சென்னை, ஜூன்.15-
பள்ளிகள் துவங்கி இரு வாரங்கள் ஆன நிலையில், தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தில், மாணவர்கள் சேர்க்கையை பூர்த்தி செய்யாத தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-–
ஏழை, எளிய மாணவர்கள், யாரிடமும் கையேந்தாமல் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்.
இந்த சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றார்கள். மேலும், சுமார் 1 லட்சம் குழந்தைகள் எல்கேஜி எனப்படும் அறிமுகக் கல்வி வகுப்பிலும் சேர்ந்துபடித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழக அரசே செலுத்தும். அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலங்களில் இந்த கல்வித் தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது.
ஒவ்வொரு வருடமும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் பெற்றோர்கள், ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஒரு மாத காலம் இதற்கென பிரத்யேகமாக உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மே மாத இறுதியில் ஒவ்வொரு பள்ளியிலும் வரப்பெற்றுள்ள விண்ணப்பங்கள் குலுக்கல் மூலம் பரிசீலிக்கப்பட்டு, 25 சதவீத மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனால் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மற்ற மாணவர்களுடன் கட்டாயக் கல்வி உரிமைத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களும் பள்ளிகளுக்குச் செல்வார்கள்.
ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதிவரை இந்த திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் திறக்கப்படவேயில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அண்ணா தி.மு.க.வில் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப்படி இருந்தும், விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு கட்டாயக் கல்வி உரிமை சேர்க்கை இணையதளம் திறக்கப்படவில்லை என்றும்; மத்திய அரசு இந்த திட்டத்திற்கான நிதி கடந்த ஆண்டுகளில் விடுவிக்கவில்லை என்றும், இதனால் தனியார் பள்ளிகளில் இந்த திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வித் தொகை நிலுவையில் உள்ளதால், 2025-–26ம் கல்வியாண்டிற்கான நிதி வழங்கினால்தான் இந்த ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டதிட்டத்தின் கீழ் கட்டாய கல்வி சேர்க்கை நடைபெறும் என்று பொறுப்பற்ற முறையில், ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கனவை தகர்க்கும் நோக்கத்தில் துறையின் அமைச்சரும், பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்தது.
இந்நிலையில், ஏற்கெனவே இந்தத் திட்டத்தின் மூலம் படித்து வரும் மாணவர்களின் நிலுவையில் உள்ள கல்விக் கட்டணம் மற்றும் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்துமாறு தனியார் பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்துகின்றன. பணம் இல்லாத ஏழை, எளிய பெற்றோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
மாநில அரசு இந்த திட்டத்தின் இணையதளத்தை திறக்காதது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தனியார் அமைப்பு கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் 2025–-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்கிட மாநில அரசுக்கு உத்தரவிட வழக்கு பதிவு செய்தனர். அவ்வழக்கில் இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு – மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக கட்டாய கல்வி திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறும்; மாநில அரசும், மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல் உடனடியாக மாநில அரசின் நிதியை கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யுமாறு தீர்ப்பளித்துள்ளது.
எனவே, மத்திய அரசு பணம் தரவில்லை என்று காரணத்தைக் கூறி, மாநில அரசு தட்டிக்கழிக்காமல் உடனடியாக மாநில நிதியில் இருந்து இத்திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறும், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு இச்சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து விலகிக்கொள்ளக் கூடாது என்றும், ஒவ்வொரு வருடமும் போதுமான கால அவகாசம் எடுத்து கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மற்ற மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதுபோல் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களும் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியும்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசிடம் வலியுறுத்தி கட்டாய கல்வி திட்டத்தின் நிதியைப் பெறுவதற்கு வக்கில்லாமல், இந்த ஆண்டு இந்த திட்டத்தின் சேர்க்கைக்கான இணையதளத்தை திறக்காமல் ஏதேதோ காரணம் கூறி காலதாமதம் செய்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதை விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தன்னுடைய பிள்ளைகள் நலனில் மட்டுமே அக்கறை கொள்ளும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பிள்ளைகள் மீதும் அக்கறை கொண்டு, மாநில நிதியில் இருந்து கட்டாய கல்வி உரிமை திட்டத்திற்கான நிதியை விடுவித்து, 25 சதவீத மாணவர் சேர்க்கையை உடனடியாகப் பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.