செய்திகள்

மாரியப்பன், கிரிக்கெட் அணி துணைகேப்டன் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு ‘ராஜீவ் கேல்ரத்னா’ விருது

விளையாட்டுத் துறையில் உயர்ந்த விருது

தமிழக மாற்றுத்திறனாளி தடகள வீரர்

மாரியப்பன், கிரிக்கெட் அணி துணைகேப்டன் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு ‘ராஜீவ் கேல்ரத்னா’ விருது

மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, ஆக.22–

தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு விளையாட்டு துறையில் உயர்ந்த விருதான ‘‘ராஜீவ் காந்தி கேல்ரத்னா’’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கான வீரர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் விருதுக்கு உரியோருக்கான இறுதிப் பட்டியலை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பினர்.

அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய 5 பேர் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதை பெறுகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர் மாரியப்பன் தங்கவேலு, 2016–-ம் ஆண்டு ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் டி42 பிரிவு உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார். அவரின் சாதனையை பாராட்டி தற்போது கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூனா விருது

அர்ஜூனா விருதுக்கு 29 வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இதில் 27 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, சாக் ஷி மாலிக் ஆகிய இருவருக்கும் அர்ஜூனா விருது அறிவிக்கப்படவில்லை. இவர்கள் இருவரும் ஏற்கெனவே கேல்ரத்னா விருது பெற்றிருந்ததால் இம்முறை அர் ஜுனா விருதுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதானு தாஸ் (வில்வித்தை), தீபக் ஹூடா (கபடி), திவிஜ் சரண் (டென்னிஸ்), இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா (கிரிக்கெட்), டுட்டீ சந்த் (தடகளம்), சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் ஷெட்டி (பாட்மிண்டன்), விஷேஸ் பிர்குவன்சி (கூடைப்பந்து), மனிஷ் கவுசிக், லோவ்லினா போர்கோகைன் (குத்துச்சண்டை), சவான் அஜய் ஆனந்த் (குதிரை ஏற்றம்),

சந்தேஷ் ஜின்கன் (கால் பந்து), அதிதி அசோக் (கோல்ப்), ஆகாஷ் தீப் சிங், தீபிகா (ஹாக்கி), காலே சரிகா சுதாகர் (கோ-கோ), தத்து போபன் போகனால் (படகு வலித்தல்), மனு பாகர், சவுரப் சவுத்ரி (துப்பாக்கிச் சுடுதல்), மதுரிகா சுபாஷ் பட்கர் (டேபிள் டென்னிஸ்), சிவகேசவன் (குளிர்கால விளையாட்டு), திவ்யா கரன், ராகுல் அவாரே (மல்யுத்தம்), சுயாஷ் நாராயன் ஜாதவ் (பாரா நீச்சல்), சந்தீப் (பாரா தடகளம்), மணிஷ் நார்வால் (பாரா துப்பாக்கிச் சுடுதல்) ஆகிய 27 பேர் அர்ஜுனா விருது பெறுகின்றனர்.

துரோணாச்சாரியார் விருது

பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியார் விருது, 2 பிரிவுகளில் 13 பேருக்கு வழங்கப் படுகிறது. வழக்கமான பிரிவில் செபாஸ்டியன் (ஹாக்கி), யோகேஷ் மால்வியா (மல்லர் கம்பம்), யாஷ்பால் ஷர்மா (துப்பாக்கி சுடுதல்), குல்தீப் குமார் ஹண்டு (வூஷூ), கவுரவ் கண்ணா (பாரா பாட்மின்டன்) ஆகிய 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் பிரிவில் தர்மேந்திரா திவாரி (வில்வித்தை), புருஷோத்தம் ராய் (தடகளம்), ஷிவ்சிங் (குத்துச்சண்டை), ரமேஷ் பதானியா (ஹாக்கி), கிருஷ்ணன் குமார் ஹூடா (கபடி), விஜய் பாலச்சந்திர முனீஸ்வர் (பாரா பளு தூக்குதல்), நரேஷ் குமார் (டென்னிஸ்), ஓம் பிரகாஷ் தாகியா (மல்யுத்தம்) ஆகிய 8 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தயான் சந்த் விருது

குல்தீப் சிங் புல்லார் (தடகளம்), ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), திருப்தி முர்குந்தே (பாட்மின்டன்), லகா சிங் (குத்துச்சண்டை), சுக்விந்தர் சிங் சாந்து (கால்பந்து), அஜித் சிங் (ஹாக்கி), மன்பிரீத் சிங் (கபடி), ரஞ்சித்குமார் (பாரா தடகளம்), சத்யபிரகாஷ் திவாரி (பாரா பாட்மின்டன்), மஞ்சித் சிங் (படகுப்போட்டி), சச்சின் நாக் (நீச்சல்), நந்தன் பி பால் (டென்னிஸ்), நேதர்பால் ஹூடா (மல்யுத்தம்) ஆகிய 15 பேருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான இந்த விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடத்தப் படும். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்முறையாக விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 29–-ம் தேதி காணொலி மூலம் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *