செய்திகள்

மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

புதுடெல்லி, செப்.22-–

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்கள வையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினர். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது கூறியதாவது:-

நாம் ஒரு புதிய வளாகத்திற்கு வந்துள்ளோம், நாடாளு மன்றத்துக் கான புதிய கட்டிடம், புதிய இந்தியா. அடுத்த 100 ஆண்டுகளுக்காக கட்டப்பட்டுள்ள இந்த புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவது மிகச்சிறந்த தொடக்கம் ஆகும்.

மசோதா தொடர்பாக நாம் ஒருமித்த கருத்தை உருவாக்குவதும், பெண்களின் பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்பதைக் காட்டுவதும் முக்கியம்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த மசோதா மீது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மசோதாவுக்கு முழு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-– இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன். ஆனால் ஒரேயொரு அதிருப்தி. அதாவது தொகுதி வரையறைக்குப்பின்னரே இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று கூறும் 5-வது பிரிவு. அத்துடன் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இடஒதுக்கீட்டை அமல்படுத்து வதை தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைக்கக்கூடாது. இந்த மசோதாவுக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம். ஏனெனில் இது நிறைவேற்றப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

இதைப்போல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மசோதாவில் ஏன் இணைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மசோதாவை ஆதரித்து பேசினர்.

இரவில் மாநிலங்களவைக்கு வந்த பிரதமர் மோடி, இந்த மசோதா குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவர் கூறும்போது, ‘இந்த மசோதா நாட்டு மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அனைத்து உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், பெண் சக்தியை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன. மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டுக்கு வலுவான செய்தியை வழங்குவோம்’ என கூறினார்.

11 மணி நேர விவாதத்துக்குப் பின்னர் இரவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 215 உறுப்பினர்கள் வாக்களித்தனர். யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை.

கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நிறைவடைந்தது. அதன்பின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *