செய்திகள்

மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை: ஏப்ரலில் சமர்ப்பிக்கப்படும்

நீதியரசர் முருகேசன் தகவல்

சென்னை, ஜன.26–

மாநில கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை, ஏப்ரல் மாதத்துக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஆகியோர் உள்ளனர்.

கல்விக் கொள்கை குழு

அதேபோல் பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தலைமையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடந்தது.

10 ஆண்டுக்கு பயன்படும்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் கூறிகையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிலரும், தனித்தனி பாடத்திட்டமே சிறந்தது என்றும் மற்றொரு தரப்பினரும் தெரிவித்தனர். அதேபோல் பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர்.

உயர்கல்வியில் உள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு பயன்படும் வகையில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட உள்ளது.

வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கியதாக கல்விக் கொள்கை தயாரிக்கப்படும். கல்விக்கொள்கை வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அரசிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளோம். பாலியல் கல்வி குறித்த அம்சமும் வரைவு அறிக்கையில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *