போன்று முகம் மகிழ்ச்சியால் திளைத்தார். அதாவது அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் மேல் படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு என்பது தான். தலைமையாசிரியர் நாம் எவ்வளவு மாணவர்கள் வந்தாலும் சேர்த்துக் கொள்ளத் தயாராக வேண்டும் என்றார். நமது பள்ளிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றார். சின்னசாமி அதை ஆமோதித்து விட்டு சில ஆசிரியர்கள் நியமனம் தவிர்க்க முடியாததெனக் கூற, தலைமையாசிரியர் அப்பொழுது மேலதிகாரிகளைப் பார்த்து விண்ணப்பம் வைப்போம் என்றார்.

இனிமேல் இங்கு நன்றாக உழைத்தால் தான் தனது வருமானம் உயரும்; பெயரும் நிற்கும் என்று நினைத்தார். வரும் மாணவர்கள் எப்படியிருப்பார்களோ என்ற பயமும் மனதில் தொற்றிக் கொண்டது. ஏனெனில் நடக்கும் சில நிகழ்வுகள் அவர் கண் முன் வந்து போனது. மாணவர்கள் மன நிலை நன்றாகவே மாறியிருப்பதை உணர்ந்து சற்று யோசனையில் ஆழ்ந்ததோடு மட்டுமல்லாமல், வருங்காலம் எப்படியிருக்கப் போகிறதோ என்று மனதில் எண்ணியவர், மாறும் நிகழ்வுகளுக்கு பிடித்தோ பிடிக்கலையோ நாம் மாறித்தானாக வேண்டுமெனக் கூறிக் கொண்டார்.

வீட்டிற்கு வந்த சின்னசாமியிடம் அவர் மனைவி கலா பேப்பரில் வந்த 7.5 சதவீதம் ஒதுக்கீடு பற்றிக் காண்பித்து வரும் வருடம் முதல் நம் பிள்ளைகளை உங்கள் பள்ளியில் சேர்த்து விடுங்கள். அரசு ஒதுக்கீட்டில் இருவரும் மருத்துவம் படிக்க வேண்டுமெனக் கூற மாறும் நிகழ்வுகளைக் கண்டு மறுபடியும் மனதில் புன்னகைத்தார். மறு நாள் தலைமையாசிரியரிடம் தனது பிள்ளைகளுக்கு இந்தப் பள்ளியில் அட்மிஷன் கோர அவர் உடனே சம்மதித்தார்.

நாட்கள் உருண்டு ஓட, சின்னசாமியின் இரு பிள்ளைகளும் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். பெரிய மகன் படித்து முடிக்கும் தருவாயில் இருந்த போது சின்னசாமி நாம் எதையும் கூறக் கூடாதென முடிவு செய்தார். இரண்டு பிள்ளைகளும் சிறிய லீவில் ஊரிலிருந்து வந்திருந்தார்கள்.

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது. பெரிய பையன் அப்பாவிடம் ‘அப்பா அரசாங்கம் நிறைய செலவு செய்து படிக்க உதவி செய்துள்ளது. அதனால் நான் எப்படியாவது யாரைப் பிடித்தாவது நமது ஊர் அரசு மருத்துவமனைக்கு போஸ்டிங் வாங்கி வந்து பணி செய்து அரசாங்கத்திற்கு நன்றியுடையவனாக நடப்பேன்’ என்றான்.

பிறகு சின்னப் பையன் ‘அரசாங்கம் நம்மிடம் வாங்கும் வரிப்பணத்தை வைத்துத் தான் நமக்கு செலவு செய்துள்ளது. நான் வெளிநாடு சென்று படிக்கப் போகிறேன். வங்கியில் லோன் போட்டு படித்து முடித்து பின் அதை நானே அடைத்து விடுவேன்’ என்றதும் கலா உனது முடிவே சரியெனச் சொன்னதும் சிறிய பிள்ளையின் முகத்தில் அரும்பிய புன்னகையைக் கண்டு மகிழ்ந்தாள்.

சின்னசாமி பெரிய பிள்ளையின் முடிவால் மகிழ்ந்து மாறும் நிகழ்வுகளுக்கு என்றுமே நாம் பொறுப்பல்ல, என்ன நடக்கும் என்பதை நாம் கணிக்க முடியாதென மனதில் கூறிக் கொண்டு உறங்கச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published.