தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவு
சென்னை, ஏப்.3-
மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளூர் மொழி உள்ளிட்ட இருமொழிகளில் தேர்வுக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்வி சார்ந்த இளநிலை என்ஜினீயரிங் மற்றும் டிப்ளமோ படிப்புகளை இந்திய மொழிகளில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) ஊக்குவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தேர்வுக்கான வினாத்தாள்களையும் உள்ளூர் மொழி உள்ளிட்ட இருமொழிகளில் தயாரிக்க தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இதுதொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ. ஆலோசகர் (கொள்கை மற்றும் கல்வி திட்டமிடல்) மம்தா ஆர்.அகர்வால், அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அனைத்து மாநில தொழில்நுட்ப கல்வி இயக்ககம், ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள், முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாணவர்கள் பலருக்கு ஆங்கில புலமை இல்லை. எனவே இந்திய மொழிகளில் தேர்வு வினாத்தாள்களை வழங்குவதன் மூலம் கல்வி நிறுவனங்கள் பலதரப்பட்ட மாணவர்களை சேர்க்க முடியும். மாணவர்களின் அறிவு, திறன்களை வெளிப்படுத்துவதற்கு மொழிகள் ஒரு தடையாக இருக்கக்கூடாது. மொழி புலமை என்பது ஒரு மாணவரின் செயல் திறனை கணிசமாக பாதிக்கும்.
உள்ளூர் மொழி உள்ளிட்ட இருமொழிகளில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டால், கேள்வியின் முக்கிய நோக்கத்தை மாணவர்களால் புரிந்து கொள்ள முடியும். மேலும் அவர்களின் உள்ளூர் மொழி வாயிலாக அதற்கான பதிலை வெளிப்படுத்தவும் இது உதவும். மொழி புலமைக்கு மாறாக பாட அறிவின் அடிப்படையில்தான் மதிப்பீட்டு செயல்முறை இருக்கிறது.
இந்திய மொழிகள் கலாசார அடையாளமாக இருக்கின்றன. உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் இந்த தேர்வு வினாத்தாள் தயாரிப்பு உதவும். அதுமட்டுமல்லாமல் உலக நிகழ்வுகளை உள்ளூர் மாணவர்கள் மிக எளிமையான முறையில் புரிந்துகொள்ளவும் முடியும்.
பொதுவாக மாணவர்கள் கேள்விக்கான பதில்களை அறிந்திருந்தாலும், மொழித் தடையின் காரணமாக, அவர்களால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. இருமொழி வினாத்தாள் தயாரிப்பால், கேள்விகளுக்கு திறம்பட அவர்கள் பதில் அளிக்கலாம். இது மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும்.
இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டதற்கு முக்கிய காரணம், பின்தங்கிய பகுதிகளில் எழுத்தறிவு விகிதத்தை அதிகரிப்பதும், இடைநிற்றலை குறைப்பதும் ஆகும். இதன் மூலம் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும். அந்தவகையில் உள்ளூர் மொழி உள்ளிட்ட இருமொழிகளில் தேர்வுத்தாள்களை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.