செய்திகள்

மாணவி பிரியா மரணம்: மருத்துவக் குழுவின் முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னைநவ. 16–

மாணவி பிரியா மரணம் தொடர்பான மருத்துவக் குழுவின் முழு அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது மக்களுக்கு கொசு வலைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:–

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் நீர் வழி தடங்களுக்கு அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கொசு வலைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அடையாறு ஆற்றங்கரைகளின் அருகாமையில் வசிக்கும் கோதமேடு, திடீர் நகர், சலவையாளர் காலனி, சலவைத்துறை, சூரியா நகர், கெனால் பேங்க் சாலை ஆகிய பகுதிகளில் இன்று கொசு வலைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் மட்டும் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலைகள் வழங்கப்பட உள்ளது. பருவமழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்த் தொற்றுகளை தடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

சென்னை மாநகரில் மட்டும் செப்டம்பர் 21–ந்தேதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் 3,562 நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 919 நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்த மருத்துவ முகாம்களில் 216 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 516 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரில் நாள்தோறும் 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் ஒரே நாளில் 200 இடங்களில் 200 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதன்மூலம் 90,000 நபர்கள் மருத்துவப் பயன் பெற்றுள்ளனர்.

சென்னை மாநகரில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காப்பதற்காக கொசு மருந்து தெளித்தல், கொசுப் புகை மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள 3,278 களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொசு ஒழிப்பு பணிகளுக்குத் தேவையான பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. 229 கைத்தெளிப்பான்கள், 120 விசைத் தெளிப்பான்கள், 31.29 டன் பிளீச்சிங் பவுடர், 93,189 குளோரின் மாத்திரைகள், கையினால் இயக்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் 229, பூச்சிக்கொல்லி மருந்துகளான பைரித்ரம் 3,180 லிட்டர், டெமிபாஸ் 2,460 லிட்டர், கொசு தெளிப்பான்கள் 6,900 லிட்டர் கையிருப்பில் உள்ளன. டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாட்டில் அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுத்து வருகிறார்.

மருத்துவர்களை

போலீசார் தேடுகின்றனர்

மாணவி பிரியா உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட பிறகே உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கையை வைத்து தான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை போலீசார் தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்.

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்தில் பலர் உயிரிழந்த பொழுது ‘இது கடவுளின் விதி’ எனக் கூறி தப்பித்தது போன்று நாங்கள் செயல்படவில்லை. கவனக்குறைவு காரணமாக இது நடைபெற்றது என்ற தவறை உடனே தெரிவித்து அதற்கு தீர்வு என்ற அடிப்படையில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அதனை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *