வாழ்வியல்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தொழில் உரிமம் பெறுவது எப்படி?

இன்று தமிழ்நாட்டில் வணிகம், சேவை தொழில், குறு, சிறு, நடுத்தர, பெரிய தொழில்கள், தொழிற்சாலைகள் பல லட்சம் எண்ணிக்கையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை அரசின் பல துறைகளில் (உதாரணமாக மாசு கட்டுப்பாடு, ஜிஎஸ்டிவரி, பிளான் பெர்மிட், சிறு தொழில் மெமோரண்டம், தீயணைக்கும் படை, சுகாதாரம் மேலும்) பல அனுமதிகளை வாங்கி நடத்துகின்றன. மருந்து தயாரிக்க விரும்பினால் மருந்து கட்டுப்பாட்டு துறையிலும், உணவு சார் தொழில்களுக்கு உணவு பாதுகாப்பு துறையிலும் அனுமதி பெற வேண்டும். ஆனால் எந்த தொழில் தொடங்கினாலும் கார்ப்பரேஷன் அல்லது நகராட்சியில் தொழில் உரிமம் பெற வேண்டும்.

இத்திட்டத்தில் இத்தனை HP மோட்டார் வைத்துள்ளேன், இன்ன பொருளை தயாரிக்கிறேன், இத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்னும் தகவலை விண்ணப்பமாக கொடுத்து ‘தொழில் உரிமம்’ Licence பெற வேண்டும்.

பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, தீப்பெட்டி தயாரிப்பு, பெட்ரோல் பங்க், லேத், அச்சகம், பேக்கரி, பள்ளி, கல்லூரி, திருமண் மண்டபம், ஓட்டல், தேனீர் கடை, சில்லறை வியாபார நிறுவனங்கள் யாராக இருந்தாலும் இந்த லைசென்ஸ் பெற வேண்டும். விண்ணப்பிக்கும் போது ரூ.20 பத்திரத்தில் உறுதிமொழி தர வேண்டும். உரிமம் பெற்ற பின் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும்.

இது ஏன் வாங்க வலியுறுத்தப் படுகிறதென்றால், ‘இவர் தொடங்கும் தொழிலில் சத்தம் சருமா? தூசி வருமா? மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா? இவரது ஓட்டலில் வருவோரின் வண்டி நிறுத்த இடம் உள்ளதா? இதை ஆராய்ந்து இந்த உரிமம் வழங்கப்படும்.

இந்த உரிமம் பெற உதாரணமாக ஒரு தொழிற்சாலையை விண்ணப்பதாரர் தொடங்கி விரும்பினால்…

1) பத்திரம் (2) பட்டா (3) கட்டிட அங்கீகாரம் பெற்ற வரை படம் (4) வாடகை வீடு எனில் (கட்டிடம் எனில்) வீட்டு உரிமையாளர் ‘வாடகை ஒப்பந்த பத்திரம்’/NOC கடிதம் (5) வருமான வரி கட்டிய சான்று (6) தொழில் வரி (7)மாவட்ட தீயணைக்கும் படையிலிருந்து பெற்ற ஆட்சேபணை இல்லாச் சான்று (8) அக்கம் பக்கத்தில் வசிப்போரின் ஆட்சேபணை இல்லா சான்று (9) இதர தகவல்கள் கொடுத்து அதன் பின் தான் உரிமம் பெற முடியும்.

தங்கும் விடுதி/உணவு விடுதி எனில் குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு, வாகனம் நிறுத்த இடம், போக்குவரத்து போலீசாரின் சான்று, வரைபடம் போன்றவை கொடுத்து லைசென்ஸ் பெறலாம். அந்த கட்டிடம் காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதிகள், தீயணைப்பு கருவிகள், கட்டிட உயரம், போன்ற பல அம்சங்களை தொழிற்சாலை ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர், இதர அதிகாரிகள் குறிப்பு கேட்டு பின் உரிமம் வழங்கப்படும்.

இந்த உரிமம் பெற கட்டணம் செலுத்த வேண்டும். வேலை செய்வோர் எண்ணிக்கை படி தொழில் வரியும் கட்ட வேண்டும். இந்த உரிமம் பெறாவிட்டாலும், புதுப்பிக்கப்படவில்லை என்றாலும் அத்தொழிலை முடக்கி வைத்து, அபராதம் விதித்து சீல் செய்யும் சட்டத்தில் நடைமுறையில் உள்ளது. எனவே சட்டத்திற்குட்பட்டு இந்த உரிமத்தை தொழில்முனைவோர் பின்பற்ற வேண்டும்.

மேலும் விபரம் பெற:

www.tn.gov.in/local administration

www.india.gov.in/panchayatraj dept

www.greater chennai corparation.com

www.indcem.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *