சிறுகதை

மானம் | இ . பாபு

என்னங்க இன்னைக்கு கேட்ட இடத்திலே பணம் கிடைச்சிடுமா? என பேச்சை ஆரம்பித்தாள் ராதிகா.

‘ம்! இன்னைக்கு….. இன்னைக்கு வரச்சொல்லியிருக்காரு. எல்லாம் ஆண்டவன் விட்ட வழி! என்ன நடக்குமோ? அது நடக்கும் . எல்லாம் அந்த ஆண்டவன் கையிலிருக்கு’’, என்று மனம் நொந்தவாறு பேசினார் ரகு – ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்.

‘ஆண்டவன் புண்ணியத்தில இந்த பரம்பரை வீடு இருக்கு. ‘பென்ஷன்’ வருது .எப்படியாவது நம்ம ஒரே மகள் மாதவியை கல்யாணம் முடிச்சிட்டா நம்ம கடமை முடிச்சிரும்ங்க!’. அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன் என்றாள் ராதிகா’’.

அப்போது வாசலிலிருந்து ஆட்டோவிலிருந்து இறங்கிய ராஜா வீட்டுக்குள் நுழைந்தான் .

அப்பா இந்தப் பையிலே ரூ. 1 லட்சம் பணமிருக்கு தங்கைக்கு நான் இதை சீதனமா கொடுக்கிறேன். இது என் கடமை தயவு செய்து, வாங்கிக்கிங், என்றவாறு ‘பண’ப்பையை நீட்டினான் ராஜா.

‘டேய்! ராஜா! பெத்த தாய் தகப்பன், கூடப் பிறந்த தங்கச்சிய ‘அனாதையா’ விட்டுவிட்டு ஒரு பணக்காரப் பெண்ணை காதலிச்சி மாமனார் வீட்டிலேயே செட்டில் ஆகிட்டே. இப்பத்தான் உனக்கு கண் தெரிந்ததா? பாவி, படுபாவி, இந்தப் ‘பாவம்’ உன்னை சும்மா விடாதுடா என கோபமாக பேசியதும்.

‘அப்படியென்றால் உங்க முடிவு என்னப்பா?’

‘ராஜா இந்த பணத்தை நீ உழைச்சி’ சம்பாதித்திருந்தால் இப்பவே நான் வாங்கிக்குவேன்! ஆனா இந்த பணத்தை உன் ‘மனைவியிடம்’ கெஞ்சி வாங்கிட்டு வந்திருப்பே. இப்படிப்பட்ட உன் பாவ பணம் எனக்கு தேவையில்லை. என் மக கல்யாணத்தை முடிக்க எனக்கு தெம்பு இருக்கு. நீ கவலைப்படாதே! எனக்கு மானம் தான் முக்கியம். வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் மானத்துடன் வாழனும். நானும் மானத்துடன் வாழ்கிறேன்’ நான் உன்னை மாதிரி அடிமைப்பட்டு மானம் கெட்டு வாழமாட்டேன். இந்த ‘பணத்தை’ நீ எடுத்துக்கிட்டு போடா. கெட் அவுட் என ரகு கோபமாக பேசியதும் மறுநிமிடமே ராஜா அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பினான்.

அடியே ராதிகா ….நான் கிளம்புறேன் என்றவாறு பணம், புரட்டக் கிளம்பிச் சென்றார் மானம் ரோஷம் உள்ள ரகு. வியப்புடன் வாய்மூடி நின்றாள் ராதிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *