டெல்லி, ஜன. 23–
உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற தலைமை நீதிபதியின் கருத்தை வரவேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:–
உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனோடு, உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும்.
தலைமை நீதிபதி தகவல்
மகாராஷ்டிரம் – கோவா வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார். ஏற்கெனவே உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் கருத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலினும் அக்கருத்தை வரவேற்றுள்ளார்.