செய்திகள்

மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகமே பொறுப்பு

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை, ஆக. 16–

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்திற்குள் மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவத்திற்கு அப்பள்ளி தரப்பில் பொறுப்பாக பதிலளிக்காமல் பெற்றோரை அலைகழித்ததால் பொதுமக்கள் சிலர் பள்ளியை சேதப்படுத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதிமொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. அதில் பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என குறிப்பிடப்பட்டு இருந்ததாக புகார் எழுந்தது சர்ச்சையானது. இப்படிவம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.

பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

இதனை தொடர்ந்து, கல்வித்துறை சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதில் பள்ளி நேர வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியதாவது:–

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின் சில தனியார் பள்ளிகள் உறுதிமொழி பத்திரத்தில் பெற்றோரிடம் கையெழுத்து பெறுவதாக புகார் எழுந்தது. ஆனால் பெற்றோர் தரப்பில் எந்த புகாரும் பதிவாகவில்லை. இதனால் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் புகார்கள் பெறப்பட்டு விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெற்றோர்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.