விரிந்து பரந்த வீட்டில் எத்தனையோ அறைகள் இருந்தாலும் வேணுகோபாலுக்கு மாடி அறை தான் மரியாதையான அறையாக இருந்தது.
முழுவதும் குளிரூட்டப்பட்ட வீட்டில் இருப்பதைவிட மொட்டை மாடியில் இருக்கும் மாடி அறை தான் அவருக்கு மைதானம்.
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் மாடி அறைக்கு ஓடுவார். குடும்பத்துடன் இருப்பதைவிட அவர் மாடி அறையில் இருப்பது தான் அதிகம். அந்த மாடி அறை பழைய பொருட்களைப் பாதுகாக்கும் இடமாகவும் தேவையில்லாத புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடமாகவும் இருந்தது. கீழே வீட்டில் அவர் இல்லை என்றால் மாடி அறையில் தான் இருப்பார் என்று எல்லோரும் நம்புவார்கள். அது போல தான் அவரும் அந்த மாடி அறையில் இருப்பார் .மனைவி அம்பிகா,மகன் சதீஷ்,மகள் பிரியங்கா, என்று மனைவி, பிள்ளைகள் இருந்தாலும் அவர் அந்த மாடி அறையை விட்டு மாறுவதே இல்லை. எத்தனையோ பேர் வாடகைக்கு கேட்டு வந்தாலும் அந்த அறையை அவர் தருவதற்குச் சம்மதிப்பதில்லை.தாங்கள் குடியிருக்கும் வீட்டிலுள்ள மற்ற வீடுகளை எல்லாம் வாடகைக்கு விட்டிருந்தாலும் மாடி அறை மட்டும் வாடகைக்கு விடுவதை அவர் ஒப்புக் கொள்வதே இல்லை .
” ஏங்க இந்த இடம் சும்மா தானே கிடக்கு? அத வாடகைக்கு விடலாமே? பழைய பொருள்கள போட்டு தான வச்சிருக்கிறோம். அதனால எந்த பிரயோஜனமும் இல்ல. அதச் சுத்தப்படுத்தி வாடகைக்கு விட்டோம்னா ஒரு இருபது ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதை ஏன் வேண்டாம்னு சொல்கிறீங்க? என்று மனைவி அம்பிகா கேட்டாலும், அதற்கு பதில் எதுவும் சொல்ல மாட்டார்,வேணுகோபால் தலையை மட்டுமே ஆட்டுவார்.
” நீங்க போயி தெரியாம அந்த மாடி அறையில தண்ணியடிக்கிறதுக்கும் சிகரெட் குடிக்கிறதும் தான் அதை யூஸ் பண்றீங்கன்னு நினைக்கிறேன் அப்படித்தானே என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டாள் வேணுகோபாலின் மகள் பிரியங்கா.
” அப்படி எல்லாம் இல்லம்மா .நான் சிகரெட், தண்ணி அடிச்சு ரொம்ப நாளாச்சு .அதெல்லாம் செய்றதில்ல “
” அதெல்லாம் பொய் சொல்லாதீங்க. அப்பப்ப நீங்க மாடி அறையில இருந்து கீழே வரும் போது தம்மும் தண்ணியும் நாத்தம் எடுக்கத் தான் செய்யும் என்று மனைவியும் சேர்ந்து கொண்டு பேசினாள்.
ஆனால் அந்த மாடி அறையின் மகிமை வேணுகோபாலுக்கு மட்டும் தான் தெரியும்.
” நீங்க அந்த மாடி அறைக்கு அடிக்கடி போறது புடிக்கலப்பா. கீழ குடும்பத்தோடு இருக்க வேண்டியதுதானே? ஏன் தனியா போய் உட்கார்ந்துக்கிறீங்க என்று வேணுகோபாலின் மகன் சதீஷ் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார்.
சில நேரங்களில் மாடி அறையைப் பூட்டி சாவியை எங்காவது ஒளித்து வைத்திருந்தாலும் இன்னொரு சாவி வைத்துக்கொண்டு திறந்து ஜாலியாக அமர்ந்திருப்பார் வேணுகோபால்.
அப்படி என்னதான் அந்த மாடி அறையில் இருக்கோ? எப்ப பாத்தாலும் அங்கேயே போய் உட்கார்ந்துகிறீங்க. குடும்பத்துல இருக்கிறவங்க கூட இருக்கிறத விட நீங்க இந்த மாடி அறையில இருக்கிறது அதிக நேரம். அத இழுத்துப் பூட்டி சீல் வச்சாத்தான் அங்க போகாம இருப்பீங்க போல? என்று குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் கத்தி பார்த்தார்கள். ஆனால் வேணுகோபால் அசைவதாகத் தெரியவில்லை. அவர் இல்லாத நேரம் பார்த்து மாடி அறைக்குச் சென்ற வேணுகோபாலின் மனைவி திடுக்கிட்டாள். தன் மகன்,சதீஷ் மகள் பிரியங்கா அத்தனை பேரையும் மாடிக்கு அழைத்து வந்து காட்டினாள்
” இப்படி இருக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல. அதுதான் அவர் அந்த மாடி அறையை வாடகை விடாம வச்சிருந்துருக்காரு. நாம கூட அப்பாவ என்னமோ நினைச்சுட்டோம். தப்பு நம்ம மேல தான் இருக்குது. இவ்வளவு ஈரமுள்ள மனுஷன நமக்கு தெரியாம போச்சே ?” என்று அம்பிகா ஒரு பக்கம் குமுற ,
” ஆமாம்மா நான் கூட அப்பா தம்மடிக்கிறதுக்கும் தண்ணி அடிக்கிறதுக்கும் தான் இந்த மாடி அறையைப் பயன்படுத்துறாருன்னு நெனச்சிட்டு இருந்தேன் .அதுக்கு எதிரா இருக்கே? என்று மகள் பிரியங்காவும் சொல்ல சதீசுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் கண்கள் பணித்தன.
” சரி நாம இங்க வந்தது அப்பாவுக்கு தெரிய வேண்டாம் .கீழ இறங்கி போயிடலாம் “என்று சதீஷ் சொல்ல அம்பிகா , பிரியங்கா மூவரும் அந்த இடத்தை விட்டு கீழே இறங்கினார்கள்.
அலுவலகம் முடிந்து, வழக்கம் போல் , வீட்டின் கீழே கொஞ்ச நேரம் இருந்து விட்டு சாப்பிட்டு விட்டு உடனடியாக மாடி அறைக்குக் கிளம்பினார் வேணுகோபால்.
“எப்போதும் ஏன் மாடிக்கு போறீங்க அங்க என்ன இருக்கு? கீழ வீட்ல இருக்க வேண்டியதுதானே? என்று கேட்கும் மனைவியும் பிள்ளைகளும் அன்று வேணுகோபாலைத் திட்டவில்லை. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
” என்ன ஏதும் பேசாம இருக்குறாங்க” என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டு மாடி அறைக்குச் சென்றார், வேணுகோபால்.
அவர் பின்னாலேயே வந்த அம்பிகா, சதீஷ், பிரியங்கா மூவரும் வேணுகோபாலைப் பார்த்து
” எங்களை மன்னிச்சிருங்க’’ என்றார்கள்.
“உங்களையும் நான் ஏன் மன்னிக்கணும்? நீங்க தப்பு ஏதும் செய்யலையே ? ” என்று வேணுகோபால் சொல்ல.
“இல்லங்க நீங்க இந்த மாடி அறைக்கு ஏன் வர்றீங்க. தண்ணி அடிக்கிறதுக்கும் தம்மடிக்கிறதுக்கும் தான் வர்றீங்கன்னு நாங்க தப்பா நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா இங்க வந்து பாத்த பிறகு தான். உண்மை தெரியுது ” என்று அம்பிகா சொல்ல
” இதெல்லாம் பெரிய விஷயமா அம்பிகா. நாம ஒரு வீட்டில இருக்கிற பிள்ளைகள எப்படி பாத்துக்கிறோமோ, அப்படித்தான் நம்ம வீட்டுல கூடு கட்டி இருக்கிற இந்தக் குருவிகளையும் பறவைகளையும் பாத்துக்கணும். இதனால தான் இத உங்ககிட்ட சொல்லல. இதுகளுக்கு உணவு எடுத்து வந்து கொடுப்பேன்.நல்லா பாத்துக்கிருவேன். இந்த எடத்த நாம வாடகைக்கு விட்டாலோ இல்ல வேற எதுக்கு விட்டாலும் அவங்க எல்லாம் இந்த குருவி, பறவைகளோட கூட்ட கலைச்சி விட்டுடுவாங்க. இங்க பாரு எவ்வளவு பறவைகள் இருக்கு”
என்று வேணுகோபால் சொன்ன போது, அந்த மாடி அறை சன்னல், விட்டம், நிலைக்கதவிற்கு மேலே குருவிகள், பறவைகள் கூடு கட்டிக் குஞ்சு பொரித்து கிக்கிக் கிக்கி என்று கத்திக் கொண்டிருந்தன.
” நான் இதுகள பாத்து ரசிக்கிறதுக்கு தான் மேல வருவேன். நான் வந்ததும் அந்த பறவைகள் என் தோள்ல வந்து உட்கார்ந்துக்கிரும் ” பிறந்ததிலிருந்து அந்த பறவைகளை நான் பாத்துட்டு தானே இருக்கேன். என்னைய ஒரு நண்பராத் தான் அந்த பறவைகள் பாக்குது” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது ,ஆட்கள் இருக்கிறார்கள் என்று பயம் கூட இல்லாமல் பறவைகள் பறந்து வந்து வேணுகோபாலின் தோளில் அமர்ந்து, அவர் காதில் கிக்கிக் கிக்கி என்று கத்தின.
“ஒரு கோடி ரூபா கொடுத்தாலும் இந்த மாடி அறையை நாம வாடகை விடக் கூடாதுங்க .இதைவிட பெரிய சந்தோஷம் நமக்கு வேற எதுவுமே இல்ல .நீங்க இங்கேயே இருங்க” என்று சொல்லிவிட்டு அந்த பறவைகளையும் பார்த்துவிட்டு கீழே இறங்கினார்கள் அம்பிகா,சதீஷ் பிரியங்கா.
மறுநாள் அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்தார் வேணுகோபால். அம்பிகாவும் பிள்ளைகளும் வீட்டில் இல்லாததைப் பார்த்து
“எங்க போயிட்டாங்க ஆளக் காணோமே? மனைவி பிள்ளைகளைக் கூப்பிட்டார். அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியாத வேணுகோபால் அவர்களைக் கூப்பிட்டுக் கொண்டே மாடிப்படியில் ஏறி மாடி அறைக்கு வந்தார். வேணுகோபாலுக்கு முன்பாகவே அந்தப் பறவைகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள் அம்பிகாவும் சதீஷும் பிரியங்காவும் . இதைப் பார்த்ததும் வேணுகோபாலுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது .பறவைகள் கிக்கி என்று வேணுகோபாலைப் பார்த்துக் குரல் கொடுத்தன.
” சாப்பிடுங்க…. சாப்பிடுங்க….. என்று தலையாட்டினார் வேணுகோபால்.அத்தனை பறவைகளும் தலையாட்டிக்கொண்டே சாப்பிட்டன.
அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியைத் தந்தது அந்த மாடி அறை.