செய்திகள்

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பதில் தாமதம் ஏன்? மக்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி, பிப்.14-

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்று மக்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

சான்றிதழ் அவசியம்

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், கேரள எம்.பி. என்.கே.பிரேம சந்திரன், ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பாக துணைக்கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அளித்த பதில் வருமாறு:-

எந்த மாநிலத்துக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பது என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவு செய்கிறது. சட்டப்படி, ஜி.எஸ்.டி. இழப்பீடு பெற தலைைம கணக்கு அதிகாரியின் (ஏ.ஜி.) சான்றிதழ் அவசியம்.

அந்த சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், அது அந்த அதிகாரிக்கும், சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும் இடையிலான பிரச்சினை. அவர்கள் அதை தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கிடையே பிரச்சினை இருந்தால், மத்திய அரசுக்கு அந்த சான்றிதழ் வந்து சேராது.

அவரது சான்றிதழ் இல்லாமல், என்னால் ஒரு அளவுக்கு மேல் செயல்பட முடியாது.

கேரளா தரவில்லை

கேரளாவை பொறுத்தவரை, 2017-2018 நிதிஆண்டில் இருந்து ஒருதடவை கூட சான்றிதழ் அளிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு உரிய நேரத்தில் இழப்பீடு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறது.

எனவே, உறுப்பினர் என்.கே.பிரேம சந்திரன் மாநில அரசுடன் அமர்ந்து பேசி, தலைமை கணக்கு அதிகாரியின் சான்றிதழை மொத்தமாக அனுப்பச் செய்ய வேண்டும். அதை பெற்ற சிறிது காலத்துக்குள், இழப்பீட்டை விடுவித்து விடுவேன்.

வரி பங்கீடு விஷயத்தில், மாநில அரசுகளுக்கு ஒரு தவணைக்கு பதிலாக, 2 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. அதில், கேரளாவும் பலன் அடைந்துள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 2017-2018 நிதிஆண்டுக்கான தலைமை கணக்கு அதிகாரி சான்றிதழ் கிடைத்தது. இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டது. 2020-2021 நிதிஆண்டுக்கான தமிழ்நாட்டுக்கான இழப்பீட்டு தொகை ரூ.4 ஆயிரத்து 223 கோடி என்று தலைமை கணக்கு அதிகாரி சான்றிதழ் அளித்திருந்தார். அதில் சர்ச்சைகள் இருந்தபோதிலும், அதை பரிசீலித்து வருகிறோம். விரைவில் தொகை விடுவிக்கப்படும்.

இதுதவிர, அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த ஆண்டு மே மாதம்வரைக்கான இழப்பீட்டு தொகை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளிக்கப்பட்டு விட்டது. மொத்தம் ரூ.86 ஆயிரத்து 912 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *