ஓடி வந்த வாகனங்கள் எல்லாம் நான்கு பக்கமும் சாலைகள் இருக்கும் சிக்னலில் நின்றன.
இடது புறம், வலது புறம், நேர், எதிர் என்று நான்கு திசைகளிலும் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.
நான்கு பக்க வாகனங்களுக்கும் நிமிடங்களைக் கொடுத்து ஒவ்வொன்றாக குறைந்து கொண்டிருந்தது சிக்கல்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில பேர் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். சில பேர் பேனா , பட்ஸ் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள் .
தன் இருசக்கர வாகனத்தில் இருந்த படியே தென்னவன் இது அத்தனையும் உற்று நோக்கி கொண்டிருந்தான்.
தென்னவனுக்கு முன்னால் நிறைய வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.
அவனுடைய கவனம் முழுவதும் 120 என்று இருந்த அந்த பல்ஸ் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டிருந்தது .
நிமிடங்கள் அதற்குள் இருக்கின்றன என்று அவனைச் சுற்றி அந்த சிக்னலில் நடக்கும் விஷயங்களை கவனித்துக் கொண்டிருந்தான்.
வயதான கிழவன், கிழவிகள் சிக்னல் நேரத்தைப் பயன்படுத்தி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு சிலர் கொடுத்தார்கள். ஒரு சிலர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். ஒரு சிலர் இன்னும் இந்த தொந்தரவு தீர்ந்தபாடில்ல. நீங்க எல்லாம் வேலைக்கு போக வேண்டியது தானே? என்று முகம் சுளித்தார்கள் .
இதையெல்லாம் கவனித்துக் கொண்டே தன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்தான் தென்னவன் .
அப்போது அவன் கண்ட காட்சி மனதைத் தொட்டது .சரியாக 10 வயது கூட பூர்த்தியாக அது ஒரு சிறுவன் கையில் பேனா, பட்ஸ் என்று வைத்துக்கொண்டு
சார் பேனா வாங்குங்க சார்…. வாங்க சார் என்று எல்லோரிடமும் விற்றுக் கொண்டிருந்தான்.
இப்போது நூற்றி இருபதில் இருந்த பல்ஸ் எழுவதாக குறைந்திருந்தது.
தென்னவனிடமிருந்து தூரத்தில் நின்று கொண்டிருந்த அந்தப் பையனை அருகில் கூப்பிட்டான் தென்னவன்.
தம்பி பேனா என்ன விலை? என்றபோது
ரெண்டு பேனா பத்து ரூபா சார் என்றான் பட்ஸ் விலை என்ன? என்று கேட்டபோது
20 ரூபாய் சார் என்றான் அந்தச் சிறுவன் .
கையில் இருந்த மொத்த பேனாவையும் வாங்கிய தென்னவன் பட்ஸ்ம் வாங்கினான்.
தம்பி நீ தினமும் இங்க வருவியா? என்று கேட்டான் தென்னவன்.
இல்ல சார் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு. வீட்ல சும்மா இருக்கிறேன்னு வந்தேன்.எனக்கு அப்பா இல்ல.அம்மா இருக்காங்க. வீட்டு வேலை செய்றாங்க .நான் படிக்கிறேன் சார். வீட்ல கஷ்டம். அதனால தான் இத விக்கிறேன் என்றபோது தென்னவனுக்கு என்னவோ போலானது .
தம்பி உன்னோட போன் நம்பர் சொல்ல முடியுமா? என்று தென்னவன் கேட்க
செல்போன் இல்ல சார் .பக்கத்து வீட்டுக்காரங்க நம்பர்ல தான் அம்மா பேசுவாங்க . அந்த நம்பர் எனக்கு தெரியல
என்று அந்தச சிறுவன் , தென்னவனுக்கு தர்ம சங்கடமாக பாேனது.
விளையும் பயிர் வீதியில் திரிவதைக் கண்டு மனம் வெதும்பினான்.
விளைச்சல் கண்டு அறுவடையாக போகும் முதியவர்கள் எல்லாம் யாசகம் கேட்டு அலைந்து கொண்டிருக்கையில் எதுவும் அறியாத இந்தச் சிறுவன் பிச்சை கேட்காமல் தன்னுடைய உழைப்பை நம்பி இருந்தது தென்னவனுக்கு பெருமையாக இருந்தது.
சார் ரொம்ப நன்றி
என்று சாெல்லிய சிறுவன் மறுபடியும் கையில் மீதம் இருந்ததை விற்க ஆயத்தமானான் .
அங்குமிங்கும் பிச்சை கேட்டு அலைந்து கொண்டிருந்த முதியவர்கள் தென்னவனிடம் வந்தார்கள்.
அந்தச் சிறுவனிடம் வாங்கி வைத்திருந்த பேனா பட்ஸை அந்த பெரியவர் கையில் கொடுத்து
இத வச்சிக்கங்க. யாருகிட்டயும் பிச்சை கேட்கிறது அவமானம். உழச்சி சாப்பிடணும். உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது .ஆனா இந்த பூமி உங்கள அசிங்கமா பாக்கும்.அதனால இத வித்து சாப்பிடுங்க. மேற்கொண்டு ஏதாவது வியாபாரம் செய்யணும்னா, என்னோட நம்பர எழுதிக்கோங்க .உங்களுக்கு உதவி செய்றேன் என்று அந்தப் பெரியவர்களிடம் தன் செல்போன் நம்பரை கொடுத்து விட்டு திரும்பிய போது பல்ஸ் o வைத் தொட்டு நின்றது. சிவப்பு விளக்கு பச்சை விளக்கானது.
சுற்றி இருந்த வாகனங்கள் பறந்தன. அதுவரையில் தென்னவன் செய்து கொண்டிருந்த விஷயங்களை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள் அவருடன் நின்றிருந்த வாகன ஓட்டிகள் .
யாரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
நாட்கள் நகர்ந்தன.வழக்கம் போல தினமும் அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தான் தென்னவன்
அன்று ஞாயிறு. மறுபடியும் அந்தச் சிக்னல் . அந்தச் சிறுவனை தேடினான் தென்னவன் சிறுவன் தென்படவில்லை .
எங்கே போய் இருப்பான்? இங்கேதானே பேனா வித்துக்கிட்டு இருப்பானே? ஒவ்வொரு வாரமும் வருவேன்னு சொன்னானே? ஆளக் காணமே? என்று சற்று முற்றும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் தென்னவன்.
சிறுவன் தென்படவில்லை.
மாறாக பெரியவர்கள் பேனாவும் பட்ஸ்ம் விற்றுக் கொண்டிருந்தார்கள்
தம்பி நீங்க யார்ட்டயும் பிச்சை கேட்க கூடாது. இதை வச்சு ஏவாரம் செஞ்சு சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு போனீங்க. இப்பதான் தம்பி பெருமையா இருக்குது. ஒருத்தவங்க கிட்ட பிச்சை கேட்கும் போது அவங்க இல்லைன்னு சொன்னா, ரொம்ப அவமானமா இருக்கும் .மனசு கஷ்டமா இருக்கும். ஆனா இந்த பொருள்களை விக்கும் போது அவங்க வேணாம்னு சொன்னா கூட நமக்கு அவமானமோ வருத்தமா வர்றதில்ல.
இப்ப நாங்க யாரிட்டயும் பிச்சை கேட்கிறதில்ல. தம்பி நீங்க தொடக்கி வச்ச பாதை. இப்ப நாங்க அதைத்தான் செஞ்சுட்டு இருக்கோம்.
என்று அந்தப் பெரியவர்கள் சொன்னபோது தென்னவனுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது.
மறுபடியும் அந்த சிறுவனைச் சற்று முற்றும் திரும்பிப் பார்த்த தென்னவனை அந்தப் பெரியவர் கேட்டார்.
தம்பி அந்த சின்ன பையனத் தான தேடுறீங்க ? என்றார்
ஆமா என்றான் தென்னவன்.
அந்தப் பையன் வேற யாரும் இல்லப்பா .எங்க பக்கத்து வீட்டுக்கார பையன் தான். நல்ல பையன். அவன இங்க எல்லாம் வந்து இத விக்க கூடாதுன்னு நாங்களே சொல்லிட்டோம். அந்தப் பையன் கிட்ட இருந்த பேனா, பட்ஸ நாங்க அத வாங்கிட்டு வந்து விக்கிறோம். வித்த பணத்த அந்த பையன் கிட்ட கொடுத்துடுவோம். படிப்பை விட்டுட்டு அவன் இந்த வேலைய செய்ய வேண்டாம்னு தான் நாங்க அவனை இங்க வரவேண்டாம்னு சொல்லிட்டாேம் தம்பி. யாருன்னே தெரியாம மனுஷனுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிற உங்க மனச பாத்து தான் நாங்களும் இதச் செய்றாேம்.
கடைசி காலத்துல எங்களால பணம் கொடுத்து உதவ முடியல.குறைந்த பட்சம் அந்தப் பையன் படிக்கிறதுக்கு உறுதுணையாவது இருப்போம் அப்படிங்கறது பெருமையா இருக்கு தம்பி
என்று அந்த பெரியவர்கள் சொன்னபோது, கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிய சிக்னல் இப்போது பச்சைக்கு வந்து நின்றது.
வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன.
பெரியவர்கள் பேனா பட்ஸ் உடன் ஒதுங்கினார்கள் .
அடுத்த சிக்னல் விழுந்தது. மறுபடியும் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
இப்பாேது அவர்களின் குரலில் நம்பிக்கையும் உற்சாகமும் இருந்தது.
சோகம் மட்டும் இல்லவே இல்லை.