சென்னை, ஜூன் 12–
மாமல்லபுரம் சுங்கசாவடி கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டண உயர்வு தேர்தல் காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டண உயர்வானது அமலுக்கு வந்தது. இந்நிலையில், அக்கரை மற்றும் மாமல்லபுரம் இடையே உள்ள சுங்கசாவடியில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இந்த கட்டண உயர்வானது அடுத்தாண்டு மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். கார், ஜீப், உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.1 முதல் ரூ. 68 வரையும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ. 2 முதல் ரூ. 110 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை-மாமல்லபுரம் இடையே போக்குவரத்து அதிகரித்ததால் 2018-ம் ஆண்டு அக்கரை-மாமல்லபுரம் இடையேயான சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.