சிறுகதை

மாதராய் பிறப்பதற்கு-ராஜா செல்லமுத்து

இது இயற்கையான சாவா இருக்குமா? இல்ல, யாராவது இவள அடிச்சு கொன்னுருப்பாங்களா? இப்படி ஆளாளுக்குஆள் சந்தேகக் கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தனர்.

போலீசுக்கு சொல்லியாச்சுல்ல.

ஆமா. வந்திட்டு இருக்காங்களாம் …

எப்பிடி இருந்த பொண்ணு, இப்பிடி ஆளு, அம்பு எதுவுமில்லாம அனாதைப் பொணமா வீதியில கெடக்கா..

நேத்துக் கூட பாத்ததா சொன்னாங்களே..நல்லா இருந்தா.

அவ பெயர் அமுதா. பேருக்கு ஏத்த மாதிரியே அவ்வளவு லச்சணம் ..அவ்வளவு அழகு.. என்று ஒருவர் பேசினார்.

அதை இடைமறித்த இன்னொருவர்,

அது சரிதாங்க , பொம்பள லச்சணமா இருக்கிறது” தப்பில்ல. ஆனா, அதே நேரத்தில ஒழுக்கமா கட்டுப்பாட்டோட , குடும்பம் குட்டின்னு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் அத விட்டுட்டு, அவுத்து விட்ட பசு மாதிரி அவ பாட்டுக்கு திரிஞ்சா எவன் அவள மனுஷியா நெனைப்பான். அவ தலையில. அவளே மண்ண வாரிப் போட்டுக்கிட்டது கெணக்கா, பாதகத்தி போய்ச் சேந்திட்டா என்று புலம்பினாள்.

ஒரு பெண்… உயிர் விட்ட உடம்பைக் கொண்டு அமைதியாகக் கிடந்தாள் அமுதா.

வருவோர் போவோரின் எச்ச எச்சில் வார்த்தைகள் அவளை மேலும் மேலும் காயப்படுத்திக் காயப்படுத்திக் குத்திக் கிழித்தது –

உசுரோட இருக்கும் போதும் சரி, செத்து இப்போது விறைத்துக் கிடக்கும் போதும் சரி, அவளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்ச்சிக்காமல் இல்லை.

இது தாங்க, கூனோ, குருடோ அமுதாவுக்குன்னு ஒரு துணை இருந்திருந்தா இப்பிடி நடந்திருக்குமா?

அவளும் ரொம்ப தப்புதான் பண்ணியிருக்கா? அதான் கடைசியில இப்பிடி ஆயிருச்சு… என்று ஒருவன் சொன்னான்,

உடம்பை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருந்த சேலையை ஓடிப்போய்ச் சரி செய்தாள் ஒரு பெண்.

இப்பவாவது அத செய்றீங்களே?அவ உசுரோட இருக்கும் போது, செய்த வேலைய இப்ப செய்றீங்க? என்று ஒருவர் நக்கலாகச் சொன்னார்.

அவ வேணும்னே இந்த வேலையச் செய்யலீங்க. காலம் தான் ஒரு மனுசன ஒசத்தும் ; எறக்கும்.

இது அமுதா விசயத்தில சரியாத்தான் போச்சு போல என்று ஒருவர் சொன்னதை இன்னொருவர் இடைமறித்தார் :

பொண்ணப் பெத்த ‘எந்த அப்பனும் ஆத்தாளும் தன்னோட பொண்ணு நல்ல முறையல தான் வாழணும்னு நெனச்சு ஒருத்தன் கையில புடுச்சிக் குடுப்பாங்க. அப்பிடி கை பிடிச்ச பய நல்ல முறையில தானே வச்சுக் காப்பாத்தணும். அத விட்டுட்டு சந்தேகம் .. எப்பப் பாத்தாலும் சண்ட சச்சரவுன்னு இருந்தா எந்தப் பொம்பளங்க குடித்தனம் பண்ண முடியும். அதான் பாதகத்தி மக பட்டுன்னு அவன விட்டு வெலகி வந்திட்டா’நாமளும் பொண்டு பொடுசுகள வச்சுருக்கோம். வாய்க்கு வந்தத பேசி ஒரு பொண்ண அவமானப் படுத்துறது அவ்வளவு உசித மில்ல என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மொய் மொய் என அவள் உடலைச் சுற்றி ஈ.மொய்த்துக் கொண்டிருந்தது.

ச்சே – எப்பிடிப்பட்ட பொம்பள இன்னக்கி ஈ மொச்சுக் கெடக்கா, புருசன விட்டுட்டு வந்த பொம்பள வயித்து பொழப்புக்காக, ஒரு ஆபீஸ்ல வேலைக்கு சேர, அங்க இருக்கிற மொதலாளியில இருந்து ஆபீசு முச்சந்தியில இருக்கிற கடக்காரன் வரைக்கும் அவளை வச்சு மோசம் செய்திருந்திருக்கிறாங்க.

ஒன்னா, ரெண்டா எத்தனையச் சமாளிப்பா?, அவளும் பொம்பள தானே. ஒரு நா ஒருத்தன் கிட்ட வழுக்கி விழுந்திட்டா. வழுக்கி விழ வச்சவன் வாழ்க்கை தருவான்னு நம்பி அவன் ஆடுற ஆட்டத்துக்கெல்லாம் மனுஷி ஆடிட்டா போல.

ஆடி ஓஞ்ச பெறகு அமுதா அவனுக்கு கசந்து போயிட்டா. வயித்தில பசி , வேற வழி தெரியல. அவன விட்டுட்டு இன்னொருத்தன்.இன்னொருத்தன விட்டுட்டு இன்னொருத்தன்; இப்பிடி தன்னோட தன்மானத்தையும் விட்டு, இந்த பூமியில உசுரு பிடிச்சு வாழ்ந்தா போதும்னு பாவம் அமுதா மானங்கெட்ட வாழ்க்கையத்தான் இத்தனை நாள் வாழ்ந்திட்டு இருந்திருக்கா? என்று அங்கு கூடியிருந்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி எப்படியோ வாழ்ந்த மகள் நடுரோட்டில் விறைத்த பிணமாகக் கிடந்தாள்.

சொய்ங் , சொய்ங். என்ற ஹாரன் சத்தம் கேட்க… போலீஸ் வண்டி வந்தது ; பிணத்தின் அருகே நின்றது.

போலீஸைப் பார்த்ததும் தெறித்து ஓடியது கூட்டம்.

பிணத்தைச் சுற்றி வந்தது போலீஸ்.

இந்த பொம்பள எப்பிடி செத்தாங்கன்னு தெரியுமா? தெரியாது என்றே அனைவரும் தலையாட்டினர்.

பிராஸ்டியூட் கேஸ் போல எவனாவது எதையோ பண்ணிட்டு போயிருப்பானுக. வீட்டுல ஆம்பள துணையிருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளியில போயி இப்பிடி திரியிற பொம்பளைக்கெல்லாம் கடைசியில இதான் கதி போல.

ஒழுங்கா ஒருத்தன் கிட்ட இருந்து வாழலாம இப்ப பாருங்க என்ன நிலைமைன்னு. பாடிய வண்டியில ஏத்துங்க என்றனர்.

அழகிய அமுதா இறந்து அழுகிய நிலையில் வண்டியில் ஏற்றப்பட்டாள், அதுவரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆணுக்கும் பெண்ணிற்கும் குடும்ப உறவின் மகத்துவங்கள் சுரீர் சுரிர் என்று முதுகில் உறைத்தது.

அங்கிருக்கும் பெண்கள் அத்தனை பேருக்கும் ….

‘‘மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா ’’ என்ற அந்த வரிகளின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *