செய்திகள் நாடும் நடப்பும்

மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைப்பது ஸ்டாலின் திட்டம்

Makkal Kural Official

நாடும் நடப்பும் – ஆர் முத்துக்குமார்


மக்களின் கேள்விகளுக்கு “உங்களில் ஒருவன்” நிகழ்ச்சியின் வாயிலாக பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் அணுகுமுறையையும் நிதி ஒதுக்கீட்டின் குறைப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய அரசால் தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைவாகவே உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டின் பெயரையே கூட ஒன்றிய பட்ஜெட்டில் நினைவுபடுத்தவில்லை. அது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

தமிழக மாணவர்களின் கல்வி உதவித்தொகைகளுக்கான நிதியைக் கூட நிறுத்தியுள்ள நிலையில், “கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து” என்றும் அது தலைமுறையின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வித் துறையில் இன்னும் பல புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மாநிலங்களை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுவதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் நிதி பங்கு குறித்த நேர்மறையான நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில், மாறாக, “திட்டங்களை மாநில அரசின் சொந்த நிதியை வைத்து நடத்துங்கள்” என்று கையெடுத்து கும்பிடுகிறார்கள் என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

மாநில அரசின் சொந்த நிதியை வைத்து செயல்படுத்தப்படும் பல புதிய திட்டங்களை முதல்வர் அடுக்கினார்:

*காலை உணவுத் திட்டம்,

*இல்லம் தேடிக் கல்வி,

* எண்ணும் எழுத்தும்,

* நான் முதல்வன்,

*புதுமைப்பெண்

*தமிழ்ப்புதல்வன்

ஆகிய இந்தத் திட்டங்கள் குறிப்பாக பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக முக்கிய பங்காற்றி வருவதாகவும், பெண்களுக்கான பணிநியமனங்கள் அதிகமாக உள்ளதை தனது பெருமையாக கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநில அரசு பல திட்டங்களை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் போதிலும் ஒன்றிய அரசு தர வேண்டிய நிதி பங்களிப்புகள் கிடைத்தால், அந்த திட்டங்களை இன்னும் விரிவாக, சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என அவர் உறுதிபட கூறினார். ஏற்கனவே கிடைத்து வந்த நிதியைக் கூட நிறுத்துவது ஒன்றிய அரசின் அநீதியான நடவடிக்கையாக ஸ்டாலின் சாடினார்.

மக்கள் நலனே முதன்மை” என்ற தத்துவத்தோடு செயல்படும் தமிழக அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசின் உரிய பங்கும் தேவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த இருவாரங்களில் தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படும் நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் சில திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு அதன் பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என அறிவித்தது பல்வேறு தரப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தனர், அது போன்றே தமிழ்நாடு பட்ஜெட்டிலும் மக்கள் எதிர்பார்க்கும் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தரப்பில் இதுதான் கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டாகும். அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்பதால், இந்த பட்ஜெட்டிலேயே பல்வேறு நலத்திட்டங்களை தமிழகம் எதிர்பார்ப்பதை ஸ்டாலின் அறிவார்!

அதையெல்லாம் அமுல்படுத்த தமிழக கஜானா உறுதுனையாக இருக்குமா? அதை எப்படி சமாளிப்பார் என்பதை சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் தான் நமக்கு தெரியப்படுத்தும்.

“ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் , மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகை உள்ளது என தமிழக அரசு இம்மாத துவகத்தில் ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது.

இப்படி வசூலிக்கவே முடியாத நிலுவைத் தொகையை முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தமிழக அரசு அதிரடி முடிவு எப்படி செயல்வடிவம் பெறும் என்பதை பட்ஜெட்டில் தெரியவரும்.

இது கிட்டத்தட்ட 30 வயதுக்கு உட்பட்ட தமிழக மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்பது போல இருக்கும், அதை ஏழை மாணவர்கள் அனைவரும் பலன் பெறும் வகையில் அறிவிக்கப்பட்டால் பல குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *