செய்திகள்

மாணவி வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடங்கியது

Makkal Kural Official

சென்னை, டிச. 30-

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலன் விசாரணை குழு விசாரணையை தொடங்கியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வெளியாட்கள் யாரும் அனுமதியின்றி உள்ளே செல்லாதபடி, முறையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், பல்கலைக்கழக வளாகத்தில் 140 காவலாளிகள் ரோந்து பணியில் 3 ‘ஷிப்டு’ அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தலையிட்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். ஆனால் இந்த விசாரணை போதாது என்றும், அண்ணாநகர் துணை கமிஷனர் புக்யா சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐய்மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் எஸ்.பிருந்தா ஆகிய 3 பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு இனிமேல் இந்த வழக்கை விசாரித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது. இவர்களுக்கு தேவையான வசதி, வாய்ப்புகளை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

3 பெண் போலீஸ் அதிகாரிகளும் இந்த வழக்கின் சிறப்பு விசாரணைக்கான ஆயத்த பணிகளை நேற்று தொடங்கிவிட்டனர். கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த எஃப்ஐஆர், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள் ஆகியவை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று விசாரணையை தொடங்கினர். ஞானசேகரனின் செல்போனில் இருந்த வீடியோக்கள், எஃப்ஐஆர் தகவல் கசிந்தது, அதை 14 பேர் பார்வையிட்டது ஆகியவை தொடர்பாகவும் விசாரணை தொடங்கியது. இவர்களுக்கு துணை புரிவதற்காக இதர போலீஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்று சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மாணவியிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

தேசிய மகளிர் ஆணையம்

இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் உறுப்பினர்கள் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பு குறைபாடாக விளங்கக்கூடியவை எவை என்பது குறித்து ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். மாணவியின் முழு விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் ஆணையம் விசாரணை நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் குழுவினர் பேசவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *