செய்திகள்

மாநில பாடத்திட்ட தரம் குறைவா? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

Makkal Kural Official

சென்னை, செப். 3–

“ஒன்றிய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது” என்று பேசி சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களிடம் பரிசோதிக்கட்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி தந்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தனியார்ப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, “தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடுகையில், மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக இருக்கிறது. பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன். மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கும் நவீனத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

மாநில பாடத்திட்டம் குறித்த ஆளுநரின் கருத்துக்குப் பதிலளித்திருக்கும் பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தைவிட மாநிலப் பாடத்திட்டம் மேலானது. மாநில அரசின் கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. போட்டித் தேர்வுகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் மாநில புத்தகங்களிலிருந்துதான் டி.என்.பி.எஸ்.சி பயில்வோர் பயன்பெறுகின்றனர். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடம் ஆளுநர் நேரில் சென்று பேச வேண்டும்.

அழைத்துச் செல்கிறேன்

மாநில பாடத் திட்டத்தைப் படித்து எத்தனை பேர் அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தேர்வாகின்றனர் என்பதைத் தெரிந்துகொண்டு ஆளுநர் பேச வேண்டும். மத்திய அரசின் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களே தமிழ்நாட்டில் உள்ள 6 – 12 வகுப்பு பாடப் புத்தகங்களைத்தான் படிக்கின்றனர். கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமானால் ஆளுநரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல தயார்” என்று கூறியிருக்கிறார்.

“மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது என்று எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார்?” என்ற கேள்வியை பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு எழுப்புகிறார். மேலும், “மாநிலப் பாடத்திட்டத்தை எந்த பாடத்திட்டத்துடன் அவர் ஒப்பாய்வு செய்தார்? தரத்தை அளப்பதற்கு என்ன அளவுகோலை ஆளுநர் பயன்படுத்தினார்? மாநிலத்தின் தலைவராக இருக்கும் ஆளுநர், அவ்வாறு ஆய்வுகள் மேற்கொண்டிருந்தால், தான் ஆராய்ந்தறிந்தவற்றை மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையிடம் தெரிவித்தாரா? ஒப்பீட்டு ஆய்வறிக்கையை மாநில அரசிடம் வழங்கி கருத்து கோரினாரா?” எனப் பல கேள்விகளை பிரின்ஸ் கஜேந்திரபாபு முன்வைக்கிறார்.

“ஆளுநரின் இந்தப் பேச்சு உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்” என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், “மாநில பாடத்திட்டத்தின் தரம் கீழ் நிலையில் இருக்கிறது என்ற கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வாபஸ் பெற வேண்டும்.” என்று பலரும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, கணித மேதைகளாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இந்த நிலையில், மாநில பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று எதன் அடிப்படையில் ஆளுநர் சொல்கிறார் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *