செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.305 கோடி ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 20–

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்காக இந்த ஆண்டு ரூ.305 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்‌ திறனாளிகளுக்கான உரிமைத்‌ திட்டம்‌ 2023–24ம்‌ ஆண்டில்‌ 15 மாவட்டங்களில்‌ செயல்படுத்தப்படும்‌. உடல்‌ குறைபாடு மதிப்பீட்டுச்‌ சான்றளித்தல்‌, ஆரம்ப நிலை சிகிச்சை போன்ற சேவைகளை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள்‌ அமைக்கப்படும்‌. மேலும்‌, வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காகவும்‌ பல்வேறு நலத்திட்டங்களில்‌ சலுகைகளைப்‌ பெற உதவுவதற்காகவும்‌ தன்னார்வலர்களைக்‌ கொண்ட 150 அண்மை மையங்கள்‌ உருவாக்கப்படும்‌.

மாநிலம்‌ முழுவதும்‌ 6.84 லட்சம்‌ மாற்றுத்திறனாளிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ அவர்களின்‌ ஓய்வூதியத்தை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும்‌, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும்‌ உயர்த்திட முதலமைச்சர்‌ ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார். இதற்கென, வரவு–செலவுத்‌ திட்டத்தில்‌ 1444 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுத்‌ திட்டங்களின்‌ பலன்கள்‌ முழுமையாக மாற்றுத்திறனாளிகளைச்‌ சென்றடைய, மாற்றுத்திறனாளிகள்‌ பற்றிய ஒரு விரிவான தரவுத்தளத்தை அரசு உருவாக்கி வருகிறது. இதன்‌ முதற்கட்டமாக, பல்வேறு அரசு நலத்திட்டங்களில்‌ பயன்பெறும்‌ 9 லட்சத்து 8,000 பேர்களின்‌ விவரங்கள்‌ கொண்ட தரவுத்தளம்‌ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர்‌

பள்ளிக்கல்வி மற்றும்‌ உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 252 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மிதிவண்டிகள்‌ வழங்குவதற்காக 305 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரவு–செலவுத்‌ திட்டத்தில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறைக்கு 1580 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *