செய்திகள்

மாதிரி ஓட்டு எண்ணிக்கை மையம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது: தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாராட்டு

சென்னை, மே 16
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மாதிரி மையம் அமைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்ட இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை 23–ந்தேதி நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை பணிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள், விவிபேட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் அந்தந்த தொகுதிகளுக்குள்பட்ட பல்வேறு கல்லூரிகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு முன்மாதிரி ஓட்டு எண்ணிக்கை மையம் ஏற்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதியான வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம் முன்மாதிரி ஓட்டு எண்ணிக்கை மையமாக அமைக்கப்பட்டிருந்தது.
தமிழக அதிகாரிகளுக்கு
பாராட்டு
இந்த மாதிரி ஓட்டு எண்ணிக்கை மையத்தை இந்திய துணைத் தேர்தல் ஆணையர்கள் உமேஷ் சின்ஹா, சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா, தேர்தல் ஆணைய இயக்குநர் நிகில்குமார், தேர்தல் செலவின இயக்குநர் திலீப் சர்மா ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த மையத்தில் மாதிரி ஓட்டு எண்ணிக்கை மையம் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். சுமார் ½ மணி நேரம் மையத்தை பார்வையிட்ட துணை ஆணையர்கள், தமிழக அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதன்பின்பு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷருமான பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓட்டு எண்ணிக்கையின் போது என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்றும், ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும்போது எந்த மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
3 அடுக்கு பாதுகாப்பு
ஒரு சட்டமன்ற தொகுதியில் 5 ஒப்புகை சீட்டு யந்திரங்கள் ‘ரேண்டமாக’ எடுக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்படும். ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்காக தனியாக வங்கிகளில் இருக்கும் காசாளர் அறையை போன்று ஒரு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டு சிலிப் வெளியே செல்ல முடியாத வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டு எண்ணிக்கை மையங்களிலும் இந்த சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு யந்திரத்தின் முடிவை அறிவிக்க சுமார் 30 முதல் 35 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒப்புகை சீட்டு யந்திரத்தை பொறுத்தமட்டில் ஒரு எந்திரத்தில் உள்ள ஓட்டு சீட்டுகளை எண்ணி முடிக்க சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம். இது அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும்.
தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதும் மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்களின் ஓட்டுகள் எண்ணப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு யந்திரத்தில் பதிவான ஓட்டுகளுக்கும், மொத்தம் பதிவானதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கும் சில நேரங்களில் சிறிய வேறுபாடு இருக்கலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளது.கண்ட்ரோல் யூனிட் பழுது, தொழில்நுட்ப பிரச்சினை போன்ற காரணங்களினால் சில மையங்களில் 3 அல்லது 4 மின்னணு ஓட்டுப்பதிவு யந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
இதன் காரணமாக வேறுபாடு இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில் என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. சென்னைக்கு உள்பட்ட 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *