செய்திகள்

மாணவ – மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூர், பிப்.9–

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க அல்பெண்டசோல் மாத்திரைகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க அல்பெண்டசோல் மாத்திரைகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது:–

குடற்புழுத்தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு முதலிய பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் நேற்று (8-ம் தேதி) நடைபெற்றது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் இம்மாதம் 14-ம் தேதி அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது.

குடற்புழு நீக்கத்திற்காக அல்பெண்டசோல் மாத்திரைகள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 1 முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், பள்ளிச் செல்லாத 1 முதல் 19 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகளில் படிக்கும் (1 முதல் 12-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கும் அல்பெண்டசோல் மாத்திரை கீழ்காணும் விகிதத்தின்படி மையத்தில் வழங்கப்படும்.

1 முதல் 2 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை (200 மி.கி.), 2 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை (400 மி.கி.) வழங்கப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் மொத்தம் 8,14,067 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையான அல்பெண்டசோல் மாத்திரை அரசு மற்றம் அரசு உதவி பெறும் 1,466 பள்ளிகளிலும், 497 தனியார் பள்ளிகளிலும், 69 கல்லூரிகளிலும், 1,803 அங்கன்வாடி மையங்களிலும் மொத்தம் 3,835 மையங்களில் 2032 ஆசிரியர்கள் 1803 அங்கன்வாடி பணியாளர்கள் 532 சுகாதாரப் பணியாளர் மூலமாகவும் மொத்தமாக 4367 பணியாளர்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

தேசிய குடற்புழு நீக்க நாளில் மாத்திரைப் பெற முடியாத குழந்தைகளுக்கு 14–ந் தேதி அன்று அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கிருஷ்ணராஜ், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *