சென்னை, அக். 26
“உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளார்.
யாரும் 2 சக்கர வாகனங்களில் வரவேண்டாம் என்பது உள்பட மேலும் 4 கட்டளைகளையும் அவர் பிறப்பித்திருக்கிறார்.
நாளை (ஞாயிறு) விக்கிரவாண்டியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுவது நினைவிருக்கலாம்.
இதுசம்பந்தமாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:–
சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்பே முக்கியம். ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகன பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.
போக்குவரத்து நெறிமுறைகளில்
கவனம் அவசியம்…
போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்”
இவ்வாறு விஜய் பதிவிட்டுள்ளார்.
மாநாட்டு மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது. இதில் பெண்களுக்கு என்று முதல் முறையாக தனி அங்கீகாரத்தை இந்த மாநாடு அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. மேலும் மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்- அவுட்களும் மாநாட்டு திடலில் கம்பீரமாக காட்சி தருகின்றன.
100 அடி உயரக்
கொடிக்கம்பம்
மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று காலை நடப்பட்டது. ராட்சத கிரேன் மூலமாக, தொழிலாளர்கள் இதை அங்கு நிறுவினர். இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி பறக்க விடப்படுகிறது. கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் தற்போது விஜய், ரிமோட் மூலம் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொடியேற்றினாலே, அந்த கொடி உச்சத்தை தொடுவதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். இடி தாங்கி வசதியுடன் இந்த கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்காலிக செல்போன் டவர்
மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
1 லட்சம் பேருக்கு மேல்
வந்தாலும் உணவு தயார்
ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்தாலும் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான உணவு தயார் செய்யப்படுகிறது.
பெண்களுக்கு என்று தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான பாதுகாப்பிற்கு மகளிர் அணியை சேர்ந்தவர்களை வைத்தே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் வீட்டில் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்களோ அதைவிட இந்த மாநாட்டு திடலில் பாதுகாப்பை அளிப்போம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாக அழைத்து அமர வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்கும். இதில் முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
‘ரேம்ப்’ பாதை
கொடியேற்றிய பின், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, அங்கு சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள ‘ரேம்ப்’ (நடைபாதை) மீது நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பிறகே மாநாட்டு மேடைக்கு வர உள்ளார்.
மாநாட்டின் தொடக்கமாக பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், மாநாட்டுக்காக நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் மாநாட்டு பணிகளுக்கு உதவி செய்தவர்களுக்கு விஜய் சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.
அதன் பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் பேச உள்ளனர். இவர்கள் பேசி முடித்ததும் நிறைவாக விஜய், பேச உள்ளார்.
நெடுஞ்சாலைகளில்
பதாகைகள்
மாநாட்டுக்கு விஜய்யை வரவேற்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வாழ்த்து பதாகைகளை வழிநெடுக வைத்துள்ளனர். குறிப்பாக சென்னை – -திருச்சி மார்க்கத்தில் வி.சாலை வரைக்கும் சாலை முழுவதும் வரவேற்பு பதாகைகள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வி.சாலை பகுதியே எங்கும் மஞ்சள், சிவப்பு கொடியுமாக காட்சி தந்து வண்ணமயமாக திகழ்ந்து வருகிறது.
இதற்கிடையே மாநாட்டு பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மண்டல ஐ.ஜி. அஷ்ராகார்க் தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மித்தல், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என்று போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.