சிறுகதை

மாட்டு வண்டி | ராஜா செல்லமுத்து

செம்மண் பூத்த புழுதி மண்ணில் மாடுகளின் காலடித் தடங்கள் பதிந்து கிடந்தன. மாட்டுவண்டி சக்கரத்தின் அச்சு கொஞ்சம் கூட அழியாமல் இருந்தது.

ஊரு சனம் எல்லாம் மாட்டு வண்டி பாதையில் அழுது கொண்டே சென்றார்கள். அது ஒரு கார்காலம். குளம்படிகளில் கூட நீர் கொப்பளித்துக் கிடந்தது.

மழை பெய்த பொழுது, மாட்டு வண்டி ஓட்டிப் போன மாரிமுத்து வீடு வந்து சேரவில்லை” என்று சொந்த பந்தங்கள் சாதிசனம் என அத்தனை பேரும் மாட்டு வண்டியின் தடத்தைக் கொஞ்சம் கூட பிசகு விடாமல் அதன் தடத்திலேயே நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

எப்போதுமே இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை வந்துட்டுப் போற மாரிமுத்து இன்னிக்கி காலைல இருந்து காணலையே ? என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ ?என்று மனைவி நெஞ்சிலும் தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டு போனாள். மாரிமுத்துவின் பிள்ளைகள் வாய் விட்டு அழுத படியே வார்த்தைகள் வராமல் தேடிக் கொண்டே சென்று கொண்டிருந்தார்கள்.

காலையில ஒரு டைம் வந்தாரு. அதுக்கப்புறம் ஒரு டைம் வந்தாரு அதுக்கப்புறம் போன மனுசனை இன்னும் பார்க்கலையே? ஒருவேளை மண் அள்ளக் கூடாதுன்னு போலீஸு பிடிச்சிட்டு போச்சா? இல்ல வேற எதுவுமோ? அப்படின்னா மாடுக மாட்டுவண்டி இருக்கணுமே ….ஆளு வந்து சேரல இதுல ஏதோ வில்லங்கம் இருக்குபா என்று பேசிய ஊருசனம் மாட்டு வண்டியின் தடத்தை பிடித்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தது…

காடு ,கரை, ஓடை, உடைப்பு என்று சென்று கொண்டிருந்தது. பொதுமக்கள் மாரிமுத்துவை காணாது திகைத்தார்கள் ….

கொஞ்ச தூரம் அவரை தேட வேண்டியதாகப் போயிற்று. திசைக்கொன்றாய் தேடிய மனிதர்களுக்கு, அவர் தென்படவே இல்லை . ஆனால் மாட்டு வண்டி தடம் ஓரிடத்தில் காணாமல் போக, அவர்களால் மாடு போன திசையை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

மேலும் மழை பெய்ய தொடங்கியது. சின்ன தூறல் விழுந்து கொண்டிருந்தன. அந்தத் தூறலில் நனைந்து கொண்ட மக்கள் தலையில் துாண்டு,சாக்கு, சேலை என முக்காடு போட்டபடி மாரிமுத்துவைத் தேடும் படலம் ஆரம்பமானது.

பெரிய பெரிய ஓடை இரண்டு பக்கமும் பெரிய பெரிய கரைகள். அதற்கான சாத்தியக்கூறுகள் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அங்கேயும் இடிந்து விழுந்து அங்கங்கே ஓடைகளில் மண் நிரம்பிக் கிடந்தன. மலைகளில் பலத்த மழை பெய்ததால் ஓடையில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது… இதனால் மாரிமுத்துவை தேடும் படலம் கொஞ்சம் தடைபட்டது ….அங்கேயும் இங்கேயும் என்று தேடிக்கொண்டே இருந்தார்கள் ஆனால் தென்படவே இல்லை.

மாரிமுத்துவின் மனைவியோ ஒப்பாரி வைத்து அழுது கொண்டே இருந்தாள். அவளின் விரலைப் பிடித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளும் அழுதபடியே சென்று கொண்டிருந்தன.

ஆறுதல் சொல்வதற்கான ஆட்கள் அங்கே இல்லவே இல்லை….மாரிமுத்துவைத் தேடும் படலம் மட்டுமே அங்கு நிகழ்ந்துகொண்டிருந்தது. ஊர் முழுவதும் தேடிக் கொண்டிருந்தார்கள்…

அந்த நீண்ட ஓடை எங்கு முடிகிறது – எங்கு தொடங்குகிறது என்று தெரியாமலே இருந்தது. அவ்வளவு நீீளத்திற்கு விரிந்து பரந்து கிடந்தது.

சலக் சலக் என்று மனிதர்கள் தேடிக்கொண்டு பார்த்துக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும் அந்த இடத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

மாரிமுத்துவின் விரலை விட்டுவிட்ட இரண்டு குழந்தைகளும் நிறைய தண்ணீர் வராத ஓடையின் ஓரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

இரண்டு குழந்தைகளும் ஓடையின் ஓரத்தில் நடந்து போய்க்கொண்டு இருக்கும்போது, போகாதீங்க இடி விழுந்துரும். போகாதீங்க என்று பெரியவர்கள் பயன்படுத்த அந்த குழந்தைகள் கரையின் ஓரத்தில் விட்டு நடையில் நடக்கத் தொடங்கினர். அப்படிப் போகும்போது மாரிமுத்துவின் இளைய குழந்தைக்கு கரையோரத்தில் ஏதோ தென்பட்டது..

அதைப் பார்த்த இரண்டு குழந்தைகளும் அங்கே போக மாட்டேன். மூடிய மணலின் வெளியே ஏதோ தெரிந்து கொண்டிருந்தது…. அந்தக் குழந்தை அந்த மாட்டின் வாலை பிடித்து இழுக்க, அது மணலுக்குள் புதைந்து வெளியே தெரியாமல் இருந்தது…

அம்மா அது நம்ம மாட்டு வாலு என்று குழந்தைகள் இருவரும் கத்த தேடிக் கொண்டிருந்த ஊரு சனமெல்லாம் குழந்தைகள் கத்தும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

அங்கே வந்து பார்த்தபோது மாட்டு வண்டிமீது அந்த இடிகரை விழுந்து மாடும் மாரிமுத்துவும் மாட்டு வண்டியும் புதைந்து போய்க் கிடந்தைதை அவர்களால் உணர முடிந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஆளுக்கு ஒரு பக்கமாக மண்ணை அப்புறப்படுத்த, மாடும் வண்டியும் மாரிமுத்துவும் பிணமாக வெளியே வந்தார்கள்..

மாரிமுத்து மனைவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை பித்துப் பிடித்தவள் போல நின்று கொண்டிருந்தாள்.

அவளுக்கு இதற்கு முன்னால் இருந்த அழுகை இப்போது இல்லை… அவளின் மனம் ஏதோ ஒன்றில் நிலைத்து நின்று கொண்டது…

ஒரு பைத்தியக்காரி போல பார்த்துக் கொண்டே இருந்தாள்.

மாரிமுத்துவின் குழந்தைகள்

அப்பா அப்பா என்று அழுது கொண்டிருந்தனர்.

ஊரு சனமெல்லாம் மாட்டு வண்டியில் மணல் போட்டு மூடிக்கிடந்த இரண்டு மாடுகளையும் மாரிமுத்துவை அப்புறப்படுத்த தூக்கிக் கொண்டிருந்தார்கள்.

என்ன பொழப்பு இது? இந்த ஒரு மாட்டு வண்டி வைத்துத்தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான் மாரிமுத்து

கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு, துப்பாக்கி எடுத்தவனுக்கு அதுல தான் சாவுன்ன மாதிரி, மாட்டுவண்டி எடுத்த மாரிமுத்து மாட்டுவண்டியில் செத்துப் போயிட்டாேனே

கடவுளே…. இது பாவம். பொழப்புக்காக இந்த மாட்டு வண்டி வச்சிருந்தான். அதுேவே எமனா வந்திருச்சே.. இந்த மாதிரி ஒரு இழப்பு யாருக்கும் வரக்கூடாது என்று ஊரு சனமெல்லாம் மாரிமுத்துவை பற்றி பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள்.

மாரிமுத்துவின் பிணம் இன்னொரு மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டு, செத்துக்கிடந்த மாரிமுத்துவின் இரண்டு மாடுகளும் இன்னொரு வண்டியில் பிணமாக ஏற்றப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.

முன்னால் இருந்த மாரிமுத்து வந்த மாட்டுவண்டித் தடத்தில் தடம் மாறாமல் மாரிமுத்துவின் பிணமும் செத்த 2 மாடுகளும் கொண்டு போகப்பட்டன

சன்னமாக தூறல் விழுந்து கொண்டிருந்தது . குழந்தைகள் அழுது கொண்டே வந்தார்கள். மாரிமுத்துவின் மனைவி பைத்தியம் பிடித்தவள் போல எதையோ வெறித்துப் பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார்கள் வந்த ஆட்கள்.

அந்தக் குழந்தைகளைப் பிடித்து ஒருவர் சொன்னார், இந்த மாட்டு வண்டி வச்சு, எப்படியாவது என் பிள்ளைகளை பெரிய எடத்துக்கு கொண்டு போவேன். பிள்ளைகளை விட மாட்டேன். ஒன்ன கலெக்டராக்குவேன். டாக்டர் ஆக்குவன்” என்று மாரிமுத்து சொன்னதை ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்படிக் கனவுகளோடு வாழ்ந்த மனுஷன் இப்படி செத்துட்டாரு? ஒவ்வொரு மனிதனுடைய ஆசைகளும் பெருசா இருக்கு. ஆனா அது நிறைவேறாம போகுது. மாரிமுத்து ஆசையும் கூட இப்ப நிறைவேறாம போயிருச்சு என்று ஆட்கள் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள் .

மாரிமுத்துவின் குழந்தைகள் செய்வதறியாது அழுது கொண்டே போனார்கள்… ஆனால் மாரிமுத்துவின் ஆசைகள், இரண்டு பிள்ளைகளையும் கலெக்டராகவும் டாக்டராகவும் ஆக்க வேண்டும் என்பது.

கனவுகள் கரைந்து போயிருந்தன… ஏழைகளின் ஆசை எல்லாம் வெறும் பேச்சில் தான் முடிஞ்சு போகுது.. கடவுளுக்கு தான் வெளிச்சம் என்று ஆட்கள் சொல்ல மாரிமுத்துவின் பிணத்திற்குப் பின்னால்…

அந்த குழந்தைகள் அழுது கொண்டே வந்து கொண்டிருந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *