செய்திகள்

மாநில ஆசிரியர் தகுதித்தேர்வை பல்கலைக்கழக பங்களிப்புடன் ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்தும்

Makkal Kural Official

அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை, டிச.25-

மாநில ஆசிரியர் தகுதித்தேர்வை (செட்) பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமே நடத்தப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 1987-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம், அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வது மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சட்டக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் உள்ள கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ள உதவிப் பேராசிரியர்களை தெரிவு செய்யும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், 2011ம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் முகவாண்மை நிறுவனமாக அரசால் நியமிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு 2023-ம் ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மறுசீரமைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணியாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யவும் ஆணையிடப்பட்டு உள்ளது.

1988-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நிலைகளில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 657 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் இந்த தேர்வு வாரியத்தால் முறையாக தேர்வு செய்து அனுப்பப்பட்டு உள்ளனர்.

இதுதவிர கடந்த ஆண்டு முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்க, தகுதி பெற்ற மாணவர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு 120 மாணவர்கள் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற ஏதுவாக கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டது.

தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மாநில தகுதித்தேர்வை (செட்) நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட்டு உள்ளது. இந்த ஆணைக்கு உட்பட்டு உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக பாட வல்லுனர்கள் மற்றும் பேராசிரியர்களை ஈடுபடுத்திக் கொண்டு, அந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் பல்கலைக்கழக மானிய குழுவின் (யு.ஜி.சி.) நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் நடத்த வேண்டிய தேசியத் தகுதித் தேர்வு (நெட்) வெளிமுகமையான தேசியத்தேர்வு முகமை (என்.டி.ஏ.) மூலமே நடத்தப்படுகிறது.

மாநில தகுதித் தேர்வு (செட்) நடத்துவதற்கான போதுமான நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கொண்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்துடன் இணைத்து இணையவழி தேர்வு நடத்துவதற்கும், நேரடித் தேர்வு நடத்துவதற்கும் போதுமான வசதிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளது.

எனவே, மாநிலத் தகுதித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமே சிறப்பாகவும் முறையாகவும் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *