சென்னை, டிச. 30-
மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 பேராசிரியைகள் கொண்ட பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வெளியாட்கள் யாரும் அனுமதியின்றி உள்ளே செல்லாதபடி, முறையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு தொடர் நடவடிக்கைகளுக்காக குழுக்கள் அமைக்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடக்கிறது.
16 பேராசிரியர்கள் குழு
அதன்படி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டும், அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் 16 பேராசிரியைகள் கொண்ட பாதுகாப்புக்குழுவை அமைத்து பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்புக்குழு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த குழுவில் பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், பல்கலைக்கழக வளாகத்தில் 140 காவலாளிகள் ரோந்து பணியில் 3 ‘ஷிப்டு’ அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 49 பேரும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை 49 பேரும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை 42 பேரும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்து, அதன்படி, கூடுதலாக 40 காவலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கிறது. காவலர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவ்வப்போது தணிக்கை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் 70 கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாகவும், அதில் 56 கேமராக்கள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புக்கான நடவடிக்கைகளில் பிரதானமாக கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே பழுதாகியிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், கூடுதலாக 30 கண்காணிப்பு கேமராக்களை புதிதாக பொருத்தவும் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல்கலைக்கழகத்துக்குள் செயல்பட்டுவரும் விடுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கையில் எடுக்கவும் வார்டன்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.