சென்னை, டிச. 10–
மாண்டஸ் புயல் காரணமாக, 4 பேர் மின்சாரம் தாக்கி பலியானதுடன், வீடு இடிந்து 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
4 நாட்களாக தமிழ்நாட்டை பீதிக்குள்ளாக்கி வந்த மாண்டஸ் புயல், இன்று அதிகாலை 3 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த சூறைக்காற்று சென்னையை புரட்டி எடுத்துள்ளது. இதன் காரணமாக உயிர் சேதம், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 7 வது முதன்மை சாலையில் வாகன நிறுத்துமிடத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த லட்சுமி என்ற பெண்ணும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். குடிசை வீட்டில் இருந்த இவர்கள், புயலின் போது, பாதுகாப்புக்காக மற்றொரு வீட்டு வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றுள்ளனர். தூங்குவதற்காக பாய் எடுத்துக்கொண்டு வரும் போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
4 பேர் பலி; 3 பேர் காயம்
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு வட மாநில ஊழியர்கள் பலியாகி உள்ளனர். புயலால் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர். சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதியில் குடிசை வீட்டின் மீது, பக்கத்து வீடு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையும், தாயும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் நேரடி கள ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.