சிறுகதை

மாறியது நெஞ்சம் | செருவை நாகராஜன்

Spread the love

‘‘என்ன காஞ்சனா! தனியா ரெண்டு பாத்திரத்துல ஏதோ எடுத்து வச்சிருக்கே..! என்ன அது?’’ சாப்பாட்டு மேசையைப் பார்த்து காமாட்சி ஒரு வித ஆர்வத்துடன் கேட்டாள்.

மீன் குழம்பும் நண்டுக் குழம்பும்மா… அத்தை மாமாவுக்கு..’’ என்றாள் காஞ்சனா தனது தாயிடம் சாதாரண குரலில்

காமாட்சிக்கு சிறிதே கோபம். ‘‘மற்ற மகனுங்க வீட்லேயிருந்து ஏதாச்சும் கொடுத்து விடறாங்களா..? நீ மட்டும் ஏன் வீணா அலட்டிக்கிறே..?’’

காஞ்சனா தனது தாயாரின் நோக்கத்தினை சட்டென்று புரிந்துக் கொண்டாள்.

’’இப்ப நீ என்னம்மா சொல்றே..? கொடுத்துவிட வேண்டாம்கிறியா…?’’ என்றவாறே தாயின் முகத்தை ஆராய்ந்தாள்.

‘‘ஆமா.. மீன், நண்டு மீதி இருந்தா பேரனுங்க சாப்பிடட்டும். கிழடுகளுக்கு அவசியமேயில்லை’’ என்றாள் காமாட்சி இறுகிய முகத்துடன் தீர்மானமான குரலில்.

காஞ்சனா மறு பதிலுரைக்கவில்லை.

மதிய வேளையிலுள்ள மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

காஞ்சனா வசித்து வருவது ஒரு கூட்டுக் குடும்பம் .

காரைக்குடி பள்ளத்தூரில் சில அறைகளும் செவ்வக வடிவ தாழ்வாரமும் கொண்ட கட்டிடத்தில் மாமனார் சந்தானம் மற்றும் அவரது திருமணமான மூன்று பிள்ளைகளும் பேரக் குழந்தைகளுமாக ஒற்றுமையுடனும் கலகலப்புடனும் வாழ்ந்து வருகிற குடும்பம் அது.

எல்லாருமே தனித்தனி சமையல்தான். எழுபது வயதான சந்தானமும் 65 வயதான அவரது மனைவியும் கூட தனிச் சமையல்தான். ஒரே இடத்தில் சமைப்பதற்கு மட்டும் மருமகள்களிடையே ஒற்றுமையில்லை.

சந்தானம் வசதியாக வாழ்ந்தவர். அரிசி மில் உரிமையாளர், அந்த இடமும் அவருக்குச் சொந்தமானதே. நவீன அரிசி ஆலைகள் பல அந்த ஊரில் புதிது புதிதாய் முளைத்துவிட்ட நிலையில் சந்தானத்தின் பழைய முறையிலான ஆலை பெரும் நட்டத்தைச் சந்திக்க ஆரம்பித்தது. அதன் இயக்கத்தை நிறுத்திவிட்டார். அவரது மூன்று மகன்களுமே மாத ஊதியத்தில் வேறுவேறு வேலைகளுக்குச் சென்று விட்டனர். இந்நிலையில் தனது ஆலை அமைந்துள்ள எண்பது சென்ட் இடத்தை விற்றுவிடுவதற்கான முயற்சியில் சந்தானம் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

மதியம் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்கிய பின்னர் மாலை நான்கு மணியளவில் காஞ்சனா பாத்திரம் கழுவ ஆரம்பித்தாள்.

‘‘மில் இடத்தை விக்கப்போறதாச் சொன்னாங்களே.. அது என்னாச்சு..? ’’என்றாள் காமாட்சி மிகுந்த ஆர்வத்துடனும் எதி்ர்பார்ப்புடனும்.

தாய் காமாட்சி மகள் வீட்டில் ஒரு மாதம் தங்கிப் போகவந்து ஒரு வாரமேயாகிறது. ஏழுபெண்களைப் பெற்ற காமாட்சிக்கு கடைசி மகள் காஞ்சனா என்றால் உயிர். வாடகை வீடுகள், கடைகள் மூலமாக வரும் வருமானம் முழுவதும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை காஞ்சனா கைக்குச் சென்றுவிடும். அதனால் அம்மா வரும்பொழுது அவளுக்குப் பிடித்த மட்டன், மீன், நண்டு, இறால், கருவாடு என்று வௌ்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் அசைவம் தான்.

அம்மாவை நோக்கி நிமிர்ந்த காஞ்சனா‘‘அது விஷயமாகப் பேசிக்கிட்டே தாம்மா இருக்காங்க.., இன்னும் முடிஞ்சபாடில்லே..பெரியவங்களுக்கு ஆண்ட சொத்தை சீக்கிரம் விற்க மனசு வராதும்மா..’’ என்றாள் குரலில் சோகத்துடன்.

‘‘இத்தனை ஆண்டுகாலம் மில்லை ஆண்டது பத்தாதோமா..? காலா காலத்துல விற்றுக்கொடுத்தா நீ ஒரு இடம் வாங்கிச் சொந்தமா ஒரு வீடு கட்டலாம்ல..? இடத்தை விக்காம வச்சிருந்து போகும்போது கொண்டு போகப் போறாரா என்ன…?’’ என்றாள் காமாட்சி ஒருவித சலிப்புடனும் எரிச்சலுடனும்.

காஞ்சனா பதில் பேசாமல் மீதிப் பாத்திரங்களை துலக்க ஆரம்பித்தாள்.

அன்று இரவு பத்துமணிக்கு வந்த கதிரேசன் உற்சாக நடையுடன் வீட்டினுள் நுழைந்தான்.

‘‘காஞ்சனா! அப்பா மில் இடத்தை வித்துட்டாங்க.. என்னோட பங்கு முப்பது லட்சத்தையும் கையிலே கொடுத்துட்டாங்க. பணம் இந்தப்பையிலே இருக்கு.. பீரோவுல பத்திரமா எடுத்துவை’’ என்று அந்த மஞ்சள் நிறப் பையை நீட்டினான்.

காஞ்சனா காமாட்சி முகத்தில் ஏக பூரிப்பு, மகிழ்ச்சி, அளவிலா ஆனந்தம். கதிரேசன் முகம் கைகால் கழுவி வர பின்பக்கம் சென்ற வேளையில

மத்தியானம் மீனு, நண்டை அத்தை மாமாவுக்குக் கொடுத்திருக்கலாம்மா. பசங்க சாப்பிட்டபிறகுப் பாதிக்கு மேலே அப்படியே மீதி கெடக்கு’’ என்றாள் காஞ்சனா கவலையுடனும் ஒருவித குற்ற உணர்ச்சியுடனும்.

‘‘போகட்டும் விடு.. அதுங்களுக்கு அது கொடுப்பினையில்லே… வேணும்னா இப்ப கொண்டு போய்க்கொடு…’’ என்றாள் காமாட்சி ஒருவித அலட்சியத்துடன்.

‘‘அம்மா! என்ன நீ பேசறே.. மணி பத்துக்கு மேலாச்சு… அவங்க தினம் ஒன்பது மணிக்கே தூங்குறவங்க அது உனக்கும் நல்லாவே தெரியும். கொஞ்சம் புத்தியோடு பேசு’’ என்றாள் காஞ்சனா கடுப்பான குரலில்.

அம்மா பேச்சை நாம கேட்டிருக்கக் கூடாது, தனது கணவரைப் பெற்று வளர்த்த தாய் தந்தையருக்கு உணவு சமைத்துக் கொடுத்துக் கவனிக்க வேண்டும். என்னால் கொடுத்திருக்க முடியும்? அம்மா தடுத்ததால் கொடுக்காமல் விட்டது பெரி தப்பு. மாமனர்-மாமியார் குறிப்பறிந்து மருமகள் தான் செயல்பட வேண்டும். நாமும் மாமியார் நிலைக்கு வரும்போது நமக்கும் மருமகள்களால் இந்த அநாகரிக நிலை ஏற்பட்டால் என் மனமும் கணவரது மனமும் என்ன பாடுபடும்? எல்லாம் எண்ணிப் பார்த்ததும் காஞ்சனா மனம் கலங்கியது. அவள் நெஞ்சம் மாறியது.

‘‘பணத்தை வீட்ல வச்சுக்காம பேங்க்ல போடுங்கம்மா.. கட்டின வீடா வாங்கப் போறீங்களா? இல்லே டவுன்ல மனை வாங்கப் போறிங்களா?’’ என்றாள் காமாட்சி கரிசன குரலில்.

‘‘வீடு, மனை வாங்கலே.. என் மாமா மாமியாருக்கு சாப்பிடறதுக்கு அவங்க வாய்க்கு ருசியா பண்ணிப்போடப் போறேன். அம்மா நீ உன் வேலையைப் பாத்துக்கிட்டுப் போ. என் குடும்பத்திலே தலையிடாதே. அப்பாவுக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்காது. நீ காலையில மொத வேலையா ஊருக்குக் கிளம்பப் பாரு’’ என்றாள் காஞ்சனா முகம் கோணலாகிப் போன தனது தாயாரைப் பார்த்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *