சிறுகதை

மாண்புகளை மண்மூடும் மனங்கள் | செருவை நாகராசன்

Spread the love

“ ஆனந்துக்கு ஆக்ஸிடன்டா? எப்பம்மா…? அம்மா! என்னம்மா சொல்றீங்க…? ” என்ற அனிதாவின் அலறல் ஒலி நின்றது.

சில விநாடிகள் கழித்து “அய்யய்யோ… ஆக்ஸிடண்டா…? நிச்சயதார்த்தம் வச்சிருந்தாங்களேம்மா… இடுப்பு எலும்பு முறிவா… குணமாக மூணு மாசமாகுமா…! என்னம்மா சொல்றீங்க… சரிம்மா… நாங்க புறப்பட்டு வர்றோம்…” என்றபடி அண்ட்ராய்டு ஃபோனை காதிலிருந்து அகற்றினாள் அனிதா.

ஸ்மார்ட் டிவி மூலம் செய்திகளை உள்வாங்கிக் கொண்டிருந்த நான் எனது மருமகள் அனிதாவின் அலறலில் நிமிர்ந்து… “என்னாச்சும்மா… யாருக்கு ஆக்ஸிடண்ட்…” என்றேன் திடுக்கிட்ட குரலில்.

“திருச்சி சிவராமன் மாமா வீட்ல மூத்த பையன் ஆனந்துக்கு ஆக்ஸிடண்டாம். மதுரையில பொண்ணு பார்த்து இன்னும் ரெண்டு வாரத்துல நிச்சயதார்த்தம் மாமா… அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சி… சரியாக மூனு மாசமாகுமாம். ஆனந்தன் வேலைக்குச் சேர்ந்தே ஆறு மாசம்தான் ஆகுது. அவன் சிவராமன் மாமா குடும்பம் வறுமை நீங்கி நிமிர ஆரம்பிச்சது. அதுக்குள்ளே ஆண்டவனுக்குப் பொறுக்கலையே மாமா” என்றதும் நானும் பார்த்தேன்.

சட்டென்று எனது நினைவுகள் பின்னோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்தது.

எனது பேத்தியின் பெயர் சூட்டு விழாவின்போது எனது உறவினர் ஒருவர் “உங்கள் பேத்திக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்” என்றார். கவி யாழினி. ஆங்கிலத்தில் எழுதிக் காட்டினேன். ‘KAVI YAZHINI’ என்று.

உடனே அவர் ஒரு தாளில் எதை எதையோ எழுதியும் மனதில் ஏதோ கணக்குப் போட்டும் ஏதோ யோசித்துவிட்டும் ‘கவி’ என்ற முன்பெயரில் ஒரு ‘A’ மட்டும் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

அவர் சொல்கிறபடி பார்த்தால் ‘KAVI’ என்பது ‘KAAVI’ என்று மாறி அதாவது கவிஞன் என்பது புலவர் என்பது மாறி ‘சாமியார்’ என்று அபத்தமாக மாறிப் போய்விடும். எனவே ‘அதற்கு வாய்ப்பில்லை’ என்றேன்.

அந்த உறவினர் எட்டு, ஒன்பது வரை படித்தவர். ஒரு மில்லில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து பின்னர் குடும்பமில்லா அண்ணன் தந்த பேராதரவால் வசதிக்கு மறியவர். ஏதோ இருபது ரூபாய்க்கு சோதிட நூல் ஒன்றை மேலோட்டமாகப் படித்துவிட்டு தனக்கு பழக்கமான குடும்ப குழந்தைகட்கு அபத்தமான பெயர் வைப்பது ஏற்கெனவே உள்ள பெயர்களை பெற்றோர்களை ‘பயமுறுத்தல்’ செய்வது அபத்தமாக எவ்வித பொருளுமின்றி வாய்க்குள் நுழையாத பெயர் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு முட்டாள்கள் மத்தியில் தன்னை ஒரு அறிவாளியாகக் காட்டிக் கொள்ள நினைப்பவர்கள். சில அறிவிலிகளும் அவரது சொல் கேட்டு நடப்பதால் அந்த மூட நம்பிக்கையுடையவருக்குப் பெருமை வேறு.

அந்த உறவிடம் என்னிடம் உடனே “நீங்க பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க…” என்று அவரது அநாகரீகத்தினைப் பதிவு செய்தார்.

