செய்திகள் வர்த்தகம்

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல்: ரூ.1.24 லட்சம் கோடியானது

டெல்லி, ஏப். 3–

ஜிஎஸ்டி மூலம் கடந்த மார்ச் மாத வசூல் ரூ.1.24 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

ஜிஎஸ்டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, இந்தியா முழுவதும் 2017 ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளை விட 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வசூலாகியிருப்பதே அதிகபட்ச தொகையாகும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் வெகுவாகக் குறைந்தது. தளர்வுகள் அறிவித்தபின் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்க தொடங்கியது.

6 வது மாதமாக உயர்வு

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த மார்ச் 1 ந் தேதியில் இருந்து மார்ச் 31 ந் தேதி வரை மொத்த ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சத்தை தாண்டி 1,23,902 கோடி ரூபாய் வசூலானதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

மத்திய ஜிஎஸ்டி 22,973 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 29,329 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி 62,842 கோடி ரூபாய் மற்றும் செஸ் 8,757 கோடி ரூபாய் வருவாய் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவிகிதம் அதிகமாகும்.

தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்து வரும் நிலையானது மார்ச் மாதமும் நீடித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *