செய்திகள்

மாமல்லபுரத்தில் தினமும் 2 மணி வரை கடைகள் திறந்து வியாபாரம்: உதவி போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

கொரோனா தொற்று பரவாமல் இருக்க

மாமல்லபுரத்தில் தினமும் 2 மணி வரை கடைகள் திறந்து வியாபாரம்:

உதவி போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

காஞ்சீபுரம், ஜூலை 3-–

மாமல்லபுரத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தினமும் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பேசினார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் ஊரடங்கும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் இதுவரை அதிகளவில் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. எனவே இங்கு தொற்று அதிகம் ஏற்பட்டு வருங்காலத்தில் சுற்றுலா பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவின் பேரில், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மாமல்லபுரம் நகர அனைத்து வியாபாரிகளை அழைத்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கூட்டத்திற்கு மாமல்லபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ரா.ராஜசேகர், கே.கருப்பசாமி, எம்.வி.எஸ்.விஜய், பி.திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்திற்கு மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமை தாங்கி பேசியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் மாமல்லபுரத்தில் உள்ள வியாபாரிகள் அனைவரும் கவனமுடன் வியாபாரம் செய்ய வேண்டும். கடைகளுக்கு வரும் பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து, முக கவசம் அணிந்து வந்துள்ளனரா? என பார்த்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வியாபாரம் செய்ய முன் வரவேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் மக்கள் கடைகளில் கூட்டம் கூட்டமாக கூடுவதை வியாபாரிகள் அவர்களிடம் அறிவுறுத்தி தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று மெல்ல, மெல்ல பரவுவதை தவிர்க்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நீடிக்கும் வரையில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை மட்டுமே வியாபாரிகள் கடைகளை திறக்க வேண்டும். கூடுதல் நேரம் கடைகள் திறப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் எழிலரசன், நல்லசிங்கம், முருகேசன், ஓம்பிரகாஷ்ரத்தோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *