தமிழக வெற்றிக் கழக செயல்திட்டம் வெளியீடு
விக்கிரவாண்டி, அக்.28-
மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் கவர்னர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும் என்று தமிழக வெற்றிக் கழக செயல்திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் கொள்கை, கோட்பாடு வெளியிடப்பட்டது. இதில் பெண் உறுப்பினர் கேத்ரின் பாண்டியன் கட்சியின் செயல்திட்டங்களை விளக்கி கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசு மற்றும் தனியார் துறை எதுவாயினும் அதில் அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும், எந்த வடிவிலும் இருக்கவே கூடாது. சாதி, மத மற்றும் பாலின சார்பின்மை, அரசு நிர்வாகத்தின் வழிகாட்டும் வழிமுறைகளாக கடைபிடிக்கப்படும்.
அரசு நிர்வாகம் எப்போதும் முற்போக்கு சிந்தனையுடனும், அரசியல் சார்ந்ததாகவும், பன்முக தன்மையுடனும் விளங்கும். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு, நெறிமுறைப்படுத்தப்படும்.
உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது போன்று, அரசை மக்கள் எளிதில் அணுக கூடிய வசதிக்காக மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும்.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைவருக்கும் சமமான விகிதாசார இட பங்கீடு அளிக்கப்படும். சாதி, மதம் மற்றும் மொழிவழி சிறுபான்மையினருக்கு, பாதுகாப்பான சகோதரத்துவ சூழல் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகொள்கையே எப்போதும் ஏற்ற கொள்கை. கீழடி, கொந்தகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கப்பட்டு, பழந்தமிழர்களின் வைகை நதி நாகரீகத்தை உலகிற்கு வெளிக்கொண்டு வர முன்னுரிமை அளிக்கப்படும்.
மாநிலத்தின் தன்னாட்சி உரிமை கொள்கைப்படி மருத்துவம் போன்று, கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் செயல்பாடுகளில் அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பாக நீடிப்பதாக, கவர்னர் பதவி என்பது தேவையா என்ற கேள்வி எழும்பி உள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் கவர்னர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்.
3-ல் ஒரு பங்கு பெண்களுக்கு
தமிழக வெற்றிக்கழகத்தில் குறைந்தது 3-ல் ஒரு பங்கு கட்சி பதவிகள், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படும். படிப்படியாக இது உயர்த்தப்பட்டு 50 சதவீதம் என்ற நிலையும் எட்டப்படும்.
அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும். பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்கப்படும்.
மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது போன்று, மாவட்டம் தோறும் மகளிருக்கான மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்கள் தனித்தனியாக அமைக்கப்படும்.
மனித குல அழிவுக்கு வழிவகுக்கின்ற உடல், மன, குண நலனுக்கு கேடாக அமையும் அறிவியல் சாராத சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும். தீண்டாமை என்பது குற்றம். இதை கடைபிடிப்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளை கொண்ட காமராஜர் மாதிரி அரசு பள்ளி ஒன்று உருவாக்கப்படும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்விக்கான தரம் உயர்த்தப்படும்.
தகவல் தொழில்நுட்ப துறைக்கென்று தனியாக அரசு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
மாவட்ட அளவில் அரசு பன்நோக்கு மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, அங்கேயே போதுமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வசதிகள் உருவாக்கி தரப்படும்.
புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்படும்.
புதிய ஏரிகள்,
நீர்தேக்கங்கள் உருவாக்கப்படும்
விவசாயிகளின் விற்பனை விலை மற்றும் நுகர்வோர் வாங்கும் விலை. இவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க அறிவியல் பூர்வமான முறை நடைமுறை படுத்தப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதேபோன்று ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள், விவசாய நிலங்கள் மீட்டெடுக்கப்படும். அதிக கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள், நீர்தேக்கங்கள் உருவாக்கப்படும்.
தமிழர்களின் மரபு தொழிலான பனைதொழில் மேம்படுத்தப்படும். ஆவின் பாலகங்களில் கருப்பட்டி பாலும் வழங்கப்படும், பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்.
நெசவாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள்…
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வாரத்துக்கு 2 முறை அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய உத்தரவிடப்படும். பள்ளி மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் சீருடைகள் நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அரசு உணவகங்கள் மற்றும் விடுதிகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர், கனிம வளங்கள் கொள்ளையை தடுக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும். நகரம், கிராமம் பேதம் களைய மாநகரங்களில் மக்கள் தொகையை குறைக்க மற்ற பகுதிகள் வளர்ச்சியடைய மண்டல வாரியாக பகுதிசார் வளர்ச்சி பரவலாக்கம் வழியாக மண்டலம் வாரியாக துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
தொழிற்சாலைகள் உரிய விதிகளை பின்பற்றுவதையும், அவற்றின் கழிவுகள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறாமல் இருப்பதையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயலிழந்து இருப்பதால், அந்த அமைப்பு சீரமைக்கப்படும். அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பளவு அதிகரிக்கப்படும்.
போதை பொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.