சென்னை, மே 21–
விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள். அப்போது ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி புதிதாக மனுத்தாக்கல் செய்தார். ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து கேட்பதற்கான காரணங்களுடன் கூடிய மனுவை நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் தனித்தனியாக கார்களில் வந்து கோர்ட்டில் ஆஜராகினர். ஆர்த்தி தன் தந்தையுடன் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து கேட்பதற்கான காரணங்களுடன் கூடிய மனுவை நடிகர் ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆர்த்தி தரப்பில், “மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக நடிகர் ரவி வழங்க வேண்டும்” என்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களுக்கு நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர் நீதிபதி.
நடிகர் ரவி மோகன், ஆர்த்தியைக் காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இந்த வழக்கு மீண்டும் குடும்ப நல கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரவி மோகன் விவகாரத்து கோரிய வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
![]()