“பின்னாடி வருத்தப்படுவீங்க…” என்று பயமுறுத்தி அவர் என்ன சொல்ல வருகிறார்? குழந்தையை நோய் வந்து பாதிப்படையும் என்கிறாரா? அல்லது குழந்தை எதிர்காலத்தில் வறுமையுடனேயே வாழும்” என்கிறாரா? அல்லது குழந்தை வளர்ந்து ஆளானதும் நல்ல கணவன், நல்ல குடும்ப வாழ்க்கை அமையாது” என்று சொல்ல வருகிறாரா? பிறகு அந்த தீய எண்ணம் கொண்டவர் எந்த நஞ்சைக் கக்க நினைக்கிறார்.

பிறகு யாழினியின் உடல் நலத்தின் மீது என் கவனம் அதிகமாகியது. பேத்தி வளர வளர நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ல ஐந்தாண்டுகள் வளர அவளுக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறு காயம் என்றாலும் சில நாட்கள் தாமதிக்காமல் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்ட அன்றே குழந்தைகள் நல மருத்துவரைக் காண அவனோடு விரைந்து விடுவேன். அல்லது மகன், மருமகளை அனுப்பிவிடுவேன்; பிறகுதான் நிம்மதியாவேன்.

ஒரு தடவை யாழினிக்கு மர்ம காய்ச்சல்; வெளி நோயாளியாகப் பார்த்து சரியாகவில்லை. மருத்துவமனையில் அனுமதித்துப் பார்க்க வேண்டிய நிலை அதே நேரம்.-

மூன்றே நாட்களில்

எனக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கான நாள் திருச்சியில் ஒரு மருத்துவமனையில் அப்பாயின்ட்மென்ட் ஆகியிருந்தது. எனது துறையிலும் முன் அனுமதி பெறப்பட்டிருந்ததால் தேதியை மாற்றினால் சிக்கல் எற்பட்டுவிடும். அறுவை சிகிச்சைக்கான தொகையினை விண்ணப்பித்துப் பெற இயலாது. இந்த சூழ்நிலையில் யாழினிக்கு விட்டு விட்டு காய்ச்சல் வந்து கொண்டிருந்தது. இரண்டே நாட்களில் சோர்ந்து மெலிந்து போய்விட்டாள். இதைவிட குளுக்கோஸ் ட்ரிப் ஏற்றப்பட்டுக் கொண்டு இருந்தது.

காய்ச்சல் விட்டபாடில்லை. நான் மிகுந்த கவலைக்குள்ளானேன்.

அம்மருத்துவமனையின் மேனாள் இயக்குநர் 30 ஆண்டுகளாக எனக்கு மிக நெருங்கிய நண்பர்.

“மோகன்! நீங்க போய்ட்டு கேடராக்ட் ஆபரேசனை முடிச்சிட்டு வாங்க. அதுவும் ரொம்ப முக்கியம். குழந்தையோட பேரண்ட்ஸ் இங்கே ஹெல்ப்புக்குப் போதும். நீங்க கிளம்புங்க…” என்றவர் என் மனைவியிடமும் திரும்பி “நீங்களும் பொறப்படுங்கம்மா… சார் ஹெல்த்தைப் பாருங்க…” என்று அன்புக் கட்டளையிட எழுந்தோம்.

பேத்திக்கு எல்லாமே புரிந்துவிட்டது. “தாத்தா என்னை விட்டுவிட்டுப் போகப் போறீங்களா?” என்றாள் பரிதாபகரமான குரலில். அந்த வினாடி எனது உயிரே என்னிடம் இல்லை.

“இல்லைடா செல்லம். தாத்தாவுக்கு ஒரு ஊசி போடனும் போட்டுட்டு உடனே வந்திடுவேன். சரியா?”

இல்லே தாத்தா… நீங்க பொய் சொல்றீங்க தாத்தா… ஊருக்குத்தானே போறீங்க…” என்றாள் முகம் சுருங்கியவளாய்.

“இங்கே பாரு செல்லம். இந்த ட்ரிப் மருந்து இறங்குதா… இது முடிஞ்ச உடனே வந்துவிடுவோம். சரியா…?

பேத்தி தலையசைத்தாள் அரைகுறை சமாதானத்துடன். அவள் கண்கள் குளுக்கோஸ் பாட்டில் மீதே இருந்தன. “நான் பார்த்துக்கிறேன் மாமா… நீங்களும் அத்தையும் கெளம்புங்க. ஆபரேசனை நல்லபடியா முடிச்சிட்டு வாங்க மாமா…”

என்று மருமகளும் “நான் லீவு போட்டுட்டுப் பார்த்துக்கிறேன் அப்பா… நாங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கும்போது ஏன் கவலைப்படறீங்க…?”

என்று மகனும் ஆறுதலாய்ச் சொல்ல பிரிய மனமின்றி கனத்த நெஞ்சத்துடன் அங்கிருந்து அகன்றோம். மருத்துவமனையில் தங்கி அன்று காலை புறப்பட்டு மாலையில் அறுவை சிகிச்சை முடிந்து அறைக்குச் சென்று ஓய்வெடுத்து அடுத்த நாள் விடிந்ததும் மருத்துவரிடம் விடை பெற்று பத்து மணிக்கு பேத்தியிடம் வந்துவிட்டோம்.

“ஆபரேசன் முடிச்சிட்டு நீங்க உடனே வெளியே வரலாமா… இன்பெக்சன் ஆனா என்ன செய்வீங்க…? இப்படி இருக்கீங்களே மோகன்…” என்று மருத்துவர் என்னைக் கடிந்து கொண்டார். அவரது எச்சரிக்கையை மதித்து சில மணி நேரங்கள் வீட்டில் கண்களை மூடி ஓய்வெடுத்துவிட்டு மருத்துவ நண்பர் புறப்படும் நேரமறிந்து பேத்தியிடம் ஓடோடி வந்து விட்டேன்! நம் கண்களே பேரன் பேத்திகள்தான்… தீங்கு ஒன்றும் நேராது’ என்ற தளராத நம்பிக்கையில்.

மேலும் இரண்டு நாட்கள் தங்கியிருந்து நூறு விழுக்காடு பேத்தி குணமானதை உறுதி செய்து கொண்டு விட்டை வந்தடைந்தோம்.

சோகமும் துயரமும் ஆழ்ந்த அந்த ஏழு நாட்களிலும் “நீங்க பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க…” என்ற உறவினரின் ஆசிட் குரல் நினைவை விட்டகலாது. ஒரு நாளில் பத்து தடவையாவது வந்து வந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஜாதகம், ஜோதிடம், வீடு வாஸ்து, மனையடி சாஸ்திரம், தகடு வைத்தல், தாயத்து, நல்ல நாள், கெட்ட நாள், நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதெல்லாம் மூடர்கள் அப்பிக் கொண்டிருக்கும் அறுவெறுப்பான அழுக்கு இல்லாமல் வேறென்ன…? அந்த அழுக்கு நாற்றம் கொண்ட மனித உருவங்களோடுதான். நாமும் சேர்ந்து வாழ வேண்டியுள்ளது. பயிரில் களை மாதிரி. ஆனால் இங்கே களை அதிகமாக மண்டியும் சூழ்ந்து அவலமாகிவிட்டது. வாழ்வோம். அறிவு ஆயுதம் ஏந்தி களையைப் பிடுங்கி அறவே ஒழித்து பயிரைக் காத்திட உறுதி ஏற்போம்.

விழாக்களின் போது குழந்தைகளை வாழ்த்துவது முக்கியப் பண்பு; மாண்பு. மாறாக குழந்தையின் எதிர்காலம் குறித்து பயமுறுத்துவது, மகிழ்ச்சியில் மண்போட்டு மூட நினைப்பதன் மூலம் உறவினரே எதிரியானால் அவர் வாயை யார் அடைப்பது? தக்க தண்டனையை யார் தருவது?

ஐந்தரை மணியைப் போல அலுவகலகத்திலிருந்து வீடு வந்திருந்த மகன் இளங்கோவனும் தோளில் குழந்தையைத் தூங்க வைத்தபடி அனிதாவும் புறப்பட்டுத் தயாரான நிலையில் என் முன்னே வந்து நிற்கின்றனர்.

“இளங்கோவன்! சனி, ஞாயிறு ஆபீஸ் லீவுதானே… தங்கிப் பார்த்துட்டு வாங்க… கூடவேயிருந்து ஹெல்ப் பண்ணுங்க… பையனோட பேரண்ட்ஸ்க்கு தைரியம் சொல்லு… அப்பா ரொம்ப வருத்தப்பட்டாங்கன்னு சொல்லு… அனிதா! இந்தா ஐநூறு ரூபா… என் சார்பா இதுல பழங்கள் வாங்கிக் கொடு… ஜாக்கிரதையாகப் போயிட்டு வாங்க சரியா?” என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.

மன எண்ணங்களோ நீர் ஊற்றிய நெருப்புக் கட்டிகளாய் மாறியது. வில் சொல் அம்பும் தீயது! வில் விளை அம்பும் தீயது.! காயம் காணக் காத்திருக்கும் கயமையும் தவறு.! நாவில் கைகளில் அதை அகற்றுவதே நல்லது. அமைதி என்ன சரியா நின் மனமே.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *