செய்திகள் நாடும் நடப்பும்

மாணவர் மனநலம் மேம்பட முதல்வர் ஸ்டாலின் திட்டம்


ஆர். முத்துக்குமார்


சமீபமாக தேசிய ஊடகங்களில் கூட தலைப்புச் செய்தியாக மாணவியின் மர்ம சாவு, பிறகு மருத்துவ நுழைவுத் தேர்வு நேரத் தற்கொலைகள் போன்ற சம்பவங்களை தொடர்ந்து மாணவ – மாணவிகளின் மனநலம் சார்ந்த விழிப்புணர்வின் அவசியம் நிபுணர்களை யோசிக்க வைத்து வருகிறது.

தற்கொலை என்பது ஒருவரின் மனநிலையை சார்ந்தது. அதை உணர அவரின் சமுதாய கட்டமைப்பும் தவறி விட்டால் துர்சம்பவம் நடந்து விடுகிறது. குறிப்பாக பெற்றோர், நட்பு வட்டம் மற்றும் சமூக வலைதள வட்டம் ஒருவரின் மாற்றத்தைப் புரிந்து உதவிக்கரம் நீட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிகளுக்கே சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் குழுவினர், 805 வாகனங்களில் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மாணவர்கள் தன்னம்பிக்கை பெற்று விட்டால் படிப்பு தானாகவே வந்துவிடும். அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகத்தான் இந்த ஆலோசனை முகாம் நடத்தப்பட உள்ளது. மனமும் உடலும் சரியாக இருந்தால் அனைத்து நலன்களும் சிறப்பாக இருக்கும். எப்போதும் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறித்தனம்தான் நம் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாகும். சுறுசுறுப்பு உணர்வுக்கு உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு உடற்பயிற்சியும் நல்ல எண்ணங்களும்தான் அவசியம். இந்த அறிவுரைகளை முதல்வராக இல்லாமல் உங்கள் பெற்றோர்களில் ஒருவனாக இருந்து முன் வைக்கிறேன்.

பள்ளிகள் பாடங்கள் நடத்துவதுடன் அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றையும் வளப்படுத்த வேண்டும். பாதி பெற்றோர்களாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். கல்வி நிலையங்கள் மதிப்பெண் மையங்களாக இல்லாமல், மதிப்புயர் கூடங்களாக மாறவேண்டும். மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற அதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்சனைக்கு தரும் முக்கியத்துவம் புரிகிறது. ஆசிரியர்களால் 30 மாணவ மாணவிகள் படிக்கும் வகுப்பில் ஒரு மாணவரின் மனநிலையை புரிந்து கொள்வதில் குறைபாடுகள் இருக்கிறது.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் அருகாமையில் குடியிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை, வங்கி ஊழியர் அதிகாரிகளை மாணவர்களுக்கு ஆலோசனை தரும் தன்னார்வம் பெற்றவர்களை இப்பணியில் ஈடுபட வைக்கலாம்.

மதம், இனம், அரசியல் விவகாரங்களை எடுத்துக்கொள்ளாமல் இதர பல்வேறு விஷயங்களை மாணவர்களுடன் கலந்துரையாடி நல்ல வழிகாட்டிகளாக மாறலாம்.

தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு முறையும் இது போன்ற அரசு அதிகாரிகளின் ஈடுபட்டால் தான் சிறப்பாக நடைபெற்று வருவதை கண்டு வருகிறோம்.

அதைப் போன்றே மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இது போன்ற தன்னார்வலர்களை உதவிட புதிய பாதையை உருவாக்க யோசித்தாக வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published.