சென்னை, ஜன.5-
என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிரணி தலைவி உமாரதி ராஜன், நடிகைகள் ராதிகா, குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி, முன்னாள் மேயர் கார்த்தியாயினி உள்ளிட்டோர் நேற்று மாலையில் சந்தித்தனர்.
அப்போது அவர்கள், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற பரிந்துரைக்க வேண்டும் என்று மனு அளித்தனர். மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்ற பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பட்டியலை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
கவர்னரை சந்தித்த பின்னர், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களுக்கான பிரச்சினைகளை பெண் தலைவர்கள், தமிழக வீதிகளில் வந்து குரல் எழுப்ப முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதற்கு, வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் எங்களின் கருத்துகளை சொன்னோம். அதை கனிவாக கேட்டறிந்தார். இந்த ஒரு வழக்கு மட்டுமல்லாது, ஆளும் தி.மு.க. கட்சியால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளோம்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பல்கலைக்கழகங்களுக்குள் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. மாணவி வன்கொடுமை வழக்கில் என்ன மறைக்க பார்க்கிறீர்கள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பாதது ஏன்?
எங்கோ ஒரு மாநிலத்தில் இதுபோன்ற பிரச்சினை என்றால் பேசும் முதலமைச்சர், தனது மாநிலத்தில் நடக்கும் இந்த பிரச்சினை குறித்து ஏன் வாய் திறக்கவில்லை. இதில், விசாரணை முடிந்தால் யார் அந்த சார்? என்பது தெரிந்துவிடும் என்கிறார் தி.மு.க. எம்.பி. கனிமொழி. விசாரணை சரியாக நடக்காது என்பதால்தான் நாங்கள் பயப்படுகிறோம்.
தி.மு.க அரசு குற்றவாளிகளுக்கு உறுதுணையாக உள்ளது. போராடும் பெண் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் கைதாக வேண்டிய குற்றவாளிகள் வெளியில் நடமாடுகிறார்கள். இதுதான், திராவிட மாடல் அரசு. சி.பி.ஐ. விசாரணை வந்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், பா.ஜ.க.வுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக, பெண் தலைவர்களுக்கு அனுமதி கிடையாது. வீட்டு காவலில் வைத்துள்ளார்கள். இதற்கு தி.மு.க. பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.