சிறுகதை

மாப்பிள்ளை | ஆவடி ரமேஷ்குமார்

” கல்லூரியில பேராசிரியராக வேலை பார்க்கிற உங்க மகள் லட்சுமிக்கு பொருத்தமான ரெண்டு வரன் இருக்கு. முதல்ல இதைய பாருங்க சார்” என்றார் தரகர் வாசு.

வாங்கிப்பார்த்த கிருஷ்ணமூர்த்தி யிடம், ” பேரு குருநாத். க்யூ டிவில செய்தி வாசிப்பாளரா இருக்கார்” என்றார் வாசு.

” ம்.ஸ்மார்ட்டா ஹீரோ மாதிரி இருக்கார். லட்சுமிக்கு பொருத்தமா வேற இருக்கார்”

” இந்தாங்க இதையும் பாருங்க.

இவர் பேரு சுந்தரமூர்த்தி. முல்லை டிவில இவரும் செய்தி வாசிப்பாளராத்தான் இருக்கார்”

வாசுவிடமிருந்து அந்த போட்டோவையும் வாங்கிப் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.

” இவர் தேற மாட்டார் போல இருக்கே வாசு. குருநாத்தை விட பெர்ஷனாலிட்டியில் கொஞ்சம் மட்டமாத்தான் தெரியறார்”

” அப்ப..லட்சுமியை கூப்பிட்டு போட்டோக்களை காண்பிச்சு கேட்டுடீங்களே” என்றார் வாசு.

” இதோ” என்றவர் ” லட்சுமி” என்று குரல் கொடுக்க, மாடியறையிலிருந்து கீழே இறங்கிவந்தாள் லட்சுமி.

போட்டோக்களை வாங்கிப்பார்த்த வள்,” இரண்டு நாள் டைம் கொடுங்க டாடி.பதில் சொல்றேன்” என்றாள்.

இரண்டு நாள் கழிந்தது.

” யாரைம்மா செலக்ட் பண்ணியிருக்கே…

குருநாத்தைத்தானே?” ஆவலாக கேட்டார் கிருஷ்ணமூர்த்தி.

” இல்லைங்க டாடி. சுந்தரமூர்த்தியை!” என்றாள் லட்சுமி.

” அப்படியா!” என்று அதிர்ச்சியா னார் கிருஷ்ணமூர்த்தி.

லட்சுமி நிதானமாக விளக்க ஆரம்பித்தாள்.

” டாடி…க்யூ டிவில ஒர்க் பண்ற குருநாத் அழகா இருந்தாலும் அவர் நேரலைல அடிக்கடி கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். நான் தொடர்ந்து பார்த்திருக்கேன்.

ஒரு நெறியாளரா வந்திருக்கிற அஞ்சு பேர்கிட்டயும் தனித்தனியா கேள்வி கேட்கும் போது இவர் ஒருத்தர்கிட்ட கேள்வி கேட்டு அதுக்கு பொறுப்பா அவர் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது அவர் பதிலை சொல்லி முடிக்கிறதுக்குள்ளே குறுக்கே புகுந்து வேற ரெண்டு கேள்விகள் கேட்பார்.

உடனே அவர் முதல்ல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லறதை விட்டுட்டு இரண்டாவது கேட்ட கேள்விக்கு ஆர்வமா பதில் சொல்ல ஆரம்பி்க்கும் போது, இவர் அந்த பதிலை மதிக்காம மறுபடியும் இடையே புகுந்து வேறு ரெண்டு கேள்விகள் கேட்பார். இது என்னை மாதிரி நிகழ்ச்சியை ஆர்வமா பார்க்கிறவங்களுக்கு எரிச்சலூட்டற மாதிரி இருக்கும்.குருநாத் மேல ஆத்திரம் ஆத்திரமா வரும். இவருடைய நோக்கம் க்யூ டிவியின் டி.ஆர்.பி ரேட்டை உயர்த்தனும். ஆனா அதில் ஒரு லாஜிக் இருக்காது.

இவரைக் கட்டிக்கிட்டா பின்னாடி ரொம்ப கஷ்டப்படனும்.சொந்த அறிவைப் பயன்படுத்த தெரியாதவர் மாதிரியே நடந்துக்குவார்.

ஆனா சுந்தரமூர்த்தி இங்கே மாறுபடறார். இவரும் செய்தி சேனல்ல அதே மாதிரி நேரலை நிகழ்ச்சில ஒரு நெறியாளரா நடத்தறவர்தான்.

இவர் பேச வந்திருக்கிறவர்களுக்கு திருப்தியா பேச டைம் கொடுப்பார். இடையில் புகுந்து இடைஞ்சலா மாற்று கேள்விகள் கேட்க மாட்டார். ரொம்பவும் அறிவுப்பூர்வமா மெட்சூர்டா நடத்துவார். பார்க்கிறவங்களுக்கு பொது அறிவை வளர்க்கிற மாதிரி ரொம்ப பொறுப்பா நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு போவார். ஐ லைக் ஹிம்.இவரை வாழ்க்கைத் துணையா ஏத்துக்கிட்டா….”மகள் லட்சுமி முடிப்பதற்குள்….

” சரிம்மா…சரிம்மா…இப்ப புரிஞ்சுட்டேன். சுந்தரமூர்த்தி தான் இனி இந்த வீட்டு மாப்பிள்ளை! போதுமா?”

சந்தோஷமான குரலில் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *