நாடும் நடப்பும்

மாறி வரும் ஷாப்பிங் கலாச்சாரம், கவலையில் ஆடம்பர மால்கள்

பழமையும் புதுமையும் அல்லது பிறந்த வீடா? புகுந்த வீடா, அல்லது பணமா? பாசமா? போன்ற பல்வேறு சொற்தொடர்கள் விவாத மேடைகளில் பல முறை கையாளப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இனி கொரோனாவிற்கு முன்பு? பின்பு? என்பது வரத்தான் போகிறது!

கடந்த 15 மாதங்களாக பல ஆடம்பர மால்கள், திரையரங்குகள் எல்லாம் கொரோனா தொற்று அச்சம் நீங்கி நல்ல காலம் வரும் போது எப்படி செயல்படும்?

மக்களின் பேராதரவு கொண்டு மீண்டும் சிறப்பாகவே இயங்கும் என்று நம்பும் அதே நேரத்தில் கவலை தரும் அம்சமும் இருக்கிறது.

மால்களில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் அனைவரும் வாடகைக்கு கடையை எடுத்து நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஆவர்! குறைந்தபட்ச மின் கட்டணம், பாதுகாப்பு பணியாளர்களுக்கு சம்பளம் போன்ற பல்வேறு செலவுகளை பங்கிட்டு மூடப்பட்டிருக்கும் ஷாப்பிங் வளாக கடைக்காரர்களிடம் வாங்கினால் தானே மால் உரிமையாளர்களால் நடத்திட முடியும்.

ஆனால் 15 மாதங்களாக சாமானியன் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து பழகி விட்டதால், ஓய்வாக தள்ளுபடி விலையில் உயர்தர பொருட்களை எல்லாம் வாங்கி பழகி விட்ட நிலையில் மீண்டும் வாகன செலவு செய்து ஆடம்பரமாக ஷாப்பிங் செய்ய வருவானா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

மேலும் ஆன்லைனில் வாங்கும் பொருட்களை அளவு சரியில்லை என்றாலோ, ஏதேனும் காரணத்தால் பிடிக்காமல் போய்விட்டாலோ திருப்பி கொடுத்துவிடும் வசதி உண்டு!

ஆனால் வாங்கி வந்ததை ஷாப்பிங் வளாகத்திற்கு மீண்டும் வாகனத்தில் சென்று கொடுக்கும் போது வேண்டுமானால் வேறு பொருளை வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.

இப்படிப்பட்ட சவுகரியங்கள் ஆன்லைனில் முன்பே இருந்தது தான். ஆனால் நடுத்தர குடும்பங்கள் ஆன்லைன் பரிவர்த்தனை முதல் தரத்தை பார்க்காமல் வாங்குவது வரை எதையும் நம்பி வாங்க முடியாது திணறினர். இன்று அச்சந்தேகங்கள் குறைந்து விட்டது என்பது தான் உண்மை.

இந்நிலை சமீபமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பலரை அச்சுறுத்தி வருகிறது. ஊரடங்கு காரணமாக பிரிட்டனில் 70% ஷாப்பிங் மால்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. சில மால்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

மக்களிடையே பொருட்கள் வாங்கும் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதால் ஷாப்பிங் மால்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஷாப்பிங் மால்களில் உள்ள அத்தியாவசியமற்ற கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பிரிட்டனில் சுமார் 700 ஷாப்பிங் மால்கள் உள்ளன. இவற்றில் 10% முற்றிலுமாக மூடப்படும் சூழலில் உள்ளன. சில மால்கள் பகுதியளவில் குடியிருப்புகளாகவும் அலுவலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

30 மால்களில் தற்போது பாதியளவு காலியாக உள்ளன. 5 மால்களில் 80% கடைகள் காலியாகிவிட்டன. 34 மால்களில் 40 முதல் 50% வரையிலான கடைகள் தான் செயல்படுகின்றன.

நாட்டிங்ஹாம், கேஸில்கேட், ஸ்டாக்டன், ஷ்ரூஸ்பரியில் உள்ள ரிவர்சைடு சென்டர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஷாப்பிங் மால்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இத்துடன் ஹை வேஹோம்ப், மெய்டன் ஹெட் பகுதியில் உள்ள நிகோல்சன் பகுதிகளில் விரிவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஆக மாறிவரும் ஷாப்பிங் கலாச்சாரம் அங்கு புது மாற்றத்தை ஏற்று வருகிறது. அதை நம் நாட்டிலும் பல துறைகளில் பார்க்கத்தான் போகிறோம். மாற்றம் தானே நிரந்தரம், வர இருக்கும் மாற்றம் புதிய நன்மைகளையும் கொண்டுவரும் என்று எதிர்பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *