செய்திகள்

மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்

Makkal Kural Official

பள்ளி செயலாளர், முதல்வர் கைது

தூத்துக்குடி,

மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பள்ளி செயலாளர் மற்றும் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைச் சேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவ-மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றார். அங்கு முதல் நாள் போட்டி முடியாததால் மறுநாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் இரவில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். அப்போது, பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி சிதம்பரநாதன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் பாலசுந்தரம், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பள்ளி நிர்வாகம், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக துணை சூப்பிரண்டிடம், பெற்றோர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கோவையில் பதுங்கிய இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் நேற்று இரவில் கைது செய்தனர். அவரை திருச்செந்தூருக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே இந்த சம்பவத்தில் அவர் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உடன்குடியில் பள்ளி மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் சுவீட்லி, செயலாளர் செய்யது அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரை திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *