செய்திகள்

மாமல்லபுரம் அருகே 5 வயது குழந்தையுடன் பெண்ணை கடத்திய பள்ளி வேன் டிரைவர் கைது

காஞ்சீபுரம், ஜூலை 18–-

மாமல்லபுரம் அருகே மருத்துவமனைக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்திய பள்ளி வேன் டிரைவர் மேல்மருவத்தூரில் கைது செய்யப்பட்டான். 2 வாரத்திற்கு பிறகு தாயும், குழந்தையும் மீட்கப்பட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி லோகநாயகி (வயது 33). இவர்களுக்கு தர்ஷன் (10) என்ற மகளும், மித்ரா (5) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் லோகநாயகி கடந்த 4-ம் தேதி தன் மகள் மித்ராவுடன் திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சுந்தரமூர்த்திக்கு அந்த தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் வேன் டிரைவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்யும் வடக்கு மாமல்லபுரம் அண்ணன் காந்தி தெருவை சேர்ந்த சரவணன் (40) என்பவர் இரு குழந்தைகளையும் பண்டிதமேடுக்கு வந்து பள்ளிக்கு அழைத்து செல்லும்போது எனது மனைவியிடம் பள்ளி வேன் கிளம்பும்போது தகவல் தெரிவித்து குழந்தையை வேனில் ஏற்ற தயாராக இருக்கும்படி பேசுவார். அடிக்கடி தனது வீட்டை நோட்டமிட்டு வந்த சரவணன் தனது மனைவி, குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவர் மீது மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார்.

பிறகு போலீசார் அதே பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரியும் மற்றொருவரை அழைத்து வந்து விசாரித்ததில் லோகநாயகி மற்றும் மித்ரா இருவரையும் கடத்தி சென்றது சரவணன் என்பதை அவர் மூலம் போலீசார் உறுதிப்படுத்தினர். பிறகு சரவணன் செல்போன் சிக்னலை வைத்து சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்காணித்ததில் கன்னியாகுமரியில் லோகநாயகி, மித்ரா இருவரையும் கடத்தி வைத்திருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். போலீசார் தன்னை கண்காணிப்பதை அறிந்த சரவணன் உடனடியாக இடத்தை மாற்றி தாய், மகள் இருவரையும் கோவளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கத்தி முனையில் மிரட்டி அடைத்து வைத்திருந்துள்ளார்.

பிறகு நேற்றுமுன்தினம் இரவு மேல்மருவத்தூரில் தாய், மகள் இருவரையும் ஒரு விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக வந்த தகவலின்பேரில் மாமல்லபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் அங்கு சென்று சரவணணை கைது செய்து தாயும், மகளையும் மீட்டனர்.

பிறகு போலீசாரிடம் லோகநாயகி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

நான் என் குழந்தையுடன் பூஞ்சேரி பேருந்து நிலையத்தில் மருத்துவமனைக்கு செல்ல பஸ் ஏற காத்திருந்தபோது ஒரு ஆட்டோவில் வந்த சரவணன், தான் திருக்கழுக்குன்றம் செல்வதாகவும் மருத்துவமனையில் உங்களையும், குழந்தையும் விட்டுவிடுகிறேன் என கூறி அழைத்து சென்றார். ஆட்டோவில் ஏறியவுடன் மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை எனது குழந்தை, எனது முகத்தில் வைத்தபோது சுயநினைவை இழந்துவிட்டோம். பிறகு மயக்க தெளிந்து பார்த்தபோது காரில் கன்னியாகுமரிக்கு எங்களை கடத்தி வந்துள்ளதை உணர்ந்தேன். உன் குழந்தையை கொன்று விடுவேன் எனக்கூறி என்னை மிரட்டி ஒரு விடுதியில் குழந்தையுடன் என்னை அடைத்து வைத்தார். எனது செல்போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்.

அங்கு மீண்டும் குழந்தையை கொன்றுவிடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி என்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். வீட்டிற்கு போகலாம் என்று சொன்ன என் குழந்தையும் அடித்து சித்ரவதை செய்தார். உன் குடும்பத்தினரை ஒரு லட்ச ரூபாய் பணம் கொண்டு வர சொல். உங்களை விட்டுவிடுகிறேன் இல்லையென்றால் என் குழந்தையை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டினார்.

சரவணனிடம் இருந்த பணம் காலியாகவே என்னுடைய கால் பவுன் மோதிரத்தை பிடுங்கி அதனை விற்று பிறகு ஒரு பேருந்தில் குழந்தையை மிரட்டியபடியே மேல்மருவத்தூருக்கு அழைத்து வந்தார். அங்கு போலீசார், குடும்பத்தினர் வந்து எங்களை காப்பாற்றினார்கள்.

இவ்வாறு போலீசாரிடம் அவர் கூறினார்.

இதற்கிடையில் போலீசார் தன் புகைப்படத்தை வைத்து அனைத்து காவல் நிலையம் மூலம் தன்னை தேடுவதை அறிந்த சரவணன் எப்போது தாடியுடன் காணப்படும் அவர் தன்னை யாரும் அடையாளம் காணாத வகையில் கன்னியாகுமரியில் தாடியை மழித்து மொட்டை போட்டுள்ளார்.

தற்போது லோகநாயகி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சரவணன் மீது மாமல்லபுரம் போலீசார் பாலியல் துன்புறுத்தல், ஆள்கடத்தல், குழந்தையை தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *