செய்திகள்

மாநகர பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தால் புகார் அளிக்கலாம்

போக்குவரத்துத் துறை உத்தரவு

சென்னை, பிப்.9–

மாநகர அரசுப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தால், அவர்கள் மீது புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

மாநகர அரசுப் போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தவாறு பேருந்துகளில் ஏறும், போதும், பயணம் செய்யும்போதும், பாதுகாப்பான விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகள் ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஒரு சில பேருந்துகளில் மாணவர்கள் படிகட்டு பயணம் தொடருவதால் மீண்டும் கீழ்வரும் இயக்க நெறிமுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.

அதன்படி, வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டலோ அந்த பேருந்தை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்து இயக்கத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல் துறை அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ மற்றும் மாநகர போக்குவரத்து கழக வான்தந்தி பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும்.

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *